Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Pollution’

நெட்டில் சுட்டதடா…: பச்சக்கென்று ஒட்டிக்கொண்ட பெரிய மனிதர்கள்!

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008


ராமன் ராஜா

சதித் திட்டம் தீட்டியது சாமிநாதன்தான். அவன்தான் மாஸ்டர் மைண்ட். சதியில் என்னுடைய பங்கு மிகச் சிறியது: போஸ்ட் ஆபீசிலிருந்து கொஞ்சம் கோந்து திருடிக் கொண்டு வரவேண்டும்; அவ்வளவுதான். மாவீரன் சாமிநாதன், அதை எஸ்.வி.வி. வாத்தியாரின் நாற்காலியில் பூசப்போகிறான். பள்ளிக்கூடமே ஆவலுடன் காத்திருந்த அந்தப் பொன்னாளும் வந்தது. கையும் கோந்துமாக எஸ்.வி.வி.யிடம் மட்டும் பிடிபட்டு விட்டால் மரணதண்டனை நிச்சயம் என்பதால் வராந்தா முழுவதும் ஒற்றர்களை நிறுத்தி வைத்துக்கொண்டு, அவசரமாக வேப்பங் குச்சியால் அந்த நாறும் கறுப்பு கோந்தை நாற்காலியில் பூசினோம்… பிறகு நடந்ததைக் கடைசியில் சொல்கிறேன்.

இன்றைக்குப் பசை, கோந்து என்றாலே ஐரோப்பிய அரசியல்வாதிகளும் பெரிய கம்பெனி முதலாளிகளும் அலறுகிறார்கள். அவர்களை அலற வைத்துக் கொண்டிருப்பது சூப்பர் க்ளூ எனப்படும் ஹை டெக் கோந்து. சயனோ அக்ரிலேட் என்ற ரசாயனத்தால் தயாரிக்கப்படும் ஒருவித பாலிமர் பசை. மரம், கண்ணாடி, தோல் எதை வேண்டுமானாலும் இரண்டே வினாடியில் பிரிக்க முடியாமல் ஒட்டி விடும். காப்பிக் கோப்பையின் உடைந்த கைப்பிடியை சூப்பர் க்ளூவால் ஒட்ட முயற்சித்து, கை விரலுடன் சேர்த்து கப்பை ஒட்டிக்கொண்டு அசடு வழிந்தவர்கள் பலர். பலமாக இழுத்தால் தோல் பிய்ந்து வந்துவிடும்! சூப்பர் க்ளூவை நீக்க ஒரே வழி அசிடோன் திரவத்தை ஊற்றி மெல்லக் கரைப்பதுதான்.

மேலை நாடுகளில் சுற்றுச் சூழலைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபடும் குழுக்கள் அவ்வப்போது பல நூதனமான போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். அவர்கள் கையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஆயுதம், இந்த சூப்பர் பசை. தங்களுக்குப் பிடிக்காத வி.ஐ.பி.களை சந்திக்கும்போது சட்டைப் பையில் மறைவாக ஒரு சின்ன சூப்பர் க்ளூ டியூபை எடுத்துப் போவார்கள். உள்ளங்கையில் அதைத் தடவிக்கொண்டு அழுத்திக் கை குலுக்கினால் போதும். வி.ஐ.பி. பிரமுகரும் போராளியும் சப்பக் என்று ஒட்டிக் கொண்டு விடுவார்கள்! பெரிய மனிதருக்குத் தர்மசங்கடம். போராளிக்கோ உற்சாக வெள்ளம். சயாமிய இரட்டையர்கள் போல் அவர்கள் ஒட்டிக் கொண்டு தள்ளி, இழுத்து அவஸ்தைப்படுவதை மீடியா மூலம் உலகமே நேரடியாக வேடிக்கை பார்க்கும். செக்யூரிட்டி அதிகாரிகள் பரபரத்து நாலா புறமும் ஓடுவார்கள். அசிடோன் தேடிக் கொண்டு வந்து இவர்களுடைய அன்புப் பிணைப்பை விடுவிப்பதற்குள் மணிக்கணக்கில் கூட ஆகிவிடும். அத்தனை நேரமும் போராட்டத்திற்கு சரியான விளம்பரம்தான்! போன வாரம் இவர்களிடம் மாட்ட இருந்து மயிரிழையில் தப்பித்தவர், பிரிட்டிஷ் பிரதமர் பிரவுன். ஆர்வத்துடன் தன்னிடம் கை குலுக்க வருவது மிகவும் பசையுள்ள கை என்பதைக் கவனித்துக் கடைசி நிமிடத்தில் எகிறிக் குதித்து உதறித் தப்பித்து விட்டார். இல்லாவிட்டால் அன்று உலகம் முழுவதும் இதுதான் தலைப்புச் செய்தியாகியிருக்கும்.

சுற்றுச் சூழலுக்காகப் போராடும் க்ரீன் பீஸ் போன்ற அமைப்புகளுக்கு நிறைய நன்கொடை வருகிறது. மனோகர் நாடகத்துக்கு செட் போடுவது போல் பிரம்மாண்டமான முறையில் தங்கள் போராட்ட அரங்கத்தைத் தயாரிக்கிறார்கள். அப்போதுதான் மீடியா கவனம் அவர்கள் பக்கம் திரும்பும். தசாவதாரத்தைத் தோற்கடிக்கும் வகையில் விதவிதமான மேக்கப்கள் , முகமூடிகள், காஸ்ட்யூம்கள், வட துருவத்தில் எண்ணெய்க் கிணறு தோண்டக் கூடாது என்று போராட வேண்டுமா? உடம்பெல்லாம் சடை மயிருடன் வெண் கரடி வேடத்தில் வந்தார்கள். 2006-ல் ஜப்பான் நாட்டில் திமிங்கில வேட்டையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி ஒரு போராட்டம். இருபது டன், அறுபது அடிக்கு இருந்த செத்த திமிங்கிலத்தை கிரேன் வைத்து நகரின் நடுவே இறங்கி வைத்துக்கொண்டு “”அநியாயமாக இந்தக் குஞ்சு மீனைக் கொன்னுட்டீங்களே” என்று மாரடித்து அழுதார்கள்.

அமெரிக்காவின் நாயுடு ஹால் எனப்படும் விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனம், வருடா வருடம் வழவழ காகிதத்தில் தங்கள் உள்ளாடை, நைட்டி வகைகளை அச்சடித்து “காடலாக்’ புத்தகம் வெளியிடுகிறது. இந்த மாதிரி பல கம்பெனிகள் அனுப்பும் விலைப் பட்டியல் விளம்பரங்களுக்குக் காகிதம் தயாரிக்க எண்பது லட்சம் டன் மரம் தேவைப்படுகிறது. இவர்களின் பேப்பர் பசிக்குத் தீனி போடுவதற்காக கனடாவின் அருமையான போரியல் காடுகள் ஒரு நிமிடத்துக்கு இரண்டு ஏக்கர் என்ற வேகத்தில் அழக்கப்படுகின்றன. இருபத்து நாலு மணி நேரமும் ரம்பம் ஓய்வதே இல்லை! இதை எதிர்த்துப் பெண்மணிகள் உள்ளாடைகளுடன் தெருவில் நின்று போராட்டம் நடத்தினார்கள். என்ன இது, அசிங்கமாக இருக்கிறதே என்று கேட்டால், “”காடுகள் அழிந்து கொண்டிருக்கிறதே என்று நாங்கள் கரடியாய்க் கத்தினாலும் ஒருத்தனும் கண்டுகொள்வது இல்லை. இப்போது பாருங்கள், உடை துறந்து போராட்டம் என்றதும் உலகத்து டி.வி. சானல்கள், பத்திரிகைகள் அத்தனையும் தூக்கம் துறந்து இங்கே வந்து குவிந்து விட்டன” என்கிறார்கள்.

உண்மைதான். போராளிகளுக்கும் வேறு வழியில்லை. எண்ணெய்க் கம்பெனிகளும் அனல் மின்சார நிறுவனங்களும் காடு வெட்டும் மாஃபியாக்களும் பண பலம் மிகுந்தவை. கத்தரிக்காய் வாங்குவது போல் சல்லிசாக எம்.பிக்களை வாங்கிப் போட்டுத் தங்களுக்கு வேண்டிய மாதிரி சட்டங்களை வளைத்து வளைத்து எழுதிக் கொள்கிறார்கள். காட்டிலாகா அதிகாரிகளுக்கு அரை பாட்டிலும் ஒரு சிக்கன் மன்சூரியனும் வாங்கிப் போட்டால் கண் காதெல்லாம் அடைத்துப் போய்விடும். எதிர்ப்பாரே இல்லாமல் பூமியை உரித்த கோழி மாதிரி உரித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் இவர்களைத் தட்டிக் கேட்பது யார்? அப்படிக் கேட்க முன்வரும் மிகச் சில வின்சென்ட் பூவராகன்களுக்கு மீடியா தரும் இடம் என்ன? பதினாறாம் பக்கத்து மூலையில் இரண்டு இன்ச்! அதனால்தான் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தங்களுடைய ஒவ்வொரு போராட்டத்தையும் ஒரு பிரம்மாண்டமான நிஜ நாடகம் மாதிரி யோசித்துத் திட்டமிட்டு வடிவமைத்து ஒத்திகை பார்த்து டைரக்ட் செய்கிறார்கள்.

காட்டு தர்மம்(Forest ethics) என்ற அமைப்பினர் கொசு மருந்து பூசிக்கொண்டு மாதக் கணக்கில் காட்டுக்குள்ளேயே சென்று வசிக்கிறார்கள். காட்டை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து என்னென்ன விதமாக மரங்களும் பறவைகளும் மிருகங்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன என்று ஆராய்கிறார்கள். “ஆபத்தில் இருக்கும் வனப் பகுதிகள்’ என்று ஒரு லிஸ்ட் தயாராகிறது. இவற்றை அழிப்பவர்கள் யார், இங்கே வெட்டப்படும் மரமெல்லாம் கடைசியில் எங்கே பயன்படுகிறது என்று ரிஷி மூலம் வரை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார்கள். பிறகு, அந்தந்த நிறுவனங்களிடமே போய்ப் பேசுகிறார்கள். “”உங்கள் பணத்தால் நாசமாகும் இயற்கைச் செல்வங்கள் இவை” என்று ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள். அவர்களாகத் திருந்தி நல்ல வழிக்குத் திரும்பினால் சரி. இல்லாவிட்டால், போராட்டம்தான், ஆர்ப்பாட்டம்தான், பச்சக் என்று ஒட்டும் பசைதான்!

கம்பெனியின் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களுக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்பி “”இப்படிப்பட்ட கிராதகக் கம்பெனியுடன் சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று வற்புறுத்துவார்கள். நிறுவனத்தின் சுற்றுச்சூழல் அக்கிரமங்களைப் பட்டியலிட்டுப் பத்திரிகைகளில் முழுப் பக்க விளம்பரம். கம்பெனிக்கு ஃபைனான்ஸ் செய்யும் பாங்க் வாசலில் போய் ஒரு மறியல் போராட்டம். பாங்க் சேர்மனுக்கு சூப்பர் க்ளூ வைத்தியம்! பப்ளிக்காக மானத்தை வாங்கிவிட்டுத்தான் மறு வேலை!

“”காடுகளைக் காப்பாற்றுவதற்கு, காட்டிற்கே போய்ப் போராட வேண்டியதில்லை. காட்டை அழிக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு நகரத்தில் ஏதோ ஒரு ஏ.ஸி. அறையில்தான் எடுக்கப்படுகின்றன. அங்கே கண்டு பிடித்துப் போய் மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். குறிப்பாக, நுகர்வோர் எல்லோரும் சேர்ந்து “நுகர மாட்டோம்’ என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தால் போதும்; இவர்களெல்லாம் தன்னால் வழிக்கு வந்துவிடுவார்கள்” என்று சொல்லும் எதிக்ஸ் அமைப்பினர், இதுவரை தென் அமெரிக்காவில் மட்டுமே ஒன்றேகால் கோடி ஏக்கர் காடுகளைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

சரி, விஷயத்திற்கு வருவோம். எங்கள் பள்ளிக் கூடத்தில் கோந்து தடவிய தினத்தன்று நடந்த கூத்துதான் ஆண்ட்டி க்ளைமேக்ஸ் எனப்படுவது: அன்றைக்கென்று ஏனோ எஸ்.வி.வி சார் வகுப்புக்கு வரவே இல்லை. அவருக்குப் பதிலாக வந்த சாது ட்ராயிங் மாஸ்டர் சபக்கென்று நாற்காலியில் உட்கார்ந்ததையும், திருதிருவென்று விழித்த அவர் முகம் ஆர்.கே. லட்சுமணன் கார்ட்டூன் மாதிரி அவலச் சுவை காட்டியதையும், மாஸ்டர் சுவர் ஓரமாகப் பின் பக்கத்தை வைத்துக் கொண்டு நடந்து அவசரமாக பாத்ரூமில் சென்று மறைந்ததையும் தமிழகமே இன்று வரை பேசுகிறது.

இந்த நிகழ்ச்சியை இருபத்திரண்டு வருடம் கழித்து ஒரு நாள் எஸ்.வி.வி சாரைச் சந்தித்தபோது வெட்கத்துடன் ஒத்துக் கொண்டேன். அவர் சிரித்துக் கொண்டே “படவா ராஸ்கல்’ என்று அன்புடன் காதைத் திருகியது மிகவும் இன்பமாக வலித்தது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »

Philippines: Ferry salvage team to remove toxic cargo, fuel – No ‘significant’ release of toxic chemical yet: Endosulfan retrieval from ‘Princess’ to commence Monday

Posted by Snapjudge மேல் ஜூன் 30, 2008

மூழ்கிய படகில் இருக்கும் விஷ இரசாயனத்தை அகற்றுவதற்கான முயற்சி

மூழ்கிய கப்பலின் அருகே மீட்புப் பணியாளர்கள்
மூழ்கிய கப்பலின் அருகே மீட்புப் பணியாளர்கள்

பிலிப்பைன்ஸில் அண்மையில் மூழ்கிய ஒரு படகிலிருந்து நூற்றுக்கணக்கான சடலங்களை மீட்கும் பணியைச் செய்யத் தடையாக அப்படகிலிருந்த விஷ இரசாயனத்தை அகற்றுவதற்கு தற்போது ஒரு சிறப்பு நிபுணர் அணி முயற்சித்துவருகிறது.

கடந்த சனிக்கிழமை சூறாவளியில் சிக்கி மூழ்கிய அப்படகின் அடித்தளத்தில் இருந்து பத்து டன்கள் அளவிலான பூச்சிக்கொல்லி மருந்தை பாதுகாப்பாக வெளிக்கொணர இந்த நிபுணர் அணி முயலும்.

இந்தப் படகு மூழ்கிய சமயத்தில் அதில் எண்ணூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர்; ஆனால் 60 பேருக்கும் குறைவானவர்களே உயிர்பிழைத்ததாகத் தெரியவருகிறது.

நேற்று வெள்ளிக்கிழமைதான் படகில் இரசாயனம் இருப்பது தெரியவந்து சடலங்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Concern after Brazil loses environment minister: Lawlessness mars Amazon dreams

Posted by Snapjudge மேல் மே 15, 2008

பொருள் தேடும் மாற்று வழிகள் மக்களுக்கு இருந்தால்தான், அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுவது நிற்கும்: பிரேசில் அமைச்சர்

காடுகள் எரிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்படுகின்றன

அமேசான் மழைக்காடுகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பிரேசில் திட்டமிடல் அமைச்சர் , ரொபெர்ட்டோ மங்கபெய்ரா உங்கர், மக்களுக்கு பொருளாதார வாய்ப்புக்கள் தரப்பட்டால் மட்டுமே காடுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படமுடியும், என்று கூறியுள்ளார்.

அத்தகைய வாய்ப்புகள் இல்லாவிட்டால், அமேசான் காட்டுப்பகுதிகளில் வசிக்கும் 25 மிலியன் மக்கள் ஒழுங்குபடுத்தப்படாத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள், அதன் மூலம் காடுகள் அழிக்கப்படுவது நடக்கும் என்று பிபிசியிடம் அமைச்சர் கூறினார்.

காட்டை ஒரு சரணாலயமாக பாதுகாப்பது என்பதற்கும், குறைந்த தீவிரத் தன்மையுடைய பண்ணை நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்ட அழிக்கும் வடிவிலான உற்பத்தி முறையை கையாள்வதற்கும் இடையிலான ஒரு மைய வழி இருப்பதாக அவர் கூறினார்.

Posted in Economy, Finance, Govt, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »