இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவேண்டும்: அமெரிக்க அரசுத்துறை துணைச் செயலர் கருத்து
![]() |
![]() |
ரிச்சர்ட் பவுச்சர் |
சார்க் மாநாட்டின் போது அமெரிக்காவின் சார்பில் பார்வையாளராக கலந்து கொண்ட அரசுத்துறை துணைச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மேம்பட வேண்டும் என வலியுறித்தினார்.
“ஜனநாயகத்தின் பலாபலன்கள் இலங்கையின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் இலங்கையில் அனைத்து பிரிவினரின் மனித உரிமைகளுமே மதித்துக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆயுதக் குழுக்கள் கலைக்கபட வேண்டும். அதிலும் குறிப்பாக சிறார்ப் போராளிகளை ஆயுதக் குழுக்கள் பயன்படுத்துவதென்பது முற்றிலுமாக நிறுத்தப்படவேண்டும். தவிர சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வல்லமை போலீஸாருக்கு இருக்க வேண்டும். இலங்கையில் தொடர்ந்தும் நடந்துவருகின்ற துஷ்பிரயோகங்கள் முடிவுக்கு வர வேண்டும். ஆட்கள் காணாமல் போதல், கடத்தப்படுதல், சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்படுதல், கொலைசெய்யப்படுதல் போன்று அடிக்கடி நடக்கின்ற விஷயங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வர வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்த கருத்துகள் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியறிக்கையில் கேட்கலாம்.
இரணைத்தீவு புலிகள் முகாமை அழித்துள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்
![]() |
![]() |
இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் இரணைத்தீவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றையும் விடுதலைப் புலிகளின் படகு ஒன்றையும் அழித்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் கடற்படையினர், இந்தத் தாக்குதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
இரணைத்தீவு பகுதியில் ஆள் நடமாட்டத்தை அவதானித்த கடற்படையின் துரித நடவடிக்கைப் படகு அணியினரும், விசேட படகு அணியினரும் அந்தத் தீவுக்குச் சென்று, அங்கு அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை அழித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் இரண்டு படகுகளையும் கைப்பற்றியிருப்பதாகக் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை, மன்னார், வவுனியா, வெலிஓயா, யாழ்ப்பாணம் முகமாலை ஆகிய களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதல் நடவடிக்கைகளில் நேற்று மாத்திரம் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இந்த மோதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
இந்தச் சம்பவங்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
‘பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை சிறப்பாக செயற்படுகிறது’- சார்க் ஆரம்ப வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி
சார்க் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் முன்னோடியாக இலங்கை தனது கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதத்தை ஒழித்து, அங்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முன்னாள் சிறார் போராளி ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சார்க் உச்சி மாநாட்டின் முதலாவது நாளான சனிக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் இருந்து மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்றைய மாநாட்டின் போது உரையாற்றிய அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களும், பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பு, சார்க் நிதியம், உறுப்பு நாடுகளுக்கிடையே நெருங்கிய உறவைப் பேணுதல் மற்றும் எரிபொருட் பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கே தமது உரைகளில் அதிக முன்னுரிமை கொடுத்திருந்ததாக, கொழும்பில் சார்க் மாநாடு குறித்த செய்திகளைச் சேகரிக்கும் எமது செய்தியாளர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
வெள்ளாங்குளத்தைக் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு
![]() |
![]() |
இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் மன்னாரில் இருந்து பூநகரிக்குச் செல்லும் ஏ32 வீதியில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தினர் முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.
இந்த முன்னேற்றத்தின் மூலம் இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள மல்லாவி, துணுக்காய் பிரதேசங்களின் தென்பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கடும் மோதல்களில் 9 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இந்தப் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மோதலில் மேலும் ஒரு இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
கேந்திர முக்கியத்துவம் மிக்க மல்லாவி மற்றும் துணுக்காய் நகரங்களை நோக்கி இராணுவத்தின் 57ஆம் படைப்பிரிவினர் நகர்ந்தபோது, நூற்றுக்கணக்கான மோர்டார் குண்டுகளை விடுதலைப் புலிகள் ஏவியதாகவும், எனினும் நிலைமையை படையினர் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
மாங்குளத்திற்கு மேற்கே வவுனிக்குளம் பாலையடி பகுதியில் மல்லாவியை நோக்கி மூன்று முனைகளில் வெள்ளிக்கிழமை காலை முன்னேற முயன்ற இராணுவத்தினரை எதிர்த்து தாங்கள் நடத்திய தாக்குதல்களில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதேவேளை, வெள்ளாங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 10 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. அத்துடன் வவுனியா பாலமோட்டை மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் மேலும் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
‘பத்தாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்தன’- கிளிநொச்சி அரசாங்க அதிபர்
![]() |
![]() |
இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்) |
அண்மைக்காலமாக வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 10 ஆயிரம் குடும்பங்கள் புதிதாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார்.
மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள 7000 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்குப் பிரதேசகங்களில் இருந்து 1500 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் இருந்து மேலும் 1550 குடும்பங்களுமாக 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் வடமேற்கே உள்ள பூநகரி பிரதேச செயலகப் பிரதேசத்திலிருந்து மக்கள் ஏறக்குறைய அனைவருமே பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.
தமிழக மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிக்க வழிசெய்யும் வரைவு ஒப்பந்தம் இலங்கையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது
தமிழக மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிக்க, இலங்கை அரசால் உரிமங்கள் வழங்கப்படுவதற்கு வழிவகுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம், தற்போது இலங்கை அரசின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி தெரிவித்தார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தெற்காசியக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டில் கலநதுகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை கொழும்பு செல்ல இருக்கும் நிலையில், மீனவர் பிரச்சினை தொடர்பாக வியாழக்கிழமை புதுடெல்லியில் தமிழக மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புத்துறைச் செயலர், கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில், தலைமைச் செயர் திரிபாதி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.
அப்போது, தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினை தொடர்பாகவும், அதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்தும், கச்சத்தீவு உடன்படிக்கையை மறுஆய்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், பிரதமரிடம் எம்.கே. நாராயணன் கருத்துக்களைத் தெரிவிப்பார் என்று எமது புதுடில்லிச் செய்தியாளர் தங்கவேல் கூறுகிறார்.
“இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது”
![]() |
![]() |
பாதுகாப்பு கோரும் மீனவர்கள் |
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்றாலும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் தமிழகத்தின் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை, 5 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், மூன்று மீனவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இருவர் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடற்படையும், கடலோரக் காவல் படையும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருப்பதாக தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி தெரிவித்தார்.
மன்மோகன் சிங் கொழும்பு பயணம்
![]() |
![]() |
மஹிந்தவை சந்திக்கவுள்ளார் மன்மோகன் |
கொழும்பில் நடைபெறும் சார்க் நாடுகளில் உயர்நிலை மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு செல்கிறார்.
கொழும்பு செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதியை வெள்ளிக்கிழமையே சந்தித்துப் பேசுவார் என இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்தால், விசாரணை விவரங்களை இந்திய அரசிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருநாட்டு அதிகாரிகள் நிலையில் நடைபெற்ற கூட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டதாகவும் நவ்தேஜ் சர்னா தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு
![]() |
![]() |
கடற்புலிகள் |
விடுதலைப் புலிகளில் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்த 46 வயதான டேனியேல் எனப்படும் தம்பியண்ணா என்பவரை கைது செய்திருப்பதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியைச் சேர்ந்த இவர், கடற்புலிகளின் தலைவரான சூசை அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்பட்டு வந்ததாகவும், கடற்புலிகளுக்கு தேவையான நீச்சல் உபகரணங்கள், படகுகள், தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் வெடி பொருட்கள் ஆகியவற்றை இலங்கைக்கு கடத்தியதாகவும் தமிழக காவல்துறை கூறியுள்ளது.
நீதிமன்ற உத்தரவையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறையில் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்துவந்ததில் அவர் ஒரு முக்கியமான நபர் என்று தமிழக காவல்துறையில் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரியான ஜாஃபர் சேட் தமிழோசையிடம் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அவர் தமிழகத்துக்கு வந்ததாகவும், இலங்கைக்கு பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வெளியிட்ட தகவலையடுத்து, தொடர்ந்து தம்பியண்ணா கண்காணிப்பட்டு பிறகுதான் கைது செய்யப்பட்டதாகவும் ஜாஃபர் சேட் மேலும் தெரிவித்தார்.
இது குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையின் வடக்கு பகுதிக்கு பாதுகாப்பு செயலர் விஜயம்
![]() |
![]() |
கோத்தபாய ராஜபக்ஷ |
இலங்கையின் வடக்கே வன்னிக் களமுனைகளில் வெற்றிகரமாக முன்னேறிச் செல்கின்ற இராணுவ தளபதிகளையும் சிப்பாய்களையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் பாராட்டி ஊக்குவித்ததாகப் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது.
மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கு விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் விமானப்படைத் தளபதி மார்ஷல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகள் உடன்சென்றுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு அநதப் பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாகவும், கள்முனைகளில் உள்ள இராணுவ உயரதிகாரிகளுடன் இவர்கள் கலந்தாலோசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் இருந்து வெளியேறி வருகின்ற பொதுமக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஷ தனது விஜயத்தின்போது கவனம் செலுத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
புலிகளின் பயிற்சி முகாமை அழித்துள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவுக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றை விமானப்படையினர் புதனன்று வான்வழி குண்டுத்தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
கரும்புலிகளின் பயிற்சித் தளமே இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் வவுனியா, மன்னார், வெலிஓயா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய வன்னிக் களமுனைகள் பலவற்றில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத்தின் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் செவ்வாயன்று மாத்திரம் 16 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
இதேவேளை, வவுனியா மாவட்டம் பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கை இன்று விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலில் இராணுவத்தினருக்கு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
எனினும் இது குறித்து இராணுவ தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
மடு ஆலயத்துக்கு மன்னார் ஆயர் விஜயம்
![]() |
![]() |
மடு ஆலயத்தில் ஆயர் |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து, இராணுவத்தினரின் வசம் வந்துள்ள மடுக்கோவில் பகுதியைப் பார்வையிடுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசையுடன் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு திரும்பியுள்ள, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள் ஆலயத்தின் திருத்த வேலைகள் யாவும் இராணுவத்தினரால் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தாங்களே இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என இராணுவத்தினரிடம் கேட்டிருந்த போதிலும் அதற்கான அனுமதி வழங்கப்படாமல் தமக்கும் தெரிவிக்காமல் இராணுவத்தினரே அனைத்து வேலைகளையும் செய்திருப்பதை அங்கு தாங்கள் கண்டதாகவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் மடுக்கோவில் இன்னும் தம்மிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபமும் கடந்த வாரம் மன்னார் ஆயர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும் தற்போது மடுக்கோவில் ஆயர் இல்லத்திடம் ஒப்படைக்கப்படாததன் காரணமாக ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருவிழா இம்முறை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
![]() |
![]() |
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் |
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றிலே இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுக்கும், துணை அமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நுவரெலிய நீதிமன்றம் 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற சதாசிவம் அவர்களுடனான அலுவலக உரிமை குறித்த வழக்கு ஒன்றில், முன்னதாக நீதிமன்றம் அந்த அலுவலகத்தை சதாசிவம் பயன்படுத்த அனுமதித்திருந்தது.
ஆயினும், அந்த உத்தரவை குற்றவாளிகள் மீறியதாகக் கூறி சதாசிவம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட தற்போதைய வழக்கிலேயே இவர்கள் மூவருக்கும் இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கச்சதீவு உடன்படிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது
![]() |
![]() |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா |
இந்திய மீனவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றுத் தரும் வகையில், கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
கொழும்பில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டின்போது, இது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்தியப் பிரதமர் பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா.
இந்தியா – இலங்கை இடையிலான கடல் பகுதியில், கடல் கண்ணிவெடிகளைப் பரப்ப இலங்கையை இந்தியா அனுமதிக்கக் கூடாது என்றும், இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இலங்கை படையினர் பிரவேசித்திருப்பதாகக் கூறுகிறது பாதுகாப்பு அமைச்சகம்
![]() |
![]() |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்புறங்களில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினர் குறிப்பிட்டு அடையாளம் சொல்ல முடியாத இடம் ஒன்றில் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
மன்னார் பூனகரி வீதியில் மூன்றாம்பிட்டி பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளில் 5 பேரின் சடலங்கள் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
இதேவேளை 5 விடுதலைப் புலிகளின் சடலங்களை இராணுவத்தினர் வெள்ளியன்று மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வன்னிக் களமுனைகளின் பல இடங்களிலும் நேற்று இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் 20 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை மேற்கு, துணுக்காய் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு தொகுதியினர் ஏ9 வீதியின் இரு பக்கங்களிலும் மாங்குளம் தொடக்கம் கிளிநொச்சி வரையில் மரங்களுக்கு கீழ் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.