Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Nadar’

Nadars: Era Manigandan

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2009

07.01.09    தொடர்கள்
ந்தச் சமுதாய மக்களாக இருந்தாலும் உறவின்முறையோடு `அண்ணாச்சி’ என்று அன்போடு அழைக்கும் நாடார் சமூகத்தார், தாங்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்று பிரகடனப் படுத்தியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.இதனால் பல்வேறு இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. நாடார்கள் ஒன்று சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேலே ஆடை உடுத்திக்கொண்டனர். பொது இடங்களில் தங்களது மேல் ஆடையைப் பறிக்க முயன்றவர்களை எதிர்த்துத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆதிக்க சாதிகள் நாடார் இனமக்களின் வீரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கத் தொடங்கினர்.

கலவரம் மேலும் மேலும் பரவி பலர் கொல்லப்படுவதைக்கண்டு  சென்னை அரசே அஞ்சியது. அதனால் உடனே தலையிட்டு, 1859_ல் `நாடார் பெண்கள் மேலாடை அணியக்கூடாது’ என்ற பிரகடனத்தை அரசு ரத்து செய்தது. இதன் அடிப்படையில் பெண் கல்விக்கென நாகர்கோவிலில் ஆங்கிலேயரால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் பெண் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது.

தங்கள் இனம் இப்படி பல இன்னல்களுக்கு ஆட்படுவதற்குக் காரணமே, தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நாடார் மக்கள் உணர்ந்தனர். அதன் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் `நாடார் உறவின் முறை’ என்ற அமைப்பு.அனைத்து வழக்குகளிலும் போலீசைத் தலையிடவிடாமல் உறவின் முறையே விசாரித்து தீர்ப்பு கூறியது.

நாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மாற்றியமைக்க முற்பட்டனர். ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும்,  பூணூல் போடவும் தொடங்கினர். பெண்கள் பாரம்பரியமான கனத்த ஆபரணங்களையும், காது வளையங்களையும்  தவிர்த்தனர்.

விதவைகள் வெள்ளைச் சீலை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் மறுமணம் தடை செய்யப்பட்டது. (இப்போது மறுமணத்தை ஆதரிக்கிறார்கள்.) பெண்கள் தண்ணீரை தலையில் எடுத்துச் செல்வதைத் தடுத்து, இடுப்பில் எடுத்துவரப் பணிக்கப்பட்டனர்.

திருமண ஊர்வலங்களின்போது செல்வ செழிப்பினைக் காட்ட பல்லக்குகளைப் பயன்படுத்தினர். பெரும்பாலான நாடார்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். சிலர் வைணவர்களாகவும் இருந்தனர். முருகக் கடவுள் நாடார் சமூகத்தின் சிறப்பு தெய்வம். பத்ரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறுதெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுப்பது பிரசித்தம்.

நாடார் திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் உண்டு. கன்னியாகுமரி, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பெண் வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக் காட்ட திருமணத்தின்போது நடத்தப்படும் `அலந்தரம் செய்வது’ என்ற சடங்கு மிக முக்கியமானது.

கோயில்களுக்கு நன்கொடைகளை  வாரி வழங்கினர். சிவன் கோயில்கள் கட்டினர். தங்களை சத்திரியர்கள் என்று அடையாளம் காணும்படி நடந்துகொண்டனர்.நாடார்குலத்தின் பொருளாதார உயர்வும், பொதுமதிப்புக்காக அவர்கள் செய்த முயற்சியும் உயர்சாதிக்காரர்களுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் பிரச்னை உருவானது.

அதன் விளைவாக, 1890ஆம் ஆண்டு  ஆதிக்க சாதியினருக்கும் நாடார்களுக்கும் இடையே சிவகாசியில் மிகப் பெரிய கலவரம் மூண்டது. இக்கலவரத்தை நாடார் இனமக்கள் `சிவகாசிப் போர்’ என்றே அழைக்கிறார்கள்.

ஆலயத்திற்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று நாடார்கள்  கேட்டதுதான் கலவரத்திற்குக் காரணம். மற்ற ஆதிக்க சாதியினர், `நாடார்கள் கோயில்களுக்கு நுழையவே கூடாது’ என்று எதிர்த்ததோடு   கோயிலையும் மூடிவிட்டார்கள். அன்று இரவே  கோயில் கதவை உடைத்து நாடார்கள் கோயிலுக்குள் புகுந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் கொதித்தெழுந்த ஆதிக்க சாதியினர் நாடார் வீடுகளுக்குத் தீ வைத்தனர். சிவகாசி நகரில் இருக்கும் நாடார்களை வேரோடு கருவருக்கவேண்டும் என்ற மூர்க்கத்தனத்தோடு  சிவகாசி மீது தாக்குதல் நடத்தினர். சுற்று கிராமங்களைக் கொள்ளை அடித்தனர். ஆனால் இதில் நாடார் இனமக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி எதிர்த்துப் போராடினார்கள். கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடித்தார்கள்.  பலர் மடிந்தார்கள். இறுதியில் நாடார்களே இந்தப் போரில் வெற்றி பெற்றார்கள்.

1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோது, 150 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாயிருந்தன. சுமார் 4000 வீடுகள் அழிக்கப்பட்டன. இரு தரப்பிலும் பலர் இறந்து போனார்கள். சிவகாசியில் நடந்த சோக சம்பவத்தை  இந்தியா முழுவதிலுமுள்ள பத்திரிகைகள் முதற்பக்கத்தில் வெளியிட்டு நாடார்களின் நியாயத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லின.

நிலைமைகளை நன்கு உணர்ந்த நாடார்கள் தங்களுக்குப் பாதுகாப்பு பெற அரசியல் அதிகாரத்தில் நேரடி அங்கம் பெற முயன்றனர்.
பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன், வி.வி.ராமசாமி (நீதிக்கட்சி) போன்றோர் அரசியல் கதவைத் திறந்துவிட்டனர். தலைவர் கோசல்ராம் தலைமையில் ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களில் உப்பு சத்தியா கிரகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தேசிய விடுதலைக்காக காம ராஜர் நடத்திய போராட்டங்களும் அரசியலில் அவர் காட்டிய வழிகாட்டல்களும் நாடார் சமூக மக்களை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியது.

நாடார் சமூகம் கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தையே முழுவதுமாக நம்பியிருக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் கிருஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களின் முன்னேற்றத்திற்காக மதகுருமார்கள் கல்வியின் சிறப்பினை அவர்களுக்குக் கற்பித்தனர். 19ஆம் நூற்றாண்டுகளில் `மகமை நிதி’ உதவியால் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளைத் தென்மாவட்டங்களில் தொடங்கினர். 20ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி உள்ளிட்ட பல முக்கிய கல்லூரிகளையும் தொடங்கினர். நாடார்கள் சமூகத்தினரோடு மற்ற சமூகத்தினரும் அதனால் பலன் அடைந்தனர்.

“நாடார்கள் நாடாண்டவர்கள் என்பதை இன்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். இடைவிடா உழைப்பினாலும் சிக்கனத்தாலும் நாடார்கள் சாதாரண மளிகைக்கடை முதல் கம்ப்யூட்டர் துறை வரை உலகளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் நாடார் சமூகம் உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நாடார்களின் வெற்றி ரகசியமும் அதுவே” என்கிறார் சென்னை, நெல்லை_தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் க்ஷி.ஜி.பத்மநாபன் நாடார்.

உண்மைதான்.   இன்று நாடார்கள்  சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்கள் செல்வாக்கினை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்..

படங்கள் : சித்ரம் மத்தியாஸ்
அரண்மனைசுப்பு

`தினத்தந்தி’யைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்கள் எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார். நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தவர் பொறையார் ரத்னசாமி நாடார்.   நம் நாட்டிற்கு `தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை மறக்கமுடியாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன், தூக்குமேடை ராஜகோபால் ஆகியோரின் வீரம் பலருக்கு எடுத்துக்காட்டு. வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்’ என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிவகாசி பி.அய்யநாடாரும் ஏ.சண்முகநாடாரும் ஆவர்.

நீதிக்கட்சி வி.வி.ராமசாமி, விருதுநகர் சீமான் எம்.எஸ்.பி.ராஜா.  வெள்ளைச்சாமி நாடார், ஏ.வி.தாமஸ், ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம் என்று  உழைப்பில் உயர்ந்த நாடார்களில் எண்ணற்றவர்களைக் காட்டலாம்.காவல் துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி.யை எந்த சமூகத்தவரும் மறக்கமாட்டார்கள்.

இன்று கணினி உலகில் நுழைந்து உலகப் பணக்காரர்களுள் ஒருவராகத் திகழும் சிவ்நாடார், பழுத்த அரசியல் தலைவர் குமரிஅனந்தன், அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் என்று பலரை இந்த சமூகத்தின் நட்சத்திரங்களாகக் காட்டலாம்.

31.12.08   தொடர்கள்
`நான் தமிழன்’ சாதிகளைப் பற்றியது அல்ல! நம் முன்னோர்களின் கலாசாரங்கள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள் பற்றி அடுத்த தலைமுறைகள் தெரிந்துகொள்வதற்கான தேடல். அவர்களின் வீரத்தையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு உணர்த்தும் ஒரு வாய்ப்பு. ஒரு உண்மையான வரலாற்றை மறந்து விடாமலும் மறக்கடிக்கப்படாமலும் காக்க வைக்கும் முயற்சி.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அடக்கு முறை அது. உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும். அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்புப் போடக் கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது. மாடி வைத்து வீடு கட்டக் கூடாது. பசுக்களை வளர்க்கலாம். ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்கவேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக்கொண்டே போனதன் விளைவு? பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட அந்த சமூகம் வீறுகொண்டு எழுந்தது. தங்களை அடக்கியவர்களையும் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் எதிர்த்து அவர்கள் போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. வரலாறு காணாத அந்தப் புரட்சியை செய்தவர்கள் நாடார் சமூக மக்கள்.

திருநெல்வேலி, இராமநாதபுரத்து மண்ணின் மைந்தர்கள் இவர்கள். மதுரை, கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை என்று அவர்கள் பரந்து கிடக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடார்களே.

சான்றார், சான்றோர், நாடாள்வார் என்றழைக்கப்படும் நாடார்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும், பதனீர் இறக்குவோரும் இருந்தனர்.

மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனப் பரவலாக நம்பப்படுகிறது. மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை.
பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. எனினும் பனைமரம் நாடார்களின் புனித மரமாக எண்ணப்படுகிறது. பனைமரத்தை நுனி முதல் வேர் வரை பயனுள்ளதாக்கிக் காட்டியவர்கள்.

தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது.  `பத்திரகாளியின் மைந்தர்கள்’ என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

தங்களை உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக நாடார்கள் போற்றிக் கொண்டாலும் கோயில்களுக்குள் சென்று சாமி கும்பிட உரிமை, அன்று மறுக்கப்பட்டது. அடக்குமுறை மண்டிய இந்த இருண்ட காலத்தில்தான் நாடார்களிடம் இந்த சமூகக் கொடுங்கோன்மையை எதிர்க்கும் எண்ணம் உதயமாயிற்று. சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஆனால் அங்கேயும் மேலாடை  மறுக்கப்பட்டது கண்டு மக்கள் கொதித்து எழுந்தனர். அதனால், 1820_ல் அது சமூக விடுதலைக்கான போராட்டமாக வெடித்தது.

பெண்களை மேலாடை அணிய வைத்து பொது இடங்களில் நடமாடச் செய்தனர்.இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர்கள், 1882 மே மாதம் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் ஆண்கள் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர். கொலையும் செய்யப்பட்டனர். சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மறுத்த ஆண்களை கொடுமைப்படுத்தினர். கோயில்களையும் பள்ளிகளையும் தீயிட்டனர். நெய்யாற்றின் கரை, எரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழும் பல இடங்களில் சிறுசிறு கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இதுபோதாது என்று, திருவாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815_1829) “நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது” என்று பிரகடனம் செய்தார்.

இப்பிரகடனம்தான் நாடார் குலமக்களின் கோபத்தீயை வானளாவில் வளர்த்துவிட்டது. இனியும் பொறுக்க முடியாது என்று நாடார் சமூக மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். எதிரிகளை நோக்கிப் புறப்பட்டார்கள்..

படங்கள் : ஆர்.சண்முகம்,
அரண்மனை சுப்பு

`உழைத்தால் உயரலாம்’ என்பதற்கு முன் உதாரணம் நாடார் சமூகம்தான். நாடார் மக்களிடையே பெரும் சாதனை படைத்தவர்கள் மிகப் பலர்.

அய்யா வைகுண்டசுவாமி: எளிய நாடார் குடும்பத்தில் முத்துக்குட்டி என்ற பெயரில் பிறந்தவர். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தவர். நாடார் உள்ளிட்ட சமூக மக்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்ற அடக்குமுறைக்கு எதிராக எல்லோரையும் தலைப்பாகை கட்ட வைத்து சாதி வெறியை எதிர்த்துப் போராடியவர்.

மார்ஷல் நேசமணி: குமரித் தந்தை, குமரி மாவட்டத்தின் சிற்பி. 1956ல் நாஞ்சில் நாட்டை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று முயற்சித்த போது `நாங்கள் தமிழர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ் மரபுக்கு சொந்தக்காரர்கள்’ என்று மார் தட்டியதோடு, தமிழ் மரபு சீர் குலைந்துவிடக் கூடாது என்று போராடி நாஞ்சில் நாட்டைத் தமிழகத்தோடு இணைத்த தீரர்.

காமராஜர்: தமிழ் இனத்தில் ஒரு சாதாரண நாடார் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் `கிங்மேக்கரான’ மாமனிதர்; பச்சைத் தமிழர். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ஏழைகளுக்கு `கல்விக்கண்’ திறக்கப்பட்டது. சத்துணவு கிடைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர். எல்லா சமூகத்தாருக்காகவும் உழைத்த கர்ம வீரர். `நாம் பெற்ற செல்வம்’ என்று ஒவ்வொரு நாடாரையும் பெருமை கொள்ளச் செய்தவர். நாடார் இனத்துக்கே பெருமை சேர்த்தவர்.

கே.டி.கோசல்ராம்: பாலைவனம் போல் வறண்டு கிடந்த பூமி. கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. இருண்ட வாழ்வோடு மக்கள் சுருண்டு வாழத் தொடங்கிய போது மழை மேகமாய் வந்து, மணிமுத்தாறு அணையை, தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்து வசூலித்து கட்ட வைத்த கடமை வீரர். சுதந்திரப் போராட்ட தியாகி.

பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்:மற்ற இனத்தவருக்கு இருப்பது போல் நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர். பேருந்துகளில் காலி இருக்கைகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் அமரக் கூடாது என்று இருந்த நிலையை உடைத்தெறிந்து அவர்களை சரிசமமாக உட்கார வைத்தவர். சென்னையில் உள்ள பாண்டிபஜார் இவரது பெயரில் உருவானதே.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | 4 Comments »