புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 மே, 2008
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியேற்பு ஒத்திப்போடப்பட்டுள்ளது
![]() |
![]() |
சந்திரபால லியனகே |
இலங்கையில், வெள்ளியன்று நடைபெறவிருந்த, கிழக்கு மாகாண சபைக்காக புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுபற்றி, பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய ஜனாதிபதியின் அலுவலகத்தைச் சேர்ந்த சந்திரபால லியனகே அவர்கள், கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் யார் என்று இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் இன்று முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.
ஆகவே இந்த விடயம் குறித்து முடிவெடுப்பதற்காக, கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சிகளின் உறுப்பினர்களுடன் நாளை சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்திலேயே முதலமைச்சர் நியமனம் குறித்த இறுதி முடி எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீட்டித்துள்ளது
இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது தான் விதித்திருந்த தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய உள் துறை அமைச்சகத்திலிருந்து விடுக்கப்பட்ட ஒரு அறிக்கை இந்த குழு ஒரு சட்டவிரோத அமைப்பு என்று கூறியது.
முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா 1992ல் முதன் முதலில் தமிழ்ப்புலிகள் அமைப்பை தடை செய்தது. இந்த கொலைக்கு புலிகளே காரணம் என்று கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் சில விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகள் இந்த தடைக்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்தன.
இலங்கை பாதுகாப்பு படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல் சமீப மாதங்களில் தீவிரமடைந்திருக்கும் நிலையில் இந்த தடை நீட்டிப்பு வருகிறது.
இலங்கையில் கைதான 19 இந்திய மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்
இலங்கையின் வடமேற்கே தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 19 இந்திய மீனவர்களை வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
மூன்று மீன்பிடி இழுவைப் படகுகளில் வந்த இவர்கள், கடந்த 9 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, கடற்படையினரால் விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் வியாழனன்று பொலிசாரினால் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
இராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த இந்த மீனவர்கள் உடனடியாக அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையில் வவுனியா, மன்னார், ஜனகபுர, மணலாறு பிரதேச போர்முனைகளில் நேற்று இராணுவத்தினர் மேற்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைளின்போது இரு தரப்பிலும் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவச் சிப்பாய் ஒருவரைக் காணவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.