களையப்பட வேண்டிய களைகள்!
ஜி. மீனாட்சி
கோவை மாவட்டத்திலுள்ள குக்கிராமம் ஒன்றுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் தீவிர வரி வசூல் முகாம் நடந்து கொண்டிருந்தது.
கால அவகாசத்தைக் கடந்தும், பல தடவை நோட்டீஸ் அனுப்பியும், இறுதி எச்சரிக்கை விடுத்தும் சரிப்பட்டு வராத நிலையில் கடைசி முயற்சியாக வரி செலுத்தாதவர்களின் இல்லத்திற்குச் சென்று குடிநீர்க் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் அந்த ஊரின் பெண் பஞ்சாயத்துத் தலைவி.
“”அரசுக்குச் சேர வேண்டிய வரியை வசூலிப்பதில் எத்தனை கஷ்டம் பார்த்தீர்களா? அரசு அதிகாரிகள்கூட இதற்கு ஒத்துழைப்பதில்லை. பல முறை அழைத்த பிறகுதான் வருகிறார்கள். இந்நிலையில், வரி செலுத்தாதவர்களின் கோபம் முழுவதும் பஞ்சாயத்துத் தலைவர்களின் மீதுதான் பாய்கிறது…” என்றார் வருத்தத்துடன்.
அவரது வார்த்தைகளை நிரூபிப்பதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்துள்ளனர்.
சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், ஊராட்சித் துணைத் தலைவர்களும் தங்களை சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
சட்டப் பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அமலுக்கு வராத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த இடஒதுக்கீடு தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதும் பாராட்டுக்குரியது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகள், சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா என்பது கேள்விக்குறியே.
பல ஊராட்சிகளில், ஊராட்சிக் குழுக் கூட்டம் நடக்கும்போது பெண் உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை என்பதே உண்மை. அவர்களுக்குப் பதிலாக, அவர்களின் கணவன்மார்களோ அல்லது குடும்பத்து ஆண்களோ கூட்டத்துக்கு வருவதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி ஒருவரே வருத்தம் தெரிவித்திருந்தார்.
படிப்பறிவற்ற, கிராமத்து, தலித் பெண்களில் பலர் வெற்றி பெற்றும், தங்களின் உரிமைகளை உணர முடியாதவர்களாகவே உள்ளனர். படித்த பெண்களில் பலர் கிராம மக்களுக்குச் சேவை செய்யும் உன்னத உணர்வுடன், உள்ளாட்சி அமைப்புகளில் முக்கியப் பதவி வகித்து வருகின்றனர். ஆனால் அந்தப் பெண் தலைவிகள், தங்கள் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியாதபடி ஏகப்பட்ட குறுக்கீடுகள்.
எல்லாவற்றையும் திறமையாகச் சமாளித்து மக்கள் பணிகளை நிறைவேற்றும்போது, நிதிப் பற்றாக்குறை, சக ஊழியர்களின் ஒத்துழைப்பின்மை என்று தொடரும் நெருக்குதல்கள்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் உரிய முக்கியத்துவம் அளித்ததுடன் அரசின் பணி முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகளுக்கு, உள்ளாட்சி நிர்வாகம் குறித்து தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு அவ்வப்போது பயிற்சி அளித்தல், அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தல், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி கருத்துப் பரிமாற்றம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்களில் ஈடுபட வழிவகை செய்தல் போன்றவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். முக்கியமாக, நிதியைக் கையாளும் முறை குறித்தும் பயிற்சியளிக்க வேண்டும்.
சொந்த ஊரில் பஞ்சாயத்துத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும், மக்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் கைகள் கட்டப்பட்டுத் தவிக்கும் பெண்கள் ஏராளம். எல்லாவற்றையும் மீறி, ஜாதி, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, நேர்மையாய் பணியாற்றும் பெண் தலைவிகளுக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் என்று தொடர்கிறது வன்முறை.
இந்திய அரசியல் அமைப்புச் சட்ட 73-ம் திருத்தத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டு முன்னேற்றத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பொருளாதார மேம்பாடு, சுகாதாரம் போன்றவற்றை ஊராட்சிகளில் ஏற்படுத்தும் வகையில் ஊராட்சிகளுக்கு முழு சுதந்திரமும், அதிகாரமும் அளிக்க அரசமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவற்றை குறைவின்றி நிறைவேற்றும் பொறுப்பும், கடமையும் ஊராட்சித் தலைவிகளுக்கு உள்ளது. அவர்கள் பணியை தடையின்றி நிறைவேற்ற அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் ஒத்துழைப்புத் தரவேண்டும்.
பல கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்களை சுதந்திரமாக நடத்தும் உரிமைகூட ஊராட்சித் தலைவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. சொந்த கிராமத்தின் அத்தியாவசியத் தேவைகளை நன்கு அறிந்தவர்கள், ஊராட்சிப் பிரதிநிதிகள் மட்டுமே. ஆனால் கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்கள் என்னென்ன என்பது குறித்து முன்கூட்டியே ஆட்சியர் அலுவலகமே ஆணை பிறப்பிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதுபோன்ற பல காரணங்களால், பதவியில் இருந்தும் கடமை ஆற்ற முடியாத நிலைக்கு ஊராட்சித் தலைவிகள் தள்ளப்படுகிறார்கள்.
அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் போன்றவற்றில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வைத்ததுதான் சட்டம். காவல் துறையும் அவர்கள் பின்னே பக்கபலமாய் நிற்கிறது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள். தமிழகத்தில் இன்னும் அந்த நிலை வரவில்லை.
குறைகள் களையப்பட்டு, சுதந்திரமாக, நேர்மையாகச் செயல்படும் வகையில் ஊராட்சிப் பெண் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரமும், அங்கீகாரமும் வழங்கினால் மட்டுமே ஊராட்சியை உவகை மிக்க ஆட்சியாக மாற்ற முடியும்.