ஆந்திர சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கருத்துக்கணிப்பில் தகவல்
நகரி, மார்ச்.10-
ஆந்திர சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்து இருக்கிறது.
ஆந்திர சட்டமன்ற தேர்தல்
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தல் ஏப்ரல் 16, மற்றும் 23-ந் தேதிகளில், இரு கட்டமாக நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி ஏதும் இன்றி தனியாக போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, ஓரணியாக போட்டியிடுகின்றன.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
கருத்து கணிப்பு
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி நீல்சன் ஓ.ஆர்.ஜி. அமைப்பு, என்.டிவி.யுடன் இணைந்து, மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அதன் முடிவுகளை அறிவித்து இருக்கிறது.
அதன்படி, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
காங்கிரசுக்கு 155 இடங்கள்
மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு 155 முதல் 169 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 92 முதல் 110 இடங்களும், சிரஞ்சீவியின் கட்சிக்கு 30 முதல் 35 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பு கூறுகிறது.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு 4 முதல் 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
வட ஆந்திர பகுதியில்
காங்கிரஸ் கட்சிக்கு, வட ஆந்திர பகுதி எனப்படும் கடற்கரை பகுதியில் மட்டும் 77 முதல் 88 தொகுதிகளும், ராயல சீமா பகுதியில் 35 முதல் 41 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ராயல சீமா பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 13 முதல் 15 இடங்களும், சிரஞ்சீவியின் கட்சிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. வட ஆந்திர பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணி 20 முல் 24 தொகுதிகளிலும், சிரஞ்சீவியின் கட்சி 21 முதல் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்றும் கருதப்படுகிறது.