மூலிகை மூலை: பசியைத் தூண்டும் இலவங்கம்
விஜயராஜன்
இலவங்க மரம் பச்சைநிறம் கொண்டிருக்கும். அதிக நறுமணம் கொண்டதாகும். இம்மரத்தின் உள்ள மலர்களின் மொட்டுகளைத்தான் இலவங்கம் என்று அழைப்பார்கள். இலவங்கத்தின் மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.
இலவங்கத்தை உணவுடன் சேர்த்து வர உண்ட உணவு எளிதில் செரிமானமாகும்.
இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்றிட தலைபாரம், நீரேற்றம் உடனே குணமாகும்.
இலவங்கத்தைத் தணலில் வதக்கி வாயில் போட்டுச் சுவைக்க, தொண்டைப்புண் ஆறும். தொடர்ந்து சுவைத்து வர பற்களின் ஈறுகள் கெட்டியாகும்.
இலவங்கத்தைப் பொடியாக்கி பத்துகிராம் எடுத்து இருநூறு மில்லி வெந்நீருடன் கலந்து குடிக்கப் பசியைத் தூண்டி, கழிச்சலைப் போக்கும்.
இலவங்கம், சுக்கு வகைக்கு 20 கிராம் எடுத்து ஓமம், இந்துப்பு வகைக்கு 40 கிராம் எடுத்துச் சேர்த்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் எடுத்து 1 டம்ளர் வெந்நீருடன் கலந்து குடிக்க, பசியைத் தூண்டி உண்ட உணவை நன்றாகச் செரிமானம் ஆக்கும். இலவங்கம், நிலவேம்பு சம அளவாக பத்து கிராம் இடித்து 1 டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடிக்க காய்ச்சலுக்குப் பின்னால் உண்டாகும் களைப்பைப் போக்கும். அயர்ச்சி நீங்கும். நன்றாகப் பசியைத் தூண்டும்.
நிலாவாரையை கைப்பிடியளவு எடுத்து இடித்து 500 மில்லி நீரில் போட்டு அத்துடன் இலவங்கப் பொடியும், சுக்குப் பொடியும் வகைக்கு 2 கிராம் சேர்த்து 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க சுகமாகப் பேதியாகும்.
இலவங்கத்தை வாலையிலிட்டு வடித்த தைலம் துல்லியமாகவும், காரமாகவும், நல்ல மணமுள்ளதாகவும், இருக்கும். நாவில் பட்டால் சிவக்கும். சிறிது சர்க்கரையுடன் 3 சொட்டு இலவங்கத் தைலம் சேர்த்துச் சாப்பிட பசியைத் தூண்டும். உடலுரமாக்கும்.
இலவங்கத் தைலத்தை பஞ்சில் நனைத்து பல் நோய்க்கு வைக்க சாந்தமாகும்.