Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Jeyamalini’

Director Vittalacharya: Jeganmohini – Tamil Movie History

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2008

திரைப்பட வரலாறு :(910)
“மாயாஜால மன்னன்” விட்டலாச்சாரியா
“ஜெகன்மோகினி” மூலம் சாதனை படைத்தவர்

மாயாஜாலப் படங்கள் எடுத்து, பெரும் புகழ் பெற்றவர் விட்டலாச்சாரியா. இவர் தெலுங்கில் எடுத்த “ஜெகன்மோகினி”, தமிழில் “டப்” செய்யப்பட்டு நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படத் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கிய விட்டலாச்சாரியா, 1920-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி அருகில் உள்ள பெல்லே என்ற ஊரில் பிறந்தார்.

தந்தை பெயர் பத்மநாபா ஆச்சாரியார். இவர் ஆயுர்வேத வைத்தியர்.

தாயார் பெயர் சீதம்மா.

தெருக்கூத்து

கர்நாடக மாநிலத்தில், கிராமங்களில் “பைலாட்டா” என்ற கலை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இது, நம் ஊர் தெருக்கூத்து போன்றது. இதில் பங்கேற்பவர்கள், ஒப்பனையிலும் ஆட்டத்திலும் `கதகளி’ நடனக் கலைஞர்கள் போலத் தோன்றுவார்கள்.

இந்த கலை நிகழ்ச்சியில், விட்டலாச்சாரிக்கு மிகுந்த ஆர்வம். விடிய விடிய வேடிக்கை பார்ப்பார். இது, அவரது தந்தைக்கு கொஞ்சமும் பிடிக்காது.

பெல்லே கிராமம், கடற்கரைக்கு அருகே இருந்தது. விட்டலாச்சாரி 10வயது சிறுவனாக இருக்கும்போதே, மீனவர்களுடன் கட்டு மரத்தில் ஏறி கடலுக்குள் போய் விடுவார். மாலையில்தான் வீடு திரும்புவார்.

ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த தன் மகன் இப்படி தெருக்கூத்தில் ஆர்வம் காட்டுவதும், மீனவர்களுடன் சேர்ந்து கொண்டு அபாயகரமான கட்டுமரப்பயணம் மேற்கொள்வதும், தந்தைக்கு கோபத்தை அளித்தன. விட்டலாச்சாரிக்கு அடிக்கடி அடி-உதை விழும். ஆனாலும், அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

150 மைல் நடந்தார்!

ஒருநாள் தந்தை கடுமையாகத் திட்டிவிடவே கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார், விட்டலாச்சாரியா. கட்டிய வேட்டி – சட்டையுடன் புறப்பட்டவர், உடுப்பியிலிருந்து மைசூருக்கு 150 மைல் தூரம் நடந்தே போய்விட்டார்! அப்போது அவருக்கு வயது 18 இருக்கும்.

விட்டலாச்சாரியாவுக்கு சிறு வயது முதலே உடற்பயிற்சிகளில் ஆர்வமுண்டு. உடம்பை கட்டுமஸ்தானாக வைத்திருப்பார். மைசூருக்குப் போய், அங்கு தனக்குத் தெரிந்த நண்பர்களைச் சந்தித்தார்.

மைசூரில் அவர் நண்பர்கள் 8 பேர் சேர்ந்து டூரிங் டாக்கீஸ் நடத்தி வந்தார்கள். தங்கள் கூட்டணியில் இவரையும் சேர்த்துக் கொண்டார்கள். எதற்காக இவரைச் சேர்த்துக் கொண்டார்கள் தெரியுமா? அப்போதெல்லாம் அந்த டூரிங் டாக்கீஸ் நடமாடும் திரையரங்காக பல பகுதிகளுக்கு இடம் பெயரும் – சர்க்கஸ் மாதிரி.

ஒவ்வொரு நாளும் வசூலாகும் பணத்தை, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். நள்ளிரவில் கொண்டு போகும் பணத்துக்கு, பாதுகாப்பாக ஓர் ஆள் இருக்கட்டும் என்றுதான் விட்டலாச்சாரியாவை சேர்த்துக் கொண்டார்கள்.

அதுமட்டுமல்ல; படத்தை திரையிடும்போது ஏற்படும் பிரச்சினைகள், கூட்டத்தில் நடக்கும் தகராறுகள் ஆகியவற்றை சமாளிக்கும் பொறுப்பையும் இவர் ஏற்றுக்கொண்டார்.

ஏற்கனவே கலை ஆர்வம் கொண்டவர் ஆதலால், திரையரங்கில் ஓடிய படங்களை ஒன்று விடாமல் பலமுறை பார்த்து, தன் ரசனையை வளர்த்துக் கொண்டார்.

அந்த 8 பேர் கூட்டணியில் விட்டலாச்சாரியா சேர்ந்ததும், வசூல் குவிந்தது. ஒரு டூரிங் டாக்கீஸ், மூன்றாக வளர்ந்தது. ஒரே சமயத்தில் வெவ்வேறு 3 இடங்களில் படங்கள் ஓடும். வசூலின்போது, விட்டலாச்சாரியா பணப் பாதுகாப்பு பொறுப்பில் இருப்பார். இப்படி ஊர் ஊராக இடம் பெயர்ந்து, ஆங்காங்கே 1 மாதம், 2 மாதம் என்று முகாம் இட்டு படங்களை திரையிட்டு வந்தார்கள்.

வி.சாந்தாராம்

ஒருமுறை மைசூருக்கு பிரபல இந்திப்பட இயக்குனர் வி.சாந்தாராம் வந்திருந்தார். தன் “ஜனக் ஜனக் பாயல் பாஜே” படத்தின் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற இடங்களை பார்க்க அவர் வந்திருந்தார்.

அவரை விட்டலாச்சாரி யா பல இடங்களுக்கு அழைத்துக்கொண்டு போய் காட்டினார். இத னால் சாந்தாராமுடன் நெருக்கமானார். படப்பிடிப்பு நடந்தபோது அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பை பெற்றார்.

ஏற்கனவேசினிமா ஆர்வம் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பை கண்கூடாக பார்க்கும் வாய்ப்பு அவருக்கு பெரிய ஈடுபாட்டை தூண்டியது. திரைப்படம் உருவாகும் முறையை கண்டு, கேட்டு, உற்று நோக்கி, விசாரித்து அறிந்து கொண்டார்.

டூரிங் டாக்கீஸ் தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்தில், `எத்தனை நாள்தான் எப்படி ஊர் ஊராக சுற்றுவது’ என்று யோசித்த நண்பர்கள் ஒரு முடிவெடுத்தனர்.

சினிமா ஸ்டூடியோ

தியேட்டர்களை நல்ல லாபத்துக்கு விற்றனர். இந்த 9 பேரும் சேர்ந்து “நவஜோதி ஸ்டூடியோ” என்று மைசூரில் ஒரு ஸ்டூடியோவை தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் அதிலிருந்து விட்டலாச்சாரியாவும், அவரது நண்பர் சங்கர்சிங் என்பவரும் வெளியேறி, “மகாத்மா பிக்சர்ஸ்” என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார்கள்.

அப்போது சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. காந்தி மீது ஈடுபாடு கொண்டதால் அவரது பெயரை தங்கள் நிறுவனத்துக்கு வைத்தார்கள்.

காந்தியின் கொள்கையில் பற்றும், ஆர்வமும் கொண்ட விட்டலாச்சாரியா, சுதந்திரப் போராட்ட மறியல்களில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார். சிறையில் 6 மாதங்கள் இருந்தபின், விடுதலையானார். `வன்முறை கிளர்ச்சிகள் கூடாது’ என்று மகாத்மா காந்தி சொன்னதால் வன்முறை போராட்டங்களை தொண்டர்கள் கைவிட்டனர். விட்டலாச்சாரியாவும் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கினார்.

முதலில் எடுக்கப்பட்ட படம் `சீனிவாச கல்யாணம்’ என்கிற கன்னடப்படம். அதைத்தொடர்ந்து 7 படங்கள் தயாரித்தார். பிறகு, சங்கர்சிங்கை விட்டுப் பிரிந்தார்.

அதன் பிறகு, யாருடனும் கூட்டு சேர்வது தனக்குச் சரி வராது என்று முடிவெடுத்து, 1951-ல் தன் பெயரில் “விட்டல் புரொடக்ஷன்ஸ்” தொடங்கினார்.

அவருக்கு 25 வயதில் திருமணமானது. சொந்தப்பட நிறுவனம் ஆரம்பித்தபோது அவரது வயது 30.

தந்தை இறந்து விடவே, வீட்டுக்கு மூத்த பிள்ளையான இவர் மீது குடும்பப் பொறுப்பு விழுந்தது. தங்கைகள் நால்வர். ஒரு தம்பி. எல்லாரையும் கவனித்துக் கொண்டார்.

திரைப்பட வரலாறு 911
என்.டி.ராமராவை வைத்து 18 படங்கள் எடுத்தார்

தெலுங்குப்பட உலகின் சூப்பர் ஸ்டார் என்.டி. ராமராவை வைத்து, 18 படங்கள் எடுத்தவர், விட்டலாச்சாரியா.

இவர் முதன் முதலாக எடுத்த படம் “ஜெகன்மோகினி” (கன்னடம்).

முதல் படத்திலேயே இவருக்கும் டைரக்டருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. எனவே தான் தயாரிக்கும் படங்களை தானே இயக்குவது என்று முடிவெடுத்தார்.

பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள் அலங்காரமான உடைகள், தந்திரக் காட்சிகள் ஆகியவை விட்டலாச்சாரியாவின் படங்களின் சிறப்பு அம்சங்கள்.

சமூகக் கதைகள்

ஆரம்ப காலத்தில் `கன்னியாதானா’, `மனே தும்பிதே ஹென்னோ’ போன்ற சமூகக் கதைகளை இயக்கினார். விருதுகள் கூட கிடைத்தன. ஆனால், வெற்றி கிட்டவில்லை. எனவே, சரித்திரப் பின்னணியுடன் பிரமாண்ட கதைக்களமே தன் பாணியென்று முடிவு செய்தார்.

கன்னடப் படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் கவனம் செலுத்தினார். என்.டி.ராமராவை வைத்து நாகிரெட்டி `பாதாள பைரவி’யை தெலுங்கில் எடுத்தார். அதை கன்னடத்தில் “டப்” செய்ய, தொழில் நுட்பம் சார்ந்த பொறுப்புகளை விட்டலாச்சாரியா ஏற்றுக்கொண்டார். என்.டி.ராமராவுக்கு கன்னடத்தில் குரல் கொடுத்தவர் ராஜ்குமார். அப்போது ராஜ்குமார் நடிக்க ஆரம்பிக்கவில்லை.

இந்த டப்பிங் வேலைகள், சென்னை ஸ்டூடியோக்களில்தான் நடைபெற்றன. விட்டலாச்சார்யாவின் ஈடுபாடும், உழைப்பும் தெலுங்குத் திரையுலகில் பலரையும் கவர்ந்தன.

கன்னடத்தில் வெற்றி பெற்ற சில சமூகக் கதைகளை தெலுங்கில் இயக்கினார். அவை வெற்றி பெறவில்லை. பெயர் மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார்.

1959 முதல், தெலுங்கில் காலூன்றினார். முதலில் காந்தாராவ் நாயகன். கிருஷ்ணகுமாரி (சவுகார்ஜானகியின் தங்கை) நாயகி என வைத்து `ஜெயவிஜயா’ என்றொரு படம் இயக்கினார். சரித்திரப் பின்னணியும் மாயாஜாலக் காட்சிகளும் கொண்ட படம் இது. இதே ஜோடியை வைத்து `கனகதுர்கா பூஜாமஹிமர்’ இயக்கினார்.

பிறகு `வரலட்சுமி விரதம்’, `மதனகாமராஜ கதா’ என காந்தாராவை வைத்து பல படங்களை எடுத்தார்.

என்.டி.ராமராவ்

காந்தாராவைத் தொடர்ந்து என்.டி.ராமராவை வைத்து முதலில் `பந்திபோட்டு’ என்றொரு படம் இயக்கித் தயாரித்தார். இதே கதையை ஒரே நேரத்தில் கன்னடத்தில் ராஜ்குமாரை வைத்து `வீரகேசரி’ என்று உருவாக்கினார். இன்றும்கூட “வீரகேசரி” படம், கர்நாடக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த படமாகும்.

என்.டி.ராமராவுக்கு இவரது திறமையின் மீது மதிப்பு வரவே, தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார்.

`அக்கிப்பிடுகு’, `அக்கிப்பராட்டா’, `கந்திகோட்ட ரகஸ்யம்’, `அக்கி வீருடு’, `அரிபாயா நலபை தொங்கலு’ போன்ற 18 படங்களில் ராமராவ் நடித்தார். இதில் ஜெயலலிதா இணைந்து நடித்தவை 4 படங்கள். சரோஜாதேவி, தேவிகா, கே.ஆர்.விஜயா போன்ற முன்னணி நடிகைகள் பலரும் நடித்தார்கள்.

ராமராவ் படம் முடிந்து, கிடைக்கும் இடைவெளி காலத்தில், காந்தாராவ் நடித்து குறுகிய காலத் தயாரிப்பில் படங்கள் வரும். “வீரத்திலகம்”, “மாயமோதிரம்”, “மந்திரிகுமாரன்” போன்றவை அப்படி வெளிவந்தவைதான்.

வீரத்திலகம்

1964-ல், பொங்கலன்று எம்.ஜி.ஆர். நடித்த “வேட்டைக்காரன்”, சிவாஜிகணேசன் நடித்த “கர்ணன்” ஆகிய படங்கள் ரிலீஸ் ஆயின. அதே நாளில் வெளிவந்த விட்டலாச்சாரியாவின் “வீரத்திலகம்” படமும், அந்தப் படங்களைப்போல் நூறு நாட்கள் ஓடியது.

வரலாறு படைத்த படம்

முதன் முதலாக கன்னடத்தில் எடுத்த “ஜெகன்மோகினி” கதையை 1978-ல் தெலுங்கில் எடுத்தார். மாயாஜாலங்களும், விசித்திரமான வேதாளங்களும் கொண்ட இப்படத்தில் நரசிம்மராஜ×, ஜெயமாலினி ஆகியோர் நடித்தனர்.

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் அதே பெயரில் “டப்” செய்து வெளியிட்டார்.

“ஜெகன்மோகினி” மாபெரும் வெற்றிப் படமானது. சென்னையிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூலை குவித்தது. தினமும் “ஹவுஸ்புல்” காட்சிகள்!

தொடர்ந்து, விட்டலாச்சாரியாவின் “கந்தர்வக்கன்னி”, “நவமோகினி”, மோகினி சபதம்” ஆகிய டப்பிங் படங்கள் தமிழ்நாட்டில் சக்கை போடுபோட்டன.

நேரடி தமிழ்ப்படம்

விட்டலாச்சாரியா டைரக்ட் செய்த நேரடி தமிழ்ப்படம் ஒன்றே ஒன்றுதான்.

“பெண் குலத்தின் பொன் விளக்கு” என்ற பெயர் கொண்ட இப்படத்தில் ஜெமினிகணேசன், எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்தனர். 10-7-1959-ல் இப்படம் வெளிவந்தது.

டப்பிங் படங்களில் வெற்றி பெற்ற விட்டலாச்சாரியா, நேரடி தமிழ்ப்படத்தில் வெற்றி பெற முடியாமல் போனது பெரிய ஆச்சரியமே!

திரைப்பட வரலாறு 912
சிங்கத்தைக்கண்டு அஞ்சாத விட்டலாச்சாரியா
வீட்டில் புலிக்குட்டிகளை வளர்த்தார்!

விட்டலாச்சாரியா, காட்டு மிருகங்களுக்கு அஞ்சாதவர். அவருடைய படங்களில் சிங்கம், புலி, கரடி, பாம்பு போன்றவை நிறைய இடம் பெற்றன. 2 புலிக்குட்டிகளை வீட்டில் வளர்த்தார்.

வீரசாகசங்களில் ஆர்வம் உள்ளவர், விட்டலாச்சாரியா. தன் நண்பர்களுடன் வேட்டையாடச் செல்வதுண்டு.

புலி வேட்டை

ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடப் போனபோது, ஒரு புலியை வேட்டையாடினார். அந்தப் புலி போட்டிருந்த
2 குட்டிகளை தூக்கிக்கொண்டு வந்தார். வீட்டில் வளர்த்தார். அந்தப் புலிக்குட்டிகள் நன்றாகப் பழகின. நாய்க்குட்டி போலவே செல்லமாக வைத்திருந்தார்.

குட்டிகள் வளர்ந்ததும் அவற்றின் குணத்தைக் காட்ட ஆரம்பித்தன. வீட்டிலிருந்த பூனைகளை அடித்துச் சாப்பிட்டன. வீட்டில் உள்ளவர்கள் பயந்தார்கள்.

எனவே, 2 புலிக்குட்டிகளையும் மைசூர் மிருகக்காட்சி சாலைக்கு கொடுத்துவிட்டார்.

விலங்குகளைப் பயன்படுத்தி நிறைய படங்கள் எடுத்தார். கொடிய விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை நடிக்கும் போதெல்லாம், எல்லாரும் அச்சப்படுவார்கள். படப்பிடிப்புக்குழுவே பயந்தாலும் இவர் மட்டும் அஞ்சாமல் இருப்பார்.

ஒருமுறை `நவகிரகபூஜை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. காந்தாராவும் வாசந்தியும் நடித்த படம்.

ஒரு குழிக்குள் சிங்கம் இருக்கும். அதில் கதாநாயகனின் மகன் தள்ளப்பட வேண்டும். கதாநாயகன் தன் மகனைக் காப்பாற்ற குழிக்குள் இறங்கி, சிங்கத்துடன் சண்டையிட வேண்டும். இதுதான் எடுக்கப்படவேண்டிய காட்சி.

சிங்கம் வந்தது

பையனும் சிங்கமும் சேர்ந்து இருப்பது மாதிரியான காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன. அதன்பிறகு கதாநாயகன் குழிக்குள் இறங்கிச் சண்டையிட வேண்டும்.

எல்லாரும் அடுத்த காட்சி எடுக்க ஆயத்தமானார்கள். ஆனால், திடீரென்று சிங்கம் அந்தப் பள்ளம் போன்ற செட்டை விட்டு குதித்து மேலே வந்துவிட்டது! படப்பிடிப்புக் குழுவினர் அலறியடித்து சிதறி ஓடினர்.

ஆனால், விட்டலாச்சாரியா மட்டும் பதற்றப்படாமல் ஒரு நாற்காலியில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். மேலே சிங்கம் வந்ததைப் பார்த்தவர், தன்னருகே இருந்த சிகப்பு மின் விளக்கை அதன் பக்கம் திருப்பி வைத்தார். ஒளி அதன் கண்களை கூசச் செய்ததால், சிங்கம் அப்படியே அசையாமல் நின்றது.

தூரமாக நின்று பார்த்தவர்கள் வியந்து போனார்கள். மெல்ல மெல்ல நெருங்கி வந்தார்கள். மீண்டும் பள்ளத்தில் சிங்கம் விடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.

“எப்படி உங்களால் பயப்படாமல் இருக்க முடிந்தது?” என்று எல்லாரும் கேட்டபோது, “எனக்கு விலங்குகளின் மனோதத்துவம் தெரியும். பிரகாசமான ஒளி கண்ணில் படும்போது, சிங்கம் அப்படியே நின்றுவிடும். நகராது. அதைத்தான் நான் செய்தேன். நீங்கள் பயந்து ஓடினீர்கள். அது ஒன்றும் செய்யாது என்று எனக்குத் தெரியும். என் சிகரெட்டைப் பாருங்கள். அதன் சாம்பல்கூட உதிரவில்லை” என்று தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டைக்காட்ட, எல்லாரும் அசந்துவிட்டார்கள்.

விட்டலாச்சாரியா படங்களில் அவர் மட்டும் (அதாவது டைரக்டர்)தான் கதாநாயகன். கப்பலின் மாலுமி போல மொத்த குழுவினருக்கும் அவரே தலைவராக இருப்பார். சகல கட்டுப்பாடுகளும் அவர் கையில்தான் இருக்கும்.

படம் தயாரிக்கத் தொடங்கியதிலிருந்து கடைசிவரை துணிவையே மூலதனமாகக் கொண்டிருந்தார். “ஒன் மேன் ஆர்மி”யாகவே கடைசிவரை இருந்தார்.

படப்பிடிப்பில் பரபரப்பு பெரிய சத்தம் என்று இருப்பவர், வீடு சென்றுவிட்டால் அமைதியாக இருப்பார். இவரது வருகைக்குப்பின் வீடு நிசப்தமாகிவிடும். வீட்டிலிருக்கும் போது எந்நேரமும் யோசனையில் ஆழ்ந்து இருப்பார். அப்போது யாராவது குறுக்கிட்டால் கோபம் வரும். எனவே, அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது யாரும் அருகில் வரமாட்டார்கள்.

அவர் அதிகமாக யோசிப்பது பிரமாண்ட காட்சிகள் சம்பந்தமாக மட்டுமல்ல. `நகைச்சுவை காட்சிகளுக்காகவும்தான் இந்த சிந்தனை’ என்பார். தன் படங்களில் மாயாஜால அம்சங்கள் போல, நகைச்சுவைக் காட்சிகளும் பேசப்படும்படி இருக்க விரும்புவார்.

ரசிகர்கள் ஆர்வம்

ராஜ்கபூரின் “பாபி” இந்திப்படம் சென்னை மிட்லண்ட் திரையரங்கில் ஓடியபோது, வெளிïர் ரசிகர்கள் தபால் மூலம் பணம் அனுப்பி டிக்கெட் எடுத்துக்கொண்டு படம் பார்த்தது வரலாறு.

இதேபோல, விட்டலாச்சாரியாவின் “வீரகேசரி”, “ஜெகன் மோகினி” ஆகியவை வெளியானபோது, கிராமப்புற ரசிகர்கள் மாட்டு வண்டி, கட்டுச்சோறு என்று பயணமாக வந்து, படம் பார்த்தனர்!

“ஓரளவுக்கு மேல் பணம் சேர்க்கக்கூடாது. எவ்வளவு தேவையோ அதையே வைத்துக் கொள்ள வேண்டும். பணம் அதிகம் வந்தால், மனிதனின் குணம் மாறிவிடும்” என்று அடிக்கடி கூறுவார்.

விருதுகள், விழாக்கள் என்று எவ்வளவோ வந்தபோதும் எல்லாவற்றையும் மறுத்தார். `புனே திரைப்படக் கல்லூரி’யின் தலைவர் பதவிகூட தேடி வந்தது. இவர் விரும்பவில்லை. “எனக்கு சினிமா ஒரு தொழில். என் பிழைப்புக்காகப் படம் எடுக்கிறேன். நான் என் வியாபாரத்துக்காக – வருமானத்துக்காகவே படம் எடுக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்” என்றே கூறுவது வழக்கம்.

குடும்பம்

விட்டலாச்சாரியாவின் மனைவியின் பெயர் ஜெயலட்சுமி. 14 வயதில் வாழ்க்கைப்பட்டவர். இவர்களுக்கு 4 மகன்கள், 4 மகள்கள்.

கடைசிவரை யாரையும் சாராமல் இருந்து திரையுலகில் சாதனை படைத்த விட்டலாச்சாரியா, தன் 79-வது வயதில் 28-5-1999-ல் காலமானார்.

மரணத்தைக் கண்டு அவர் அஞ்சவில்லை. முழு வாழ்க்கை வாழ்ந்த திருப்தியுடன் இறந்தார். தன் கடைசி நிமிடங்களில் குடும்பத்தினரை அருகில் அழைத்து, “நான் முழுமையான வாழ்க்கை வாழ்ந்தேன். திருப்தியாக வாழ்ந்த சந்தோஷத்துடன் போகிறேன்” என்று கூறி, தனக்குப் பிடித்த பஜனைப் பாடல்களைப் பாடச் சொன்னார். குடும்பமே பரவசத்தில் பாட, ஒரு புன்னகை உதட்டில் தவழ உயிர் பிரிந்துவிட்டது.

விட்டலாச்சாரியா இயக்கித் தயாரித்த படங்கள், மொழி மாற்றம் செய்த படங்களின் எண்ணிக்கை 80. இதில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டவை 20.

மகன்கள்

தந்தையின் மறைவுக்குப்பின் 4 மகன்களில் மூத்தவர் பி.வி.சீனிவாசன் மட்டும் திரைப்படத்துறையில் ஆர்வம் காட்டினார். தமிழில் “பெண்ணை நம்புங்கள்”, “தாய்ப்பாசம்”, “அவள் ஒரு அதிசயம்” என்று 3 படங்களையும், தெலுங்கில்
4 படங்களையும் இயக்கினார். “ஜெய் வேதாளம்” என்கிற படத்தை இயக்கித் தயாரித்தார். இந்தியாவின் 2-வது முப்பரிமாண (`3டி) படம் அது. அதன்பின் படங்கள் இயக்கவில்லை. மைசூரில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

தன் தந்தையுடன் தயாரிப்பு பணியில் இருந்த இன்னொரு மகன் பத்மநாபன் சென்னையில் வசிக்கிறார். 1973 முதல் தந்தையுடன் இருந்து வந்தவருக்கு படம் தயாரிக்க ஆர்வம் உண்டு. ஆனால் திரையுலகின் தற்போதைய சூழ்நிலை அவருக்கு ஒத்து வராததால், திரையுலகை விட்டு விலகியிருக்கிறார்.

இன்னொரு மகன் சசிதரன் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறார்.

முரளிதரன் “மல்டி நேஷனல் கம்பெனி” ஒன்றில் மண்டல நிர்வாகியாக இருக்கிறார்.

இப்படி நான்கு மகன்களுமே திரையுலகில் சம்பந்தப்படாமல் இருக்கிறார்கள்.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | 1 Comment »