Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Prema Nandhakumar’

சாருகேசி :: நதிகளை இணைக்கும் நாரத கான சபா!

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008

வருடா வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நாட்டிய விழா நடத்துவது நாரத கான சபாவின் குறிப்பிடத் தகுந்த பணிகளில் ஒன்று.

சென்ற ஆண்டு “úக்ஷத்திர பரதம்’ என்ற தலைப்பில் சுமார் ஒரு டஜன் புண்ணிய úக்ஷத்திரங்களை பரதநாட்டிய வடிவத்தில் பாடல்களுடனும், பஜன்களுடனும் நாட்டிய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சி போல, “தீர்த்த பரதம்’ என்ற தலைப்பில், ஏழு புண்ணிய நதிகளைப் பற்றி பரதநாட்டிய வடிவில் ஒரு வாரவிழா நடத்துகிறது நாரதகான சபா.

நடனக் கலைஞர்கள் நடனம்தான் ஆடமுடியும். நதி எங்கே தோன்றுகிறது. எங்கே முடிகிறது. வழியில் என்னென்ன úக்ஷத்திரங்கள் இருக்கின்றன. எந்தெந்தப் பாடல்கள் எந்தெந்தப் பின்னணிகளில் பாடப்பட்டன, புராண-சரித்திர விவரங்கள், தகவல்கள் என்னென்ன என்று அவர்கள் எப்படி அறிவார்கள் என்று கேள்வி எழும்.

இந்தச் சிக்கலைச் சமாளிக்க நாரதகான சபா ஏற்கெனவே ஒரு வழியைக் கண்டுபிடித்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வந்திருக்கிறது.

ஆராய்ச்சிக் கட்டுரைகளில் திறமையும், ஆர்வமும் உள்ள நிபுணர்களை அணுகி அவர்களிடம் நாட்டியக் கலைஞர்களுக்குத் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் கொடுத்து, நிகழ்ச்சிக்குத் தேவையான பாடல்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

இந்த வருடம் நாட்டியரங்கம் வழங்கிய “தீர்த்தபரதம்’ நிகழ்ச்சிக்கு இப்படிக் கைகொடுத்து உதவ முன்வந்தவர்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல; சொற்பொழிவாளர்களும்கூட.

லலிதா ராமகிருஷ்ணா கர்நாடக இசை பற்றிய நுணுக்கமான தகவல்களைச் சேகரித்து புத்தகங்கள் எழுதியவர். இவர் பிரம்மபுத்திரா நதி பற்றியும், அதன் கிளை நதிகள், வழித்தடங்களில் உள்ள கோயில்கள், அந்தப் பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் பரம்பரை பாடல்கள் என்று ஓர் ஆராய்ச்சியே செய்திருக்கிறார் இந்த நதி பற்றி. பிரம்மபுத்திரா மட்டுமே ஆண் நதி என்று உங்களுக்குத் தெரியுமோ?

யமுனை பற்றி, கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார் அவர்கள் முக்கியமான குறிப்புகளையும் தகவல்களையும் பொறுக்கி எடுத்துக் கொடுத்திருக்கிறார். (கங்கை நதிதான் ரொம்பவும் உயர்ந்தது என்று சொல்லுபவர்கள், கிருஷ்ணர் ஆடிக்களித்த யமுனைதான் மிக உயர்ந்தது என்று இவர் சொல்லுவதைக் கேட்டு புருவம் உயர்த்தக் கூடும்!)

டாக்டர் சுதா சேஷய்யன், தமது சொற்பொழிவுக்கே சாதாரணமாக எக்கச்சக்க ஆதாரங்களையும் பாடல்களையும் மடை திறந்த மாதிரி சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்.

(நர்மதா நதி பற்றி அவர் செய்த ஆராய்ச்சியை வைத்துக்கொண்டு, வடக்கத்திய நடனக் கலைஞர் வைபவ் அரேக்கர் நடனம் ஆடப் போகிறார்!)

டாக்டர் பிரேமா நந்தகுமார் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் புலமை பெற்ற எழுத்தாளர், பேச்சாளர். கோதாவரி நதி பற்றி இவர் தொகுத்துக் கொடுத்திருக்கும் செய்திகளும், பாடல்களும் நடனக் கலைஞர் நளினி பிரகாஷுக்கு உதவியிருக்கின்றனவாம்.

டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழ் வாசகர்களுக்கும், சரித்திர ஆராய்ச்சி ஆர்வலர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். காவிரி நதி பற்றி அவர் தொகுத்து அளித்திருக்கும் தகவல்களும், பாடல்களும்தாம் இந்த நாட்டிய விழாவில் நடனக் கலைஞருக்கு உதவப் போகின்றன.

டாக்டர் சித்ரா மாதவன் சரித்திர ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல; தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளரும்கூட. இவருடைய ஆங்கிலச் சொற்பொழிவுகள் எங்கெல்லாம் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் இவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டு வருவது ஒன்றே இவருடைய திறமையை உணர வைக்கும். (இவர் இந்த நடன நிகழ்ச்சிக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, கண்ணால் காண்பதே மெய் என்று, நேரடியாக தாமிரபரணி நதி பாயும் இடங்களுக்குச் சென்று, அங்குள்ள திருக்கோயில்கள் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய பாடல்களையும் அறிந்து வந்திருக்கிறார்!)

இத்தனை ஆதாரங்கள், தகவல்கள் எல்லாம் ஒரு நடன நிகழ்ச்சியோடு போய் விடக்கூடாதே என்று நாரதகான சபா இந்த ஏழு நதிகள் பற்றிய ஏழு கட்டுரைகளையும் ஓர் அழகான தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.

கங்கை பற்றி சுஜாதா விஜயராகவன் எழுதியிருக்கும் முதல் கட்டுரை தொடங்கி, டாக்டர் சித்ரா மாதவன் தாமிரபரணி பற்றி எழுதியிருக்கும் அத்தனை கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.

நடனத்தை மட்டும் கண்டு ரசித்துச் செல்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, இவை போன்ற நுணுக்கமான ஆய்வுக் கட்டுரைகளில் ஆர்வம் காண்பிக்கும் ரசிகர்களுக்காகவே இந்த நூல் வெளியிடப்படுகிறது. பிரதி வேண்டுவோர் சபாவைத் தொடர்பு கொள்ளலாம்.

நடன நிகழ்ச்சி பற்றி விரிவாக அடுத்த வாரம் பார்ப்போம்!

எந்தப் பெற்றோராவது, பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு, “இவங்க எதிர்காலத்தை நினைச்சாலே பயங்கரமா இருக்கு!’ என்று சொன்னால், அவர்களை உடனே எஸ்.பி.காந்தன் இயக்கி, நடிகர் மாது பாலாஜி தயாரித்திருக்கும் “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்’ என்ற குறும்படத்தை வாங்கச் சொல்லி சிபாரிசு செய்கிறேன்.

திருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன் பத்திரிகையாளர், பல பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகர் மட்டுமல்ல. சிறந்த கல்விச் சிந்தனையாளர். அவரும் அவர் துணைவி ராதா ஸ்ரீதரனும் அமர்ந்து குழந்தைகளின் கல்வி, அவர்கள் வளர்ச்சி, எதிர்காலம் பற்றி உரையாடும் டிவிடி-தான் இது. ஆனால் ஒரேயடியாக டிவி உரையாடல் மாதிரி இல்லாமல், அங்கங்கே படங்களையும், சித்திரங்களையும் பொருத்தமாகச் சேர்த்திருக்கிறார் காந்தன்.

உரையாடல் மிக இயல்பாக அமைந்திருக்கிறது என்பதோடு, தெளிவாக இருக்கிறது. வளரும் குழந்தைகளின் கல்வி சார்ந்த அத்தனை விவரங்களையும் ஒவ்வோர் அம்சமாக எடுத்துக்கொண்டு 3 நிமிடம், 5 நிமிடம், 8 நிமிடம் என்று பிரித்துக்கொண்டு சுவாரசியமாகத் தயாரித்திருக்கிறார்.

“தாரே ஜமீன்பர்’ திரைப்படத்திற்குப் பிறகு பரவலாகப் பேச்சில் அடிபடும் டிஸ்லெக்சியா பற்றியும் ஒரு பகுதி இருக்கிறது. (அது நோயல்ல; கவனக் குறைவுதான்!) கூடவே டிஸ்க்ராஃபிலியா, டிஸ்காங்குலியா போன்ற சிறு குறைபாடுகள் பற்றியும் உரையாடலில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதரன்.

வலது மூளை -இடது மூளை, யோகாவின் அவசியம், படிக்கும் பழக்கம் எவ்வாறு உதவுகிறது, குழந்தைகள் எப்படி சரளமாக ஆங்கிலம் பேசலாம், எட்டு வகை புத்திசாலித்தனங்கள் என்று வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது டிவிடி. பெற்றோர் மட்டுமல்ல, ஒவ்வொரு பள்ளிக்கூட ஆசிரியரும் அவசியம் கவனமாகப் பார்க்க வேண்டிய பல அம்சங்கள் கொண்ட இந்தக் குறும்படம், பலருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »