தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் நெருக்குதல்
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதான குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. இரு தினங்களுக்கு முன்பு, பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து பல கோரிக்கைகளை விடுத்தார்கள்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை, முதலில் திமுக எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் பிரதமரைச் சந்தித்தார்கள். அப்போது கடந்த 17-ம் தேதி திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தினார்கள்.
அதாவது, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு கடலோரக் காவல் படை பாதுகாப்பு உள்பட அனைத்து வகையான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் மன்மோகன் சிங் சார்க் மாநாட்டுக்குக் கொழும்பு செல்லும்போது, இப்பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரி்க்கை விடுக்கப்பட்டதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.
நேற்று, இலங்கைத் தூதரை அழைத்து, தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடைபெறக் கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரித்திருப்பதாகவும், அதை வரவேற்பதாகவும் பாலு தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள், இலங்கைக் கடல் எல்லைக்குள்ளும் சென்று மீன் பிடிக்க உரிமம் வழங்கப்படும் என பாமக எம்.பி.க்களிடம் பிரதமர் உறுதியளித்திருப்பது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் டி.ஆர்.பாலு, இது புதிய முடிவு அல்ல என்று தெரிவித்தார். இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் விரைவில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுவார் என்றும் பாலு தெரிவித்தார்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதமரிடம் வைக்கப்பட்டதா என்று கேட்டதற்கு பாலு பதிலளிக்கும்போது, இதுகுறித்து, 22-ம் தேதி அரசு நம்பிக்கை வாக்குக் கோரிய பிறகு, விரிவாகப் பேசப்படும் என்று பாலு தெரிவித்தார்.
அதன்பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கே.வி. தங்கபாலு தலைமையில், காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து அதே கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
விடுதலைப் புலிகளிடம் இருந்து கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு ஒராண்டு நிறைவு
 |
|
இடம்பெயர்ந்தோர் |
இலங்கையில் கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கபட்டு விட்டதாக தேசிய ரீதியாக விழா எடுக்கப்பட்டு சனிக்கிழமையுடன் ஓராண்டு ஆகிவிட்டது.
இந்த ஒரு வருட காலத்திற்குள் மாகாண சபைத் தேர்தலும் நடை பெற்று முடிந்துள்ளது. மாகாணத்தில் அரசியல் மற்றும் சிவில் ரீதியான நிர்வாகங்கள் முழுமையாக அமுல் படுத்தப்பட்டு அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறி வருகின்றது.
இருப்பினும், மக்களைப் பொறுத்த வரை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டாலும் தங்களின் வாழ்ககை நிலை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்றும், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று மாகாண சபை நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடம் சென்றடைந்திருந்தாலும் பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்து மக்கள் இன்னமும் முற்றாக விடுவிக்கப்படவில்லை என்றும் பலர் தமிழோசைக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்
 |
|
இடம்பெயரும் மக்கள் |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தை மீட்பதற்காகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு களமுனைகளில் வெள்ளிகிழமை இடம்பெற்ற மோதல்களில் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இந்த மோதல்களில் 19 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
வவுனியா மாவட்டத்தின் பாண்டியன்குளம், பாலமோட்டை, நவ்வி ஆகிய இடங்களிலும் மன்னாரில் குறுணியடி, கட்டாடிவயல் ஆகிய இடங்களில் இந்த மோதல்கள் இடம் பெற்றதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
வெலிஓயா மற்றும் நாகர்கோவில், முகமாலை பகுதிகளிலும் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நேற்றைய தினம் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் உள்ள குருந்தன்குளம் பகுதியில் வெள்ளிகிழமை அரச படைகள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் மன்னார் மாவட்டம் விடத்தல்தீவு பகுதியைக் கைப்பற்றியுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் எறிகணை தாக்குதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக இலங்கை அரசிடம் இந்திய அரசு முறைப்படி கவலையை தெரிவித்துள்ளது
 |
|
இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் |
இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக, இந்தியா சனிக்கிழமை இலங்கை அரசிடம் முறைப்படி தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்திய வெளியுறவுத்துறையின் கிழக்காசியப் பிரிவுச் செயலர் என்.ரவி, புதுடெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அமைச்சகத்துக்கு அழைத்து இந்தியாவின் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 12-ம் தேதி தமிழக மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த மீனவர்கள் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும், இந்தியர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் நலனுக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாகவும் இலங்கைத் தூதரிடம் இந்திய அதிகாரி ரவி திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதாகவும் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதாகவும், சுட்டுக்கொல்லப்படுவதாகவும் மீனவர்கள் தரப்பில் புகார்கள் கூறப்படுகிறது.
சமீபத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு மீனவ்ர்கள் அவ்வாறு கொல்லப்பட்டதாகக் கூற்ப்படுகிறது. அதற்கு சில தினங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து பின்னர் விடுதலை செய்தது.
இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரியுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சிப் பிரதிநிதிகள் ஏற்கெனவே பிரதமரைச் சந்தித்து இதுகுறித்துக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். திமுக எம்.பி.க்கள் நாளை பிரதமரைச் சந்திக்க உள்ளனர். மேலும் திமுக சார்பில் சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் இலங்கை அரசிடம் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது.
இலுப்பைக்கடவையை கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது
 |
|
இலங்கை கடற்படையினர் |
இலங்கையின் வட மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கும் நடவடிக்கைகள் வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்வதாகத் தெரிவித்திருக்கும் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், வடமேற்குக் கரையோரத்தில் இலுப்பைக்கடவை சிறுநகரை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியிருப்பதாகக் கூறியுள்ளது.
இப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க விடத்தல்தீவு பகுதியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் அங்கிருந்து முன்னேறிச் சென்று இலுப்பைக்கடவை என்ற இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விடுதலைப் புலிகளின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.
பூனகரியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையிலேயே இலுப்பைக்கடவை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா கடற்பகுதியில் கடற்படையினரும், விமானப்படையினரும் இணைந்து ஞாயிற்றுகிழமை மதியம் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் 6 படகுகள் முற்றாக அழிக்கப்பட்டதாகவும், மேலும் 2 படகுகள் சேதமடைந்ததாகவும் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
எனினும் இராணுவத்தின் முன்னேற்றம் குறித்தும், நாச்சிக்குடா கடற்பரப்பில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படும் தாக்குதல் குறித்தும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
இதற்கிடையில், வவுனியா, மன்னார், வெலிஓயா ஆகிய வன்னிக் கள முனைகளில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் சனிக்கிழமை அன்று நடந்த சண்டைகளில் மாத்திரம் 18 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இராணுவம் புதிய கட்டுப்பாடுகள்
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம், புனானை மற்றும் வாகனேரி பிரதேசத்தில் விவசாயத்தில ஈடுபட்டுள்ள விவசாயிகள், உணவு மற்றும் எரிபொருட்களை வயல்களுக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக இராணுவத்தினரால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களையடுத்தே இந் நடவடிக்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்டப்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் உணவுப் பொருட்களுடன் சில தினங்களுக்கு முன்னர் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்திற்கு உணவு மற்றும் எரிபொருட்களை ஒரே தடவையில் நேரடியாக எடுத்துச் செல்வதற்கு இராணுவும் அனுமதிக்காத போதிலும் அருகில் களஞ்சியப்படுத்தி தேவைக்கேற்ப நாளந்தம் எடுத்துச் செல்வதற்கு அனுமதியளித்துள்ளதாக மாதுறு ஓயா வடக்கு விவசாயிகள்
நலன்புரிச்சங்கத்தின் தலைவரான இஸ்மாலெப்பை மொகமத் முஸ்தபா கூறுகின்றார்.
இதனிடையே, மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் வர்த்தகரான தேவதாஸ் சுரேஷ்குமார் கடத்தி கொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் இரு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமி்ழகத்தில் கைப்பற்றப்பட்ட முருகன்சிலை மூதூர் முருகன் ஆலயத்தை சார்ந்ததாக உரிமை கோரப்படுகிறது
 |
|
மூதூர் வெருகலம்பதி முருகன் ஆலயம் |
இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட முருகப்பெருமானின் சிலை தமிழக பொலிசாரால் கைப்பற்றப்பட்டதாக அண்மையில் தமிழோசையில் செய்தி வெளியானது. இந்தச் சிலையானது திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் வெருகலம்பதி முருகன் ஆலயத்திலிருந்து 2006ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களின் போது காணாமல் போன சிலை என தாங்கள் உணர்வதாகவும் மூதூர் வெருகலம்பதி ஆலய பரிபாலன சபையின் தலைவர் சிதம்பரப்பிள்ளை தமிழோசையிடம் தெரிவித்திருக்கின்றார்.
இந்தச் சிலை களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு எழுதியுள்ளதாகவும், அவரது பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
.
இடம்பெயரும் மக்களுக்கு உதவி கோரி யாழ் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம்
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் இடம்பெயர்ந்த நிலையில் துன்பப்படுகின்ற மக்களின் துயர் துடைப்பதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளவேண்டும் என யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் இலங்கை ஜனாதிபதியிடம் கடிதம் மூலமாக அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் இருந்தும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் இருந்தும் சுமார் 30 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளாகத் தெரிவித்துள்ள யாழ் ஆயர், இவர்களுக்கான அவசர நிவாரண உதவிகளை மேற்கொள்வதில் அரச அதிகாரிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் எதிர்நோக்கியுள்ள சிரமங்களைப் போக்கி உரிய ஒத்துழைப்பை அரசாங்கம் அவசரமாக வழங்க வேண்டும் எனவும் தனது கடிதத்தில் அவர் கோரியிருக்கின்றார்.
இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.
ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஈ.பி.டி.பி. காரியாலத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்
 |
|
பறிமுதல் செய்யப்பட்ட வேன் வண்டி |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெள்ளை வேன் ஒன்று திங்களன்று செங்கலடியிலுள்ள ஈ.பி.டி.பி. காரியாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
செங்கலடி பிரதேசத்தில் வர்த்தகரான தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சமப்வம் தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணைகளின போது கிடைத்த தகவலை அடுத்தே இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 19ஆம் திகதி ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இவ்வர்த்தகர், இந்த அமைப்பின் காரியாலயத்திற்கு அருகாமையிலுள்ள காணியில் சடலமாக தோண்டியெடுக்கப்பட்டிருந்தார்.
 |
|
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் |
இக்கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக செங்கலடி பிரதேச ஈ.பி.டி.பி பொறுப்பாளர் ரவி எனப்படும் தர்மலிங்கம் ஈழமாறன் உட்பட அந்த அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சந்தேகத்தின் பேரில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
செங்கலடி ஈ.பி.டி.பி. காரியாலயத்தை பொலிசார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியபோது வர்த்தகரொருவரிடம் கப்பமாகப் பெறப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேவதாஸ் சுரேஷ்குமார் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக புலன்விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான ரஞ்சித் குணசேகர தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.