Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Publishers’

Interview with Sirpi Award winner Kavinjar Sugumaran – Dinamani

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008

காகிதம் காலியாக…உண்மையை எழுதுகிறேன்!

ஜி.மீனாட்சி

இந்த ஆண்டுக்கான (2008) “சிற்பி இலக்கிய விருது’ பெற்றுள்ளார் கவிஞர் சுகுமாரன். கவிஞர் என்ற முதன்மை முகத்துடன், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர் என்ற பன்முக அடையாளம் கொண்டவர் சுகுமாரன்.

நவீன தமிழ்க் கவிதையில் தனக்கென தனித்த மொழி நடையும், சொற்செட்டும் கொண்டவர். வருணனைகள் அதிகமின்றி நதியின் இயல்பில் நகரும் படகுபோல் இயல்பாய், நேருக்கு நேராய் பேசக்கூடியதுபோல அமைந்தவை அவரது கவிதைகள்.

35 ஆண்டுகளாக சுகுமாரன் பெரும்பாலும் பென்சிலால் எழுதி வந்துள்ள கவிதைகளின் தொகுப்பான “பூமியை வாசிக்கும் சிறுமி’ என்ற புத்தகமே அவருக்கு சிற்பி இலக்கிய விருதைப் பெற்றுத் தந்துள்ளது. விருது பெறுவதற்காக பொள்ளாச்சி வந்த கவிஞர் சுகுமாரனிடம் பேசியதிலிருந்து…

உங்கள் எழுத்துலகப் பிரவேசம் எந்த வயதில் நிகழ்ந்தது?.

பள்ளி செல்லும் பருவத்தில் எல்லோரையும்போல் கிறுக்குத்தனமாக எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். பிரசுரமான முதல் கவிதை என்றால், என்னுடைய 16-வது வயதில் “கண்ணதாசன் இதழில்’ வெளிவந்த கவிதையைக் கூறலாம். தொடர்ந்து “தாமரை’, “கணையாழி’, “காலச்சுவடு’ போன்ற இதழ்களிலும் எனது கவிதைகள், சிறுகதைகள் வெளிவந்தன. ஆரம்ப காலத்தில் என்னுடைய தமிழாசிரியர்கள் என் கவிதைகளைப் படித்துப் பார்த்து ஊக்குவித்தார்கள்.

உங்களின் முன்னோடியாக யாரைக் கருதுகிறீர்கள்?

இலக்கியத்தை விரும்பும் எல்லோரையும்போல சுப்பிரமணிய பாரதியார்தான் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். புதுமைப்பித்தனின் படைப்புகளில் மனதைப் பறி கொடுத்திருக்கிறேன். சுந்தரராமசாமி, பிரமிள், விக்கிரமாதித்தன், கலாப்ரியா ஆகியோரின் படைப்புகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. பலரது படைப்புகளும் என்னைபப் பாதித்திருந்தாலும், எனக்குள் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும், என்னுடைய படைப்புகள் யாருடைய சாயலும் இல்லாதவை. எனக்கென தனி மொழி, என் அனுபவத்தின் வெளிப்பாடு போன்றவையே என் கவிதைகளில் நிறைந்திருக்கின்றன. எல்லோரும் செய்வதையே நாமும் செய்வோம் என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.

இதுவரை நீங்கள் எழுதியுள்ள படைப்புகள் பற்றி…

35 ஆண்டுகளாக நான் எழுதி வந்திருந்தாலும்கூட, குறைந்த எண்ணிக்கையிலான கவிதைகளையே எழுதியுள்ளேன். 4 பக்கத்தில் சிறுகதை எழுதுவதற்குப் பதிலாக ஒரே கவிதையில் என் கருத்துக்களைச் சொல்லிவிடலாம் என்பதால், கவிதைக்கே நான் முன்னுரிமை கொடுத்தேன். “உயிர்மை’ சிற்றிலக்கிய இதழில் “தனிமையின் வழி’ என்ற தொடர் எழுதியுள்ளேன். நிறைய நூல்களை மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன். மலையாளத்தின் மூத்த கவிதாயினி சுகதகுமாரி முதல் புதிய தலைமுறைக் கவிதாயினி கவிதா பாலகிருஷ்ணன் வரை 10 பெண் கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து “பெண் வழிகள்’ என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளேன். பாப்லோ நெரூடா கவிதைகள் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். உலகக் கவிஞர்கள் எட்டு பேரைப் பற்றி “கவிதையின் திசைகள்’ என்ற புத்தகமும் வெளிவந்துள்ளது.

என்னுடைய படைப்புகளும் இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பத்திரிகைத் துறையில் உங்கள் அனுபவம்…

குங்குமம் பத்திரிகையின் துணையாசிரியராகவும், சூர்யா தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராகவும் இருந்துள்ளேன். இரண்டு ஊடகங்களிலுமே எனக்கு நிறைய சுதந்திரம் இருந்தது. என் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லும், எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.

தற்போது கிழக்குப் பதிப்பகத்தின் நியூ ஹொரைசான் மீடியாவின் தலைமைப் பதிப்பாசிரியராக திருவனந்தபுரத்தில் பணியாற்றுகிறேன்.

எழுத்தாளனுக்கு பத்திரிகைப் பணி என்பது ஒரு சாபக்கேடாகக்கூட இருக்கலாம். நாம் சார்ந்திருக்கும் பத்திரிகையின் கொள்கைகளுக்கேற்ப எழுத வேண்டி இருக்கும். வர்த்தக அடிப்படையில் செயல்படுவது, பத்திரிகையின் குணம். அதற்கேற்ப பத்திரிகையாளன் இயங்க வேண்டி உள்ளது.

இதுவரை பெற்றுள்ள விருதுகள் பற்றி…

இப்போது கிடைத்துள்ள சிற்பி இலக்கிய விருதுதான் நான் பெற்ற முதல் விருது. என் படைப்புகளை நானே அனுப்ப, அதைச் சிலர் தேர்ந்தெடுத்து விருது தருவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. விருது தர விரும்புபவர்கள் தாங்களாகவே சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுத்து வழங்கும் விருதுதான், படைப்பாளிக்குக் கிடைக்கும் உண்மையான அங்கீகாரம் எனக் கருதுகிறேன்.

கவிதை எழுதுவது, மற்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்பது… எது கடினமானது?

சொந்தமாகக் கவிதை எழுதுவதுதான் என்னைப் பொருத்தவரை கடினமானது. உணர்வைச் சொற்களாக்குவதில் சிக்கல்கள் தோன்றலாம். மொழிக்குள் நான் இயங்கினால்தான் கவிதை பிறக்கும். எதையும் வலிந்து செய்ய முடியாது. மொழிபெயர்ப்பில் சிக்கல் இல்லை. அந்த மொழி நமக்குத் தெரிந்தால்போதும். கலாசார இடர்பாடுகள் வேண்டுமானால் சில நேரங்களில் வரலாம்.

பத்திரிகையாளன்… கவிஞன்… எப்படிச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறீர்கள்?

நான் பத்திரிகையாளன் ஆனது தற்செயல் நிகழ்வு. வாழ்வின் நோக்கமல்ல; பிழைப்பின் நோக்கம். ஆனால், பத்திரிகைத் துறையில் ஈடுபட்டபோது, அதற்குத் தகுதியான ஆள் நான் என்பதை உணர்ந்தேன். 12 வயதில் பிடித்த பேனா, அதே உற்சாகத்துடன், ஆர்வத்துடன் என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கிறது. எழுத்தைச் சார்ந்து நான் இருக்கிறேன். ஒரு முகம்தான் எனக்கு.

பத்திரிகைகளின் பக்கத்துக்குப் பக்கம் ஒரு காலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த புதுக் கவிதைகளில் தற்போது பெருத்த தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறதே..

1945-ல் பிச்சமூர்த்தி எழுதிய “காதல்’ என்ற கவிதைதான் தமிழின் முதல் புதுக்கவிதை வடிவம். அதற்கு முன்பு பாரதி, புதுமைப்பித்தன் எழுதியவை வசன கவிதைகளாகக் கருதப்பட்டன. ஆரம்பத்தில் புதுக்கவிதைக்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. எந்தப் புது விஷயமும் ஆரம்பத்தில் எதிர்ப்புக்குள்ளாவது இயல்புதானே? பின்னர் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பழங்காலக் கவிதைகள் செய்யுள் வடிவத்தில் இருந்தன. மொழியும், மொழி சார்ந்த இலக்கணமும் அவற்றுக்கு ஆதாரமாக இருந்தன.

காலப்போக்கில் புதுக்கவிதையை ஜனநாயகப்படுத்தும் முயற்சியாக அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

உண்மையில் புதுக்கவிதையில் புதிய பரிமாணங்கள் இப்போதுதான் பிறந்துள்ளன. பெண் குரல், தலித் குரல், குழந்தைகள் குரல் என்று பல குரல்கள் புதுக்கவிதையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

புதிய தலைமுறைக் கவிஞர்களில் யாருடைய படைப்பு தங்களை அதிகம் கவர்ந்துள்ளது?.

பெண் கவிஞர்கள் சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, குட்டிரேவதி, தேன்மொழி போன்றவர்களின் படைப்புகள் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளன. ஆண்களில் முகுந்த் நாகராஜன், ராஜ்குமார், அழகிய பெரியவன் என்று பெரிய பட்டியலே உள்ளது.

இளம் தலைமுறைக் கவிஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது…?

அறிவுரை என்று எதுவும் சொல்ல விரும்பவில்லை. என் அனுபவத்தை, என் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்வதற்கான பொது வெளிதான் -எழுத்து. சமூகத்தின் மீதான என் வருத்தத்தை, கோபத்தை என் எழுத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன், அவ்வளவுதான். பாரதியார் கூறியிருப்பதுபோல “தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்’ என்பதே என் கருத்தும். லத்தீன் அமெரிக்கக் கவிஞர் நிக்கோனர் பாஹாவின் கருத்துப்படி, காகிதம் காலியாக இருக்கிறது. அதில் உண்மையை எழுதி நிரப்புகிறேன். பொய்யை எழுத முடியாது அல்லவா?

உங்கள் சாதனையாகக் கருதுவது…?

35 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருவதே சாதனைதான். எல்லோரையும்போல சாதாரண வாழ்க்கைதான் என்னுடையதும். வாழ்க்கைச் சூழல்களுக்கிடையே கவிதை எழுதும் ஆர்வத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பதே சாதனைதானே?.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »