Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Quotes’

The man behind ‘Anand’ & ‘Little Anand’: G Umapathy – Rajaraja Chozhan to Agni natchathiram

Posted by Snapjudge மேல் மே 5, 2008

திரைப்பட வரலாறு 913
ஜி.உமாபதி உருவாக்கிய “ராஜராஜ சோழன்”
தென்னாட்டின் முதல் `சினிமாஸ்கோப்’ படம்

சிவாஜிகணேசன் நடித்த “ராஜராஜசோழன்”, தென்னாட்டின் முதல் சினிமா ஸ்கோப் படம். இதைத் தயாரித்த ஜி.உமாபதி, உழைப்பால் உயர்ந்த தொழில் அதிபர்.

சென்னையில், ஒரு எளிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் உமாபதி. தந்தை பெயர் கோவிந்தசாமி முதலியார். பள்ளிக்கூடம் சென்று படிக்க விரும்பினாலும், ஏழ்மை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

குழந்தைத் தொழிலாளி

12-வது வயதில், ஒரு அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்தார். கடினமாக உழைத்தார். அச்சுத் தொழில் நுட்பங்களை நன்கு கற்றுக்கொண்டார்.

பிறகு சொந்தமாக அச்சகம் தொடங்கினார். அதுதான் “உமா அச்சகம்.” பிறகு, அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கினார். அதன் மூலம், வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்தார்.

அரசியல்

இளைஞர் உமாபதிக்கு அரசியலிலும் ஆர்வம் வந்தது. காந்தி, நேதாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடைய அரசியல் பணி கள் அவரை ஈர்த்தன. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தொடங்கிய தமிழரசு கழகத்தில் சேர்ந்து, அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவரானார். திருத்தணியை மீட்க நடந்த போராட்டத்திலும், தேவிகுளம் பீர்மேடு மீட்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு, 2 முறை சிறை சென்றார்.

“உமா” இலக்கிய இதழ்

இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட உமாபதி, “உமா” என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தினார்.

வண்ண ஓவியங்கள் வரைவதில் தனிச்சிறப்பு பெற்ற கே.மாதவன் வரைந்த படங்களையே தொடர்ந்து அட்டைப் படங்களாக வெளியிட்டார்.

நவீன தியேட்டர்

கட்டிடக் கலையில் ஆர்வம் மிக்கவரான உமாபதி, சினிமா தியேட்டர் ஒன்றை நவீன வடிவமைப்பில் அமைக்க விரும்பினார். இதற்காக அவர் மும்பை சென்றார். அங்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நவீன வடிவமைப்பில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட “மராத்தா மந்திர்” தியேட்டரை பார்த்து, அதற்கான செலவு முதலான விவரங்களை கேட்டறிந்தார்.

சிவாஜிகணேசனும், உமாபதியும் நல்ல நண்பர்கள். சென்னையில் ஒரு நவீன திரையரங்கம் கட்டவேண்டும் என்ற தன் விருப்பத்தை உமாபதியிடம் சிவாஜி தெரிவித்தார். தியேட்டரை அமைக்கும் பொறுப்பை உமாபதி ஏற்றார்.

சாந்தி தியேட்டர்

அதன்படி கட்டப்பட்டதுதான், அண்ணா சாலையில் உள்ள “சாந்தி தியேட்டர்.” சினிமாஸ்கோப் படங்களை திரையிடுவதற்கென்றே அகன்ற திரை அமைக்கப்பட்டது. 1,212 பேர் அமர்ந்து படம் பார்க்க முடியும். `பால்கனி’யில் மட்டும் 419 பேர் உட்காரலாம்.

இந்த பிரமாண்டமான “ஏசி” தியேட்டரை, பெருந்தலைவர் காமராஜர் 1960-ல் திறந்து வைத்தார்.

இதுபற்றி உமாபதியின் மகன் `இளம்பாரி’ கருணாகரன் கூறியதாவது:-

“சிவாஜி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் சாந்தி தியேட்டரை என் தந்தை கட்டினார். சிலர், `இந்த திரை அரங்கை கட்டிய உமாபதி, அதை நடத்த முடியாமல் சிவாஜிக்கு விற்றுவிட்டார்’ என்று கூறினார்கள்.

இது என் தந்தையை உசுப்பி விட்டது. தனக்கு என்று ஒரு தியேட்டரை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் விளைவாக, அண்ணா சாலையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் கட்டப்பட்டதுதான் “ஆனந்த் தியேட்டர்.” இதை, 1963-ல் பெருந்தலைவர் காமராஜர் திறந்து வைத்தார்.

இதுதான், தென்னாட்டில் கட்டப்பட்ட முதலாவது “70 எம்.எம்” தியேட்டர்.

ஆனந்த் தியேட்டர் வளாகத்திலேயே, “லிட்டில் ஆனந்த்” என்ற மற்றொரு திரையரங்கத்தையும் கட்டினார்.

இதில் முதன் முதலாக திரையிடப்பட்ட படம் “ஆராதனா.” ராஜேஷ் கன்னா – சார்மிளா டாகூர் நடித்த இந்த இந்திப்படம் 100 வாரங்கள் ஓடி, சாதனை படைத்தது.”

இவ்வாறு கருணா கரன் கூறினார்.

ராஜராஜசோழன்

உமாபதிக்கு அரசியல் தலைவர்களுடன் மட்டுமின்றி, திரைஉலகக் கலைஞர்களிடமும் நட்பு உண்டு.

எனவே, திரைப்படம் தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. தான் தயாரிக்கும் படம் வணிக ரீதியான படமாக இருக்கக்கூடாது, தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டும் கலைப்படைப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படி உருவானதுதான் “ராஜராஜசோழன்.” தென்னாட்டின் முதல் “சினிமாஸ்கோப்” படம்.

இந்த காலக்கட்டத்தில், இந்தி நடிகை மீனாகுமாரி தயாரித்து நடித்த “பகீஜா” என்ற இந்தி சினிமாஸ்கோப் படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. உமாபதி தன் மகன் கருணாகரனை மும்பைக்கு அனுப்பி, சினிமாஸ்கோப் படத்தின் தொழில் நுட்பங்களை அறிந்து வரச்செய்தார்.

பிரபல எழுத்தாளர் அரு.ராமநாதன் கதை-வசனம் எழுதி, டி.கே.சண்முகம் சகோதரர்களால் நாடகமாக நடிக்கப்பட்டு வந்ததுதான் “ராஜராஜசோழன்.”

திரைப்படத்துக்கான திரைக்கதை – வசனத்தையும் அரு.ராமநாதன் எழுதினார். சிவாஜிகணேசன் ராஜராஜசோழனாக நடித்தார்.

மற்றும் டி.ஆர்.மகாலிங்கம், முத்துராமன், சிவகுமார், எம்.என்.நம்பியார், எஸ்.வரலட்சுமி, லட்சுமி ஆகியோரும் நடித்தனர். படத்தை ஏ.பி.நாகராஜன் டைரக்ட் செய்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்தார்.

பெரியகோவில்

தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் ராஜராஜசோழன். எனவே, கோவில் கட்டப்படும் காட்சியை பிரமாண்டமாக எடுக்க உமாபதி விரும்பினார்.

ஆனால் கோவிலுக்குள் படப்பிடிப்பை நடத்த மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

எனவே, வாசு ஸ்டூடியோவில் பிரமாண்டமான “செட்” போட்டு, அக்காட்சியை படமாக்கினார்கள்.

“ராஜராஜசோழன்” சென்னையில் ஆனந்த் தியேட்டரில் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள தியேட்டர்களில், “சினிமாஸ்கோப்” படங்களை திரையிடும் வசதி அப்போது இல்லை. இதன் காரணமாக, உமாபதியே பல நகரங்களுக்கு ஆட்களை அனுப்பி தன் சொந்த செலவில் தியேட்டர்களில் திரை, “லென்ஸ்” ஆகியவற்றை மாற்றி அமைத்து படத்தைத் திரையிட்டார்.

“ராஜராஜசோழன்” சென்னையில் நூறு நாட்கள் ஓடியது என்றாலும், மொத்தத்தில் கணக்கு பார்த்தபோது லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை.

வணிக ரீதியில் வெற்றி பெறாவிட்டாலும், தமிழ்நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சிறந்த படத்தைத் தயாரித்ததில் பெருமை அடைந்தார், ஜி.உமாபதி.

திரைப்பட வரலாறு :(914)
மணிரத்னம் இயக்கிய “அக்னி நட்சத்திரம்” படத்தில் உமாபதி நடித்தார்!

பிரபல டைரக்டர் மணிரத்னம் இயக்கிய “அக்னி நட்சத்திரம்” படத்தில் ஜி.உமாபதி நடித்தார்.

இந்தப்படத்தில் பிரபு, கார்த்திக் இருவரும் இணைந்து நடித்தனர்.

சிவகாமியின் சபதம்

“ராஜராஜசோழன்” படம் வெளிவந்தபின், எம்.ஜி.ஆரும், உமாபதியும் சந்தித்தனர். இதுபோன்ற பிரமாண்டமான சரித்திரப்படத்தில் நடிக்க தனக்கு ஆர்வம் இருப்பதாக எம்.ஜி.ஆர். கூறினார்.

“கல்கி”யின் “சிவகாமியின் சபதம்” கதையை படமாக்குவது பற்றி பரிசீலனை நடந்தது. ஆனால், இந்தத் திட்டம் நிறைவேறவில்லை.

மணிரத்னம் அழைப்பு

உமாபதி கம்பீரத்தோற்றம் உள்ளவர். பேசுகிற முறையிலும் தனி பாணி இருந்தது.

பட அதிபர் `ஜிவி’, டைரக்டர் மணிரத்னம் ஆகியோரின் தந்தையான ரத்னம் அய்யரும், உமாபதியும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம்.

அப்போது உமாபதியை மணிரத்னம் பார்த்திருக்கிறார். தனது “அக்னி நட்சத்திரம்” படத்தில் உமாபதியை நடிக்க வைக்க விரும்பினார்.

தன் நண்பரின் மகன் என்பதாலும், பெரிய டைரக்டர் என்பதாலும், மணிரத்னத்தின் கோரிக்கையை உமாபதியால் தட்ட முடியவில்லை. நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். என்றாலும் சில நிபந்தனைகளை விதித்தார். “நான் எப்போதும் அணிகிற வெள்ளை வேட்டி-சட்டையில்தான் நடிப்பேன். எந்தவித மேக்கப்பும் போட்டுக்கொள்ள மாட்டேன். இதற்கு சம்மதித்தால், நடிக்கிறேன்” என்றார், உமாபதி.

அதற்கு மணிரத்னம் சம்மதித்தார்.

படத்தில், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் உமாபதி பேசுவதுபோல் ஒரு காட்சி வரும். அப்போது, “நானும் குடும்பஸ்தன்தான். எனக்கு 6 பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் நல்லவன். என்னைக் கெட்டவனாக மாற்றிவிடாதே” என்பார்.

இது, டைரக்டர் எழுதிக் கொடுத்த வசனம் அல்ல; உமாபதி அவராகப் பேசியது! படத்துக்குப் பொருத்தமாக இருந்ததால், மணிரத்னம் “ஓகே” சொல்லிவிட்டார்.

பிரபு, கார்த்திக் இணைந்து நடித்த “அக்னி நட்சத்திரம்”, வெற்றிப்படமாக அமைந்தது. இதுபற்றி உமாபதி மகிழ்ச்சி அடைந்தார்.

ஆயினும், உமாபதி நடித்தது வில்லன் போன்ற பாத்திரம். ஆதலால், அவருடைய மகள்கள் வருத்தம் அடைந்தனர். அதற்கு, “அது வெறும் நடிப்புதானே” என்று உமாபதி சமாதானம் கூறினார்.

ஆனாலும், தன் நண்பர்களிடம் பேசும்போது, “சினிமாவில் நடித்ததில் எனக்கு பாதி மகிழ்ச்சி; பாதி வருத்தம். ஒரு வில்லன் போல நடிக்க வேண்டியிருந்ததில் வருத்தம்; ஒரு படத்தில் முகம் காட்டிய நிலையிலேயே எல்லோருக்கும் தெரிந்தவனாகி விட்டது மகிழ்ச்சி. நான் எவ்வளவோ சிரமப்பட்டேன். போராட்டங்களில் கலந்து கொண்டேன்; சிறை சென்றேன்; திரையரங்குகள் கட்டினேன்; படம் எடுத்தேன்; பல அரசியல் தலைவர்களுடன் பழகியிருக்கிறேன். பத்திரிகை நடத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் கிடைக்காத புகழும், அடையாளமும் ஒரு படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்துவிட்டது” என்று கூறுவது வழக்கம்.

எதிர்பார்க்கக்கூடாது

கடைசிவரை, யாரையும் எதிர்பார்த்து வாழக்கூடாது என்பது உமாபதியின் கொள்கை. பிள்ளைகளிடம் கூட எதிர்பார்த்து நிற்கக்கூடாது என்பார்.

அவர் கடைசியாக மருத்துவமனைக்கு செல்லும்போதுகூட, ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னதாகவே செலுத்திவிட்டுத்தான் `அட்மிட்’ ஆகியிருக்கிறார். இதுபற்றி குடும்பத்தினரிடமும் சொல்லவில்லை. அவர் மறைவுக்குப் பின்னர், மீதித் தொகையை ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுப்பி வைத்தது. அப்போதுதான் குடும்பத்தினருக்கே தெரியும்.

கருணாகரன்

உமாபதி மறைக்குப் பிறகு ஆனந்த் தியேட்டரை நிர்வாகித்து வந்த அவர் மகன் உ.கருணாகரன், தியேட்டருக்கு பதிலாக வணிக வளாகம் அமைப்பதில் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

“டெலிவிஷன் வந்த பிறகு, சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் வழக்கம் பொதுமக்களிடம் குறைந்து விட்டது. சினிமா படங்களைவிட, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை (சீரியல்) விரும்பிப் பார்க்கிறார்கள்.

இதன் காரணமாக சனி, ஞாயிறு தவிர இதர 5 நாட்களும் பெரும்பாலான தியேட்டர்கள் நஷ்டத்தில்தான் நடக்கின்றன.

வணிக வளாகம்

எனவே தியேட்டருக்கு பதிலாக, வணிக வளாகம் கட்டுகிறோம்.

வணிக நிறுவனங்களுடன், அதிநவீனமான சிறிய தியேட்டர்களையும் அமைக்க எண்ணியுள்ளோம். வணிக வளாகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போவார்கள் என்பதால், சிறிய தியேட்டர்கள் நஷ்டம் இல்லாமல் செயல்பட முடியும்.”

இவ்வாறு கருணாகரன் கூறினார்.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | 1 Comment »