வட இலங்கை மோதல்களில் விடுதலைப் புலிகள் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், வன்னிக் களமுனைகளிலும், யாழ்ப்பாணத்தில் கிளாலி களமுனைகளிலும் சனியன்று இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
வவுனியா பாலமோட்டை முன்னரங்க பகுதிகளிலும், வெலிஓயா பகுதியிலும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நேற்று நடத்திய தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் விபரம் வெளியிட்டுள்ளது. பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
யாழ்ப்பாணம் கிளாலி பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
ஆனால் விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்களோ, வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம், நவ்வி ஆகிய பகுதிகளில் இருந்து மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மடு தேவாலயம் திரும்பியது மாதா திருச்சொரூபம்
![]() |
மாதா திருச்சொரூபம் |
இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலுக்கு, மன்னார் ஆயர் இல்லத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்த மடு மாதாவின் திருச்சொரூபம், சனிக்கிழமை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டு கொலுவேற்றப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்.
கடந்த நான்கு மாதங்களாக உரிய பராமரிப்பின்றி இருந்த மடுக்கோவிலின் திருத்த வேலைகள் முடிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, மடுக்கோவிலை பூஜை வழிபாட்டுக்குரிய புனிதமாக்கும் சமய வைபவங்களை மேற்கொள்வதற்காக கத்தோலிக்க மதகுருமார்கள் திங்கட்கிழமை அங்கு செல்லவிருப்பதாகவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்தார்.
வட இலங்கையில் அறுபதினாயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை இலங்கை அமைச்சர் உறுதி செய்துள்ளார்
![]() |
![]() |
அமைச்சர் ரிசாத் பதியுதீன் |
இலங்கைப் படையினருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இடையில் இலங்கையின் வட பகுதியில் தொடரும் மோதல்கள் காரணமாக அப்பகுதியில் அறுபதினாயிரம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் சபையின் முகவராண்மை கூறியதை இலங்கையின் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இருந்த போதிலும், அங்குள்ள மக்களுக்கான நிவாரண உதவிகள் ஆகஸ்டு மாதம் 15 திகதி வரைக்குமான அளவுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனாலும், அங்குள்ள அரசாங்க அதிகாரிகளை தற்போதைய சூழ்நிலையில் தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதில் சில சிரமங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவை குறித்து அமைச்சர் ரிசாத் பதியுதீனின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
விமானக் குண்டுவீச்சில் விடுதலைப்புலிகளின் தளங்கள் அழிக்கப்பட்டதாக இராணுவம் கூறுகிறது- பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் அறிவிப்பு
![]() |
![]() |
விமானக் குண்டு வீச்சு( ஆவணப்படம்) |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும், சனிக்கிழமை காலையிலும் விமானப்படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதம் ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ள விஸ்வமடுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றின் மீது சனிக்கிழமை காலை 10 மணிக்கும், புதுக்குடியிருப்புக்கு வடக்கே உள்ள இரணைப்பாலையில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு தளம் ஒன்றின் மீது இன்று காலை 9.55 மணிக்கும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தத் தளங்களை அழித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.
பூநகரி பகுதியில் உள்ள நாகதேவன்துறைக்கு அருகில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு நிலையத்தையும், அதனோடு இருந்த படகுகள் நிறுத்துமிடத்தையும் விமானப்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் குண்டு வீசி தாக்கி அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருக்கின்றது.
எனினும் இரணைப்பாலை பகுதியில் இன்று காலை விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீதே குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் ஆசிரியர் ஒருவர் உட்பட 2 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
ஆனால், அக்கூற்றினை விமானப்படையினர் மறுத்துள்ளனர். இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.