Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Inaction’

Right to Information: State of Tamil Nadu remains Closed

Posted by Snapjudge மேல் மார்ச் 11, 2009

வெளிப்படைத் தன்மை எங்கே?

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் ஒருமுறை கூட ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு மத்திய அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ஐ நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின் கீழ் அரசு நிர்வாக நடைமுறை தொடர்பாக தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பொதுமக்கள் பெறுகின்றனர்.

இந்தச் சட்டத்தின் அமலாக்க மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடக்கம்: இதன்படி தமிழக அரசால் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் 2006 ஜனவரி 12-ம் தேதி தொடங்கப்பட்டு 28-1-2006-முதல் செயல்பட்டு வருகிறது.

3 ஆணையர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஆணையத்தில் பின்னர் மேலும் 4 ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.

மூன்றாண்டுகளில்…:

கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 1.50 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் அடிப்படையில் மக்களுக்கு தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உரிய தகவல்களை மனுதாரர்களுக்கு அளிக்க மறுத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு 300 அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என மாநிலத் தகவல் ஆணையர் ஆர். ரத்தினசாமி அண்மையில் தெரிவித்தார்.

தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டாலும், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யாரும் அபராதத்தைச் செலுத்தவில்லை.

அந்தந்த துறை உயர் அதிகாரிகள் மற்றும் தகவல் ஆணையத்தின் அலட்சியப் போக்கு காரணமாக ஏராளமான அதிகாரிகள் அபராதம் செலுத்தாமல் தப்பித்து வருவதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆண்டறிக்கை:

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 25 (4) பிரிவின் படி மாநிலத் தகவல் ஆணையம் தனது பணிகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஆண்டறிக்கையாக தொகுத்து சட்டப்பேரவையில் அளிக்க வேண்டும்.

ஆனால், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை ஒருமுறை கூட ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது என பொள்ளாச்சியில் இருந்து செயல்படும் தாயகம் அமைப்பின் நா. பாஸ்கரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, “ஆண்டறிக்கை இதுவரை சமர்பிக்கப்படவில்லை’ என சட்டப்பேரவை செயலக துணைச் செயலர் 10-10-2007-லும், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை இணைச் செயலர் 19-10-2007-லும் பதில் அளித்துள்ளனர்.

கடைசியாக சட்டப்பேரவைச் செயலக இணைச் செயலர் 29-01-2009-ல் அளித்த (எண்: 1822/2009-1) கடிதத்திலும், தகவல் ஆணையத்தின் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மை எங்கே?

இந்த நிலையில், 2006-ம் ஆண்டு முதல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவை செயலகம் உள்பட ஒவ்வொருத் துறையும் அளித்த தகவல்கள் குறித்த விவரங்கள் ஆண்டறிக்கைக்காக பெறப்பட்டு வருகிறது என மாநிலத் தகவல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

“அரசுத் துறைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு சட்டத்தை அமலாக்க வேண்டிய ஆணையமே, தனது பணிகளில் வெளிப்படைத் தன்மையை பராமரிக்காமல் உள்ளதற்கு உதாரணமாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது’ என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Posted in Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »