கனடா உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டது
|
உலகத் தமிழர் இயக்க அலுவலகம் |
கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் என்ற பெயரில் செயற்பட்டுவந்த அமைப்பு ஒன்றை, அது விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டி, அந்த நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு கனடாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கனடிய அமைச்சரவை நேற்று இந்த முடிவை எடுத்திருந்தது. இந்த நடவடிக்கையானது கனடாவில் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை முடக்கும் அந்த நாட்டு அரசாங்கத்தின் மிகவும் கடுமையான ஒரு நடவடிக்கையாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, உலகத் தமிழர் இயக்கத்தின் கணக்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நிதி நிறுவனமும் அது குறித்து கனடிய அரசாங்கத்துக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமது அமைப்பைத் தடை செய்வதற்கான கனடிய அரசாங்கத்தின் முடிவு தவறானது என்றும் அதனை கனடிய சட்டங்களின் அடிப்படையில் எதிர்க்கப் போவதாகவும் கூறும் உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவரான சின்னத்தம்பி சிற்றம்பலம், தமது அமைப்பு கனடாவிலும், இலங்கையிலும் அகதிகளுக்கு உதவும் பணிகளில் மாத்திரமே ஈடுபட்டு வந்ததாகவும் கூறினார். விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு
 |
|
கிழக்கு மாகாண சபை |
இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கென நடத்தப்பட்ட தேர்தல் நீதியானதும் நியாயமானதுமான முறையில் சுதந்திரமாக நடத்தப்படவில்லை என தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவினை இன்று நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்
கொண்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை ஜூலை மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்கப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினர் இருவர் சார்பில் இந்த தேர்தல் ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி அருள்பிரகாசம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் புகுந்து வாக்களிப்பு மோசடியில் ஈடுபட்டதாகவும், இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பினை செல்லபடியற்ற தாக்குமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மூதூர் கொலைகள் குறித்து ஏசிஃப் சர்வதேச விசாரணை கோருகிறது
 |
|
மூதூரில் கொல்லப்பட்ட உதவிப் பணியாளர் ஒருவரின் சடலம் |
இலங்கையின் கிழக்கே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையைக் கோரி உலகளாவிய ஒரு முன்னெடுப்பை பிரான்ஸ் நாட்டின் உதவி அமைப்பான ஏசிஃப் ஆரம்பித்துள்ளது.
இலங்கை அரசின் விசாரணைகள் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்று அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநரான பிராண்சுவா டேனல் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாததே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏசிஃப் அமைப்பைச் சேர்ந்த இந்த பணியாளர்கள் மூதூரிலுள்ள தமது அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
2006 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்தக் கொலைகள் இடம்பெற்றன.
இந்தக் கொலைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் செய்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுவதை இலங்கை அரசு மறுக்கிறது.