Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Katcha Theevu’

Breakaway LTTE, TMVP leader Karuna back in Colombo; US ‘concerned’ over Sri Lanka rights, attacks on media; Victor Perera the new Governor of the Northern Province

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2008

சுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினேன்: கருணா

முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.

இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

இவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் கருணா

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய கர்ணல் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்கு நேற்று(புதன்கிழமை) திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்காக பேசவல்ல அதிகாரியான டோமினிக் வில்சன் தமிழோசையிடம் உறுதி செய்தார்.

கருணா இலங்கை திரும்பியுள்ளதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உறுதி செய்துள்ளார்.

வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியவுக்குள் நுழைந்த வழக்கில் பிரித்தானிய அரசால் கைது செய்துபட்ட கருணா அவர்களுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் அவர் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே கருணா இலங்கை திரும்பிவிட்டாலும், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கைக் கடற்பரப்பரப்பில் நுழைந்த பல நூறு இந்திய மீன்பிடிப் படகுகள் விசாரணையையடுத்து விடுவிப்பு

இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்
இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்

இலங்கைக் கடற்பரப்பின் மன்னார் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல நூறு இந்திய மீன்பிடி படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்றுமாலை கைதுசெய்து, பலமணிநேர தீவிர விசாரணைகளின் பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, நேற்று, புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவு பகுதியை நோக்கி இந்த இந்திய மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தவேளை, நெடுந்தீவிற்கு மன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, தலைமன்னார் கடற்கரைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைத்து இவர்கள் மீது கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று
இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று

இதன்பின்னர் சுமார் இரவு 10 மணியளவில் இதில் 299 இந்திய படகுகள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சிய ஒரு படகில் திசையறிகாட்டிபோன்ற கருவிகள் காணப்பட்டதால், மேலதிக சோதனைக்காக அது தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இன்று காலை அதுவும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது இந்திய மீனவர்களிடமிருந்தோ அல்லது அவர்களுடைய படகுகளில் இருந்தோ சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, இந்திய மீனவர்கள் இவ்வாறு அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்துவருவது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைப் படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததை கண்டிக்கும் இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவரான போஸ் அவர்கள், ஆனால், தமது மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குள் சென்று மீன்பிடிப்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

இது குறித்த போஸ் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்பு

விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி
விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி

இந்த வார முற்பகுதியில் இலங்கை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற விக்டர் பெரேரா அவர்கள் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்திருந்த வடகிழக்கு மாகாணம், நீதிமன்றத் தீர்பொன்றின் பின்னர் இருவேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கென தனியொரு ஆளுனர் நியமிக்கப்படிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணிபுரிந்துவரும் முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவே வடக்கு மாகாண ஆளுனராகவும் கடமையாற்றிவந்தார்.


இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை

ஊடகங்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பதாக கவலை

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தமக்கு மகிழ்சியளிக்கவில்லை என்று அமெரிக்கா இலங்கையிடம் கூறியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைச் சூழல் குறித்தும் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் குறித்தும் அமெரிக்கா அதிகமாக கவலைப்படுவதாக, ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலரான இவான் பைஜன்பாம், இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து உடகவியலாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு அமைச்சகக் குழு அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் பைஜன்பாம் தெரிவித்துள்ளார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் – பெட்டகம்

பாதை திறக்காத நிலையில் பயணத்தின் பாதிவழியில்…

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையிலான ஓமந்தை சோதனைச்சாவடி 3 ஆவது நாளாக இன்றும் திறக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பகுதிக்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் என்பனவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வன்னிப்பிரதேசத்திற்குச் செல்வதற்காக வவுனியாவில் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றார்கள்.

கையிலிருந்த பணம் செலவழிந்துவிட்டதனால் சாப்பிடவும் வழியில்லை செலவுக்கும் வழியில்லை என இவர்கள் வவுனியா செயலக அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து, விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை OFFER என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அரச அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்தின்மை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நிவாரண விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »