ஒரு சிங்களப் படம் சர்ச்சையாகிறது!
துஷாரா பெய்ரிஸ் என்ற இலங்கை நாட்டுச் சிங்கள இயக்குநர் பிரபாகரன் என்ற பெயரில் எடுத்த திரைப்படம் பெரும் சர்ச்சைச் சகதிக்குள் சிக்கிக்கொண்டு மூச்சுத் திணறு கிறது. இப்படம் இலங்கை எல்லையைத் தாண்டி வராமல் இருந்திருந்தால், இந்த அளவுக்குப் பிரச்சினையின் தாக்குத லுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் என்று சொல்ல முடியாது.
இலங்கையில் இந்தச் சிங்களப் படம் திரையிடப்படும் பட்சத்தில், சிங்கள மக்களின் வெறியை மேலும் கொம்பு சீவிவிட்டிருக்கும்.
இந்த இயக்குநரின் குருநாதர் ஜீவன் குமாரதுங்கா என்ற சிங்களவர் – படம் எப்படியிருக்கும் என்பதற்குச் சாட்சியங்கள் தேவைப்படவில்லை.
சிறுவர்களை இராணுவத்தில் ஈடுபடுத்தக்கூடாது; பெண்களை தற்கொலைப் படைக்குத் தயாரிக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்வது நல்ல விஷயம்தானே என்று பெரும் போக்காக விமர்சிக்கக் கூடும்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஈழப் போராளிகள்மீது வைக்கப்பட்டதுண்டு – ஒரு திரைப்படத்தின்மூலம் வெளிப் படுத்துவதில் ஒரு பெரிய உள்நோக்கம் இருக்கிறது.
உலகம் முழுவதும் சிங்கள அரசின் இனவாத வெறியைத் திட்டமிட்டு மறைத்து, அவர்களின் மனிதநேயம், போர் தர்மம் ஆகியவற்றை காலில் போட்டு மிதிக்கும் கேவலத்தைப் பின்னுக்குத் தள்ளி உள்நாட்டுத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காகப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்திக் காட்டும் தீய நோக்கம் இந்த திரைப்படத்தின் உருவாக்கத்தில் உண்டு என்பது இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டு விட்டது.
படம் எடுத்த இயக்குநரின் நோக்கம் என்ன என்பது திரைப்படத்தின் ஒரு காட்சி அம்பலப்படுத்தி விட்டது. 2006 ஆம் ஆண்டில் செஞ்சோலையில் சிங்கள இராணுவம் தொடுத்த தாக்குதலில் குழந்தைகளும், பெண்களும் கொல் லப்பட்டதாக யுனிசெஃப் அமைப்பே வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சிங்களப் படம் அதுபற்றி என்ன கூறுகிறது? அது ஒன்றும் அனாதைகளின் விடுதியல்ல; போராளிகளின் முகாம் என்று சிங்கள அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் குரலை எதிரொலிக்கிறது இந்தத் திரைப்படம்.
இலங்கையில் நடைபெறும் பிரச்சினைகளை மையப் படுத்தி எடுக்கப்பட்டது இந்தத் திரைப்படம் என்று ஒரு சினிமா பார்வையில் முலாம் பூச ஆசைப்படுபவர்கள் கேள்வி ஒன்றுக்கு நாணயமாகப் பதில் சொல்லக் கடமைப்பட் டுள்ளனர்.
இலங்கை இராணுவம் நடந்துகொண்ட அத்துமீறல், போர் தர்மத்துக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையாவது காட்சியில் வைத்திருக்கவேண்டாமா? இலங்கை இராணு வம் செய்தது எல்லாம் சரியானது; தங்கள் மக்களைப் பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்தான் அநியாயக்காரர்கள் என்று காட்டுவதற்காக ஒரு திரைப்படமா?
பூனைக்குட்டி வெளியில் வந்தது என்கிற பழமொழிக்கு ஏற்ப – இந்தச் சிங்களத் திரைப்படம் இலங்கை இராணுவத் தளபதிக்குப் போட்டுக் காட்டப்பட்டுப் பாராட்டுதலையும் பெற்று இருக்கிறது.
வெலிக்கண்டா, தொட்டிசலா, மியான்குலமா முதலிய இடங்களில் நடந்த போர்களை இலங்கை இராணுவ உதவி யுடன் படமாக்கப்பட்டுள்ளதும், அதற்காக இராணுவத் தளபதி ஃபொன்சேகா முதலியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு இருப்பதும், இந்தத் திரைப்படம் எந்தப் பின்னணியில் யாருக்காக, எந்தப் பிரச்சாரத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது அப்பட்டமாகவே தெரிந்துவிட்டது.
இந்தச் சிங்கள படத்தினை தமிழிலும் டப்பிங் செய்து, தமிழர்கள் மத்தியிலும் தமிழர்களுக்காகப் போராடுபவர் களைப்பற்றிக் கொச்சைப்படுத்தி, சிங்கள இராணுவத்தின் கொடுமைகளுக்கு நியாயம் கற்பிக்கும் கெட்ட எண்ணம் இந்தத் திரைப்படத்தின் பின்புலத்தில் முதன்மையான தாகவே இருக்கிறது.
இலங்கை சிங்கள அரசின் பாசிசத்துக்கு இந்த ஏற்பாடும் கூட ஒரு முக்கிய ஆதாரமாகும் என்பதில் அய்யமென்ன? இலங்கை அரசின் முயற்சி எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது!