Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Heroes’

Tamil cinema’s legendary villain MN Nambiar dead

Posted by Snapjudge மேல் நவம்பர் 19, 2008

பிரபல நடிகர் நம்பியார் காலமானார்

இந்தியாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான எம் என் நம்பியார் இன்று (புதன்கிழமை) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் மஞ்சேரி நகரில் ஒரு பாரம்பரியமான நம்பியார் குடும்பத்தில் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார் நம்பியார்.

மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதே அவரது முழுப் பெயர். தனது 13 ஆவது வயதில் தமிழ் நாட்டில் பிரபலமாக விளங்கிய பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவில் இணைந்து தனது கலை வாழ்க்கையை தொடங்கினார் நம்பியார்.

1935 ஆம் ஆண்டு பக்த ராமதாஸ் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த நம்பியார் அவர்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

ஒரு ஆங்கிலத் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நம்பியார் நடித்துள்ளார். வில்லன் பாத்திரத்திலேயே பெருமளவில் நடித்த அவர் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்தார் என்று திரை விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ் திரையுலகின் பிரபலங்களான எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற பலரது திரைப்படங்களில் அவர்களுடன் வில்லனாக நடித்துள்ளவர் நம்பியார்.

ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமையும் அவருக்கு உண்டு. திரைப்படங்களில் முரட்டுத்தனமான வில்லன் பாத்திரத்தை ஏற்று அவர் நடித்திருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் மிகவும் அதீதமான தெய்வ பக்தி கொண்ட ஒரு மென்மையான மனிதராகவே அவர் திகழ்ந்தார்.

சபரிமலை ஐயப்பனின் தீவிர பக்தரான எம் என் நம்பியார் தொடர்ந்து பல ஆண்டுகாலம் அந்த ஆலையத்துக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். இந்தியாவின் பல மாநிலங்களிலுள்ள நடிகர்களையும் அங்கு அழைத்துச் சென்றவர் அவர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »