“பொது நலனை பாதிக்கும் போராட்டம்’
வ. ஜெயபாண்டி
நாட்டில் சமீபகாலமாக நடைபெறும் போராட்ட சம்பவங்களைப் பார்க்கும்போது ஜனநாயக நாட்டில் மக்களாட்சித் தத்துவத்தில் நாம் வாழ்கிறோமா? என்ற சந்தேகம் எழுகிறது.
விலைவாசி உயர்வு, சிலை அவமதிப்பு, இடஒதுக்கீடு கோரிக்கை என எதுவானாலும் சம்பந்தப்பட்டவர்கள் “போராட்டம்’ என்ற பெயரில் சேதப்படுத்துவது பொதுச் சொத்துகளைத்தான்.
தமிழகத்தில் அரசியல் மோதலில் தொடங்கி அனைத்துப் பிரச்னைகளிலும் அதிகம் பாதிப்படைவது அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளே!
அதேபோல ராஜஸ்தான் மாநில “குஜ்ஜர்’ இன இடஒதுக்கீடு பிரச்னையில் அரசுப் பேருந்துகளையும், தண்டவாளங்களையும் கூச்சமின்றி பலர் சேதப்படுத்தியதை ஊடகங்கள் உலகறியச் செய்தன.
மறியல் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் அரசியல் கட்சியினர் நடத்தும் “பந்த்’துகளால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே!
கோரிக்கைகளை வலியுறுத்தவும், அதைப் பெறப் போராடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. அதே சமயம் பொது நலனைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்வது எந்த வகையில் நியாயம் என்பதைச் சம்பந்தப்பட்டோர் சிந்திக்க வேண்டும்.
நாடு நமது. அதிலுள்ளவை நம்முடையவை. அதைப் பாதுகாப்பதும், நமது தேவைக்கு ஏற்ப நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதுமே உண்மையான உரிமை. இதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
அரசு வாகனங்களை சேதப்படுத்துகிறோம். பின்னர், பயண நெரிசலைக் கவனத்தில் கொண்டு கூடுதல் வாகனங்களை இயக்குமாறு கோரிக்கை வைக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு?
தனது வீட்டில் சிறு கீறல் விழுந்தாலே பதறித் துடிக்கும் ஒருவர், கூட்டத்தோடு சேர்ந்து பொதுச் சொத்துகளை உடைத்து நொறுக்குவதற்கு எப்படி மனம் வருகிறது? கண்ணை விற்று சித்திரம் வாங்கி என்ன பயன்?
மக்களது தேவைக்காகப் போராடுகிறோம் என்ற பெயரில் மறியலில் ஈடுபடும்போது அவசரத் தேவைக்காகச் செல்லும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்களே? இதற்கு யார் பொறுப்பு?
அரசியல், சாதிய இயக்கங்கள் என்ற போர்வையில் சமூகத்தைப் பாதிக்கும் வகையில் நாமே நடந்து கொள்வது எந்த வகை நாகரிகம்?
இதற்காகவா நமது முன்னோர் கண்ணீரும், செந்நீரும் சிந்தி மக்களாட்சியை ஏற்படுத்தினார்கள்?
அன்னியர் ஆட்சியே மேல் என்று கருதும் நிலையை உருவாக்குவதற்காகவா, அரையாடை அணிந்து “மகாத்மா’ அகிம்சை வழியில் போராடினார்?
நாட்டில் நடைபெறும் போராட்டத்தில் பெரும்பாலானவை அரசியல் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள் நடத்துபவையாகவே உள்ளன.
இதனால் அவை ஒட்டுமொத்த சமூகத் தேவைக்கான போராட்டமாக அல்லாமல் குறிப்பிட்டோர் ஆதாயம் அடையத் தக்கவையாக அமைகின்றன.
சாதி, சமயம், அரசியல் என குறுகிய வட்டத்தில் குறுக்கிக்கொண்டு செயல்படுவதையே பலரும் நவீன அரசியல் யுக்தியாக கருதும் போக்கும் அதிகரித்து வருகிறது.
அப்படிப்பட்ட அமைப்புகளுக்குத் தலைவர்களாக வருவோர், தங்கள் பின்னால் அணிவகுப்போரை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிட்டு பயனடைகிறார்கள். அறிவுப்பூர்வமான வழிகாட்டல் அவர்களிடம் அரிதாகவே உள்ளது.
இதற்கு யார் காரணம்? ஆடை எடுப்பதற்குக் கூட கடைகளில் அதிக நேரம் செலவிடும் நாம், அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிந்திப்பதே இல்லை.
நமது ஜனநாயக உரிமையை ஐந்தாண்டுக்கு ஒருமுறை பயன்படுத்துவதில் பொறுப்புணர்வை காட்டுவதுமில்லை. “மட்டத்தில் நயம்’ என்ற நிலையிலே நமது அரசியல் தேர்வு உள்ளது.
இத்தகைய போக்கால் நாட்டு நலன் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. தனிநபர் நலன் முக்கியத்துவம் பெறுகிறது. பொது நல ஆர்வம், தியாகம் என்பதெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்களது பிதற்றல் என்றாகிவிட்டது.
“நாடு கெட்டுப்போய்விட்டது’ என ஆளாளுக்கு கவலைப்படுகிறோம். ஆனால் நம்மால் சமூகத்தை மேம்படுத்த என்ன செய்யமுடியும் என சிந்திக்கத் தவறுகிறோம்.
தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பதெல்லாம் சமூக மேம்பாட்டுக்கான ஏணிப்படிகள் என்பதை நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம்.
ஆம். யாரும் எதைப் பற்றியும் கவலைப்பட நேரமில்லை. இன்றைய பொழுது தமக்கு நல்லபடியாக கழிந்ததா? மனம் விரும்பியது கிடைத்ததா? அதற்காக எத்தகைய பழி பாவத்தையும் செய்யலாம் என எண்ணுகிறோம்.
ஆனால் நமது தவறுக்கெல்லாம் “பலிகடா’வாகப் போவது நமது எதிர்காலச் சந்ததியினர் என்பதை மறந்துவிடக் கூடாது.
“”தினை விதைத்தவன் தினை அறுப்பான் : வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்று நமது முன்னோர் சொன்ன முதுமொழியை இப்போது நினைவில் கொள்வதே எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்யும் நன்மையாக அமையும்.