நீதிக்கு தடையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு தண்டனை
![]() |
![]() |
இந்தியாவில், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர், ஒரு வழக்கில் முறையான நீதி கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருந்ததாகக் கூறி, அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது.
புதுடெல்லியில் கடந்த 1999-ம் ஆண்டு பி.எம்.டபுள்யு. கார் ஒன்று மோதியதில், 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், காரை ஓட்டிச் சென்ற சஞ்சீவ் நந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், ஆயுத முகவர் சுரேஷ் நந்தாவின் மகன்.
அந்த வழக்கில், சுனில் குல்கர்னி என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
சஞ்சீவ் நந்தா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும், காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.யு. கானும் ஆஜரானார்கள்.
அவர்கள் இருவரும் சேர்ந்து, சுனில் குல்கர்னி இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியபோது, தொலைக்காட்சி சானல் ஒன்றின் சார்பில், அது ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே அந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கறிஞர்கள் ஆனந்தும், ஐ.யு. கானும் எதிரெதிர் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து, நீதி வழங்கப்படுவதற்குத் தடைக்கல்லாக செயல்பட்டதாக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரு வழக்கறிஞர்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் ஆஜராகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பதவியை அவர்களிடமிந்து பறிப்பதற்கும் நீதிமனறம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் இருவரும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.