பாலம்பிட்டி பாலத்தைக் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு
இலங்கையின் வட மேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பாலம்பிட்டியில் உள்ள பாலம் ஒன்றினை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
இந்தப் பகுதியில், விடுதலைப் புலிகளுடன் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற மோதல்களின்போது, முன்னேறிச் சென்ற படையினருக்கு ஆதரவாக, இலங்கை விமானப்படையினர் பாலம்பிட்டி பாலத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் தளம் ஒன்றின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.
இந்தப் பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.
பிள்ளையான் செவ்வி
 |
|
பிள்ளையான் |
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களது இருப்பிடத்தில் இல்லாவிட்டாலும், அதற்கு அருகில் இருக்கின்ற இடத்தில் குடியேற்ற முயல்வேன் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அந்த அமைப்பின சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிடுபவருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தமது மாகாண சபைக்கு உட்பட்ட விவகாரமாக இல்லாத பட்சத்திலும், அந்த மக்கள் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது விடயத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமது அமைப்பினரின் பாதுகாப்பு கருதியே தாம் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறும் பிள்ளையான், விடுதலைப்புலிகள் பலவீனமடைந்து, தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் தாம் ஆயுதங்களைக் களைவோம் என்றும் கூறினார்.
பிள்ளையான் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கிழக்கு மாகாணத் தேர்தல் குறித்து இடம்பெயர்ந்த மக்கள்
 |
|
இடம்பெயர்ந்தோரின் குடியிருப்புகள் |
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒன்றைரை வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் மக்களில் பலர், இந்தத் தேர்தல்கள் குறித்து தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் பற்றிய தமது கருத்துக்கள், வேட்பாளர்களின் வாக்குறுதிகள், வாக்களிப்பதில் தமக்கு ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பவை பற்றியெல்லாம், அங்கு சென்ற தமிழோசைத் தயாரிப்பாளர் சுவாமிநாதனிடம் அவர்கள் பேசியுள்ளனர்.
இவை குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையின் சில மாகாணங்களில் மர்மமான சிறுநீரக நோயினால் 6000 பேர் பாதிப்பு
 |
|
சிறுநீரகம் |
இலங்கையின் வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அண்மைக்காலமாக அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயின் தாக்கத்திற்கு சுமார் ஆறாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஆளாகியிருப்பதாகவும், சில உயிரிழப்புக்கள் இடம்பெற்றதாகவும் தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்தநோயின் காரணிகள் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காகவும், நோய்க் காரணியைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் வகையிலும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின், உலக சுகாதார நிறுவனத்தின் உயர் நிபுணத்துவக் குழுவொன்று இன்று இலங்கை வந்திருக்கிறது.
இந்த நோயின் தாக்கம் குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட, உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தேசிய நிபுணர், டாக்டர் ஆர். கேசவன், இந்த நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோரின் சிறுநீரகம் செயலிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆனாலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இதற்கான காரணிகளைக் கண்டறிய முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நோய் கடந்த ஐந்து வருடங்களாக இருந்துவருகின்ற போதிலும், அண்மைக்காலமாக இது குறித்த முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 மே, 2008
விடுதலைப் புலிகளை ஆதரித்ததாக பிரித்தானியாவில் மேலும் ஒருவர் கைது.
 |
|
விடுதலைப் புலிகள்-ஆவணப் படம் |
இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரத்தானிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் தென்மேற்கு நகரமான ஸ்விண்டனில் 51 வயதான ஒருவர்,
வெளிநாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளை நடத்த ஏற்பாடு செய்து, அதற்கு ஊக்குவித்து ஏற்பாடுகளை செய்தார் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
இதே விசாரணை தொடர்பாக கடந்த வாரம் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பிரிட்டன் 2001 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மே, 2008
இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார்
இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த்.
புதுதில்லியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் கூட்டணி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் விஜயகாந்திடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “தமிழர்களுக்கு எதிராகக் கொடுப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள். அது வியாபார ரீதியாகக்கூட இருக்கலாம்’’ என்றார்.
“சீனாவையும், பாகிஸ்தானையும் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள இலங்கை விரும்புகிறது. அது நடக்கக்கூடாது என்று இந்தியா கருதுகிறது. அதுதான் அங்கிருக்கும் சின்னச் சின்னப் பிரச்சினைகள். அதனால், அதுபற்றி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் விஜயகாந்த்.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கிழக்கில் ஜனநாயக ரீதியான தேர்தலை உறுதிப்படுத்தும்படி ஐ.தே.க தேர்தல் ஆணையாளரிடம் மனு
 |
|
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் |
இலங்கையின் கிழக்கில் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி நடக்கவுள்ள மாகாணசபைத் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடாத்தப்படுவதனை உறுதிப்படுத்தும்படி கோரி இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சி இன்று கொழும்பு ராஜகிரிய தேர்தல் செயலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.
கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ரவி கருணாநாயக்க, மூத்த பாராளுமன்ற உறுப்பினர் மஹரூப், மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் முன்னணியின் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்குள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைத் தேர்தலுக்கு முன்னர் களையும்படி கோரிக்கை விடுத்தனர்.
இதன் பின்னர் தேர்தல் ஆணையாளரிடம் இது தொடர்பில் இவர்கள் சார்பில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
வவுனியாவில் கிளெமோர் தாக்குதலில் இருவர் பலி
இலங்கையின் வடக்கே வவுனியா நகர மத்தியில், நீதிமன்ற வளாகத்திற்கும் பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் இன்று மாலை 5.45 மணியளவில் இராணுவத்தினருக்கு உணவு எடுத்துச் செல்லும் ட்ரக் வண்டியை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இரண்டு சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் சிறு சேதத்திற்கு உள்ளாகியதாகவும், படையினருக்குப் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
புளொட் உறுப்பினர் சுட்டுக்கொலை
இதற்கு சற்று முன்னதாக புளொட் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரும் முக்கியஸ்தருமாகிய பவன் என்றழைக்கப்படும் செல்வராசா என்பவர் பூந்தோட்டம் சந்திக்கருகில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இவருடன் பயணம் செய்த மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வீதியோரத்தில் மறைந்திருந்தவர்கள் துப்பாக்கிப்பிரயோகத்தின் பின்னர் கொல்லப்பட்டவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளையும் துப்பாக்கிப்பிரயோகம் செய்தவர்கள் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் மன்னார் முன்னரங்கப் பகுதியில் முன்னேறி வரும் இராணுவத்தினர் சாளம்பைக்குளம் என்ற கிராமத்தை நேற்று அதிகாலை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போது கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 05 மே, 2008
‘வன்முறை காரணமாக நியாயமான தேர்தலுக்கான சூழல் இலங்கை கிழக்கு மாகாணத்தில் இல்லை’
இலங்கையில் எதிர்வரும் சனிக்கிழமை மாகாண சபைக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இதுவரை 50க்கும் மேற்பட்ட தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் தேர்தல் செயலகத்தின் தகவல்களின்படி அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் தீவைப்பு உட்பட அம்பாறை மாவட்டத்தில் 29 வன்முறைகள் குறித்த முறைப்பாடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 முறைப்பாடுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 12 முறைப்பாடுகளும் என இது வரை 61 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும் இது தேர்தல் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கஃபே அமைப்பின் பேச்சாளரான கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் வாக்காளர் அட்டைகள் பறிக்கப்பட்டதாகவும், இவை குறித்த முறைப்பாடுகளை தாம் தேர்தல் ஆணையர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு கொண்டுசெல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, தற்போது கிழக்கு மாகாணத்தில் உருவாகிவருகின்ற நிலைமை அங்கு ஒரு நியாயமான, நீதியான தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்பதையே காட்டுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
 |
|
சித்தார்த்தன் |
இதனிடையே, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க் கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழோசையிடம் பேசிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், வேட்பாளர்கள் மிரட்டப்படுகின்ற மற்றும் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவரவே செய்வதாகக் கூறினார்.
வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுவது ஒருபுறம் இருந்தாலும், வாக்காளர்களாகிய மக்கள் அச்சுறுத்தப்படுகின்ற விடயமே தமக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும், இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக மக்கள் உண்மையாகவே பயந்துபோயிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இப்படிப்பட்ட மிரட்டல்களைச் செய்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் சார்பில் பேசவல்ல ஆஸாத் மௌலானா மறுத்துள்ளார்ர்.
 |
|
அமைச்சர் தேவானந்தா |
இலங்கை சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் கருத்து வெளியிடுகையில், ஓரளவு பிரச்சினைகள் இருப்பது உண்மைதான் என்றாலும் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட நிலைமையே காணப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
இவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
முகமாலையில் உக்கிர சண்டை – சேத விபரங்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்
இலங்கையின் வடக்கே முகமாலை மற்றும் வடமேற்கே மன்னார் பகுதிகளில் இராணுவத்தினருடன் திங்களன்று இடம்பெற்ற சண்டைகளில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20 படையினர் காயமடைந்துள்ளதாகவும் கொல்லப்பட்ட படையினரின் 2 சடலங்களையும் இராணுவ தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாக விடுதலைப் புலிகளின் தெரிவித்திருக்கின்றனர்.
எனினும் இந்தத் தாக்குதல்களில் 5 படையினரே கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், 2 படையினர் காணாமல் போயிருப்பதுடன், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.
முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகளிடமிருந்து தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதியின் முன்னணி காவலரண்களைத் தாக்கி உட்புகுவதற்கு விடுதலைப் புலிகள் திங்கட்கிழமை காலை முயற்சித்ததாகவும், அந்த முயற்சி படையினரின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த மோதல்கள் குறித்து மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றில் தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பகுதியை உடைத்துக்கொண்டு இராணுவமே முன்னேறுவதற்கு முயற்சித்ததாகவும், அந்த முயற்சி தமது எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
இவை குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 மே, 2008
இலங்கையின் வடக்கில் தொடரும் வன்முறை
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் இரு தரப்பிலும் 14 பேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
மன்னார் மற்றும் மணலாறு பிராந்திய முன்னரங்குகளில் இடம்பெற்ற நேரடி மோதல்கள் மற்றும் வீதியோரக் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் என்பவற்றில் 11 விடுதலைப் புலிகளும் 3 படையினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.
இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் வியாழக்கிழமை மன்னார் திருக்கேதீஸ்வரத்திலிருந்து வேட்டையாமுறிபை நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினரை கறுக்காய்குளம் பகுதியில் விடுதலைப் புலிகள் எதிர்த்து தாக்குதல் நடத்தி அவர்களின் முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளதாகவும், இந்தச் சண்டைகளின்போது 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையே, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடைபெற இன்னமும் 7 நாட்களே இருக்கும் வேளையில், இது வரை 53 தேர்தல் வன்முறைகள் பதிவாகியிருப்பதாக பொலிஸ் தேர்தல் செயலகம் கூறுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் 26 வன்முறைகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வன்முறைகள், திருகோணமலை மாவட்டத்தில் 9 வன்முறைகள் என பதிவாகியுள்ளது.
இந்த வன்முறைகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தேர்தல் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மே, 2008
இலங்கையில் தொடரும் மோதல்கள்
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடபகுதியில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மேலும் கடும் மோதல்கள் எனச் செய்திகள் கூறுகின்றன.
அரச பாதுகாப்புத்துறை அறிக்கையொன்று மன்னார் மாவட்டத்தில் நடந்த மோதலில் குறைந்தது 13 புலிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு அரச படையினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.
ராணுவத் தரப்பின் வேறொரு செய்தி, மணலாறு – வெலிஓயா பகுதியில் மேலும் 17 புலிகளும் 7 படையினரும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
விடுதலைப் புலிகளிடமிருந்து இவை குறித்து எந்த தகவலும் கிடையாது.
சண்டை நடக்கும் பகுதிகளுக்குச் செய்தியாளர்கள் செல்வதற்கு அரசு தடையிருப்பதால் இத்தகைய செய்திகளை ஆராயந்து சொல்வது வழமையாக கடினமாது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் 3 முக்கிய சட்டங்கள் – ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க
 |
|
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க |
இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றுமானால் மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் 3 முக்கியமான சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
ஞாயிற்றுகிழமையன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, இந்த சட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக தமது கூட்டணிக் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைதல், இயற்கை மற்றும் யுத்த அனர்த்தங்களின் போது இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தல்,சுதந்திரமான முறையில் மீன் பிடித் தொழில் ஆகியவற்றறை உள்ளடக்கியே உத்தேசிக்கப்பட்டுள்ள 3 சட்டங்களும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் வடக்கில் அரசு இன்னமும் எதனையும் கைப்பற்றவில்லை என்றும், வடக்கு இன்னும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அங்கே இடைக்கால நிர்வாகம் எதற்கு என்றும் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.
மடுக்கோவில் பிரதேசத்தை யுத்தமில்லாத அமைதிப்பிரதேசமாக்க வேண்டும் என வலியுறுத்தல்
 |
|
மடு தேவாலயம் |
இலங்கையின் வடமேற்கே இராணுவத்தின் பாதுகாப்பில் வந்துள்ள மடுக்கோவில் பிரதேசத்தை யுத்தமில்லாத அமைதிப்பிரதேசமாக்க வேண்டும் என மன்னார் ஆயரும், இலங்கையின் ஆயர் மன்றமும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், இத்தகைய கோரிக்கை அரசாங்கத்திடம் விடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
ஆயினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், மடுக்கோவில் அமைதிப்பிரதேசமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் ஒரு வருடத்திற்கு முன்பே எழுத்து மூலமாக விடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்பின்பு நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவரும், ஜனாதிபதியுமாகிய மகிரந்த ராஜபக்ச அவர்களை இரண்டு தடவைகள் நேரடியாகச் சந்தித்து இந்தக் கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தியதாகவும் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
அத்துடன் இந்தக் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் கொழும்பு ஆயர், மற்றும் மடுக்கோவில் பரிபாலகர் ஆகியோர் உடன் இருக்க தமக்கு உறுதியளித்ததாகவும், ஆயினும் உரிய நடவடிக்கைகள் எதுவும் அது தொடர்பில் எடுக்கவில்லை என்றும் மன்னார் ஆயர் தெரிவித்தார்.
இது குறித்த மேலதிக தகவல்களுடன், இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும் எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் குறித்த விசாரணைக்காக மூவர் கைது
 |
|
படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் |
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் இருவர் வேல்சில் கைது செய்யப்பட்டதாகவும் மூன்றாவது நபர் லண்டனில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
வெளிநாடுகளில் தீவிரவாதச் செயல்களை, ஏற்பாடுகளை செய்ய முற்பட்டது, தீவிரவாத செயல்களை தூண்டியது அல்லது தீவிரவாத செயல்களுக்காக தயார் செய்தது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு 2001 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.