Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Females’

Having Kannagi & Madhavi on Stage with Kovalan Karunanidhi: Njaani

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

ஓ பக்கங்கள் 20

நன்றி : குமுதம்

காடுவெட்டி (அ) கூட்டணி வெட்டி ?

காடுவெட்டி குரு என்கிற வன்னிய சங்கத் தலைவர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி முதலியோரை அவன் இவன் என்று அநாகரிகமாக ஏசிப் பேசியதும், தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கொன்று விடுவோம் என்று மிரட்டிப் பேசியதும், மிரட்டல் வசூல் செய்யத்தான் செய்வோம் என்று அறிவித்துப் பேசியதும் ஒரு சி.டி.யில் பதிவு செய்யப்பட்டு, அதன் விளைவாகவே தி.மு.க. பா.ம.க. கூட்டணி உறவு முறிகிறது என்று சொல்லப்படுவதை நான் நம்பத் தயாராக இல்லை.

குருவின் பேச்சு பொது மேடையில் பேசியது அல்ல. அவர் கட்சிக்குள் பொதுக்குழுவில் பேசியது. பெரும்பாலான கட்சிப் பொதுக் குழுக்களில், செயற்குழுக்களில், கட்சிப் பிரமுகர்களின் தனிப் பேச்சுக்களில் இதை விடக் கேவலமாகவும் ஆபாசமாகவும் ஆணவமாகவும் பேசும் மரபு இருந்து வருகிறது என்பதை பத்திரிகையாளர்கள் அறிவார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. பொதுக் கூட்ட மேடைகளில் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா, எஸ்.எஸ்.சந்திரன் வகையறாக்கள், பொது மக்கள் முன்பாகவே எவ்வளவு ஆபாசமாகவும் அவதூறாகவும் கடந்த 50 வருடங்களாகப் பேசி வந்திருக்கிறார்கள் என்பதை வேறெவரையும் விட, பொது வாழ்க்கையில் 70 வருடங்களாக இருந்து வரும் கலைஞர் கருணாநிதி நன்றாகவே அறிவார்.

பா.ம.க.வில் காடுவெட்டி குரு என்றொரு `முரட்டுப் பிரமுகர்’ இருந்து வருவது ஒன்றும் தி.மு.க.வுக்கும் ஆற்காட்டாருக்கும் கருணாநிதிக்கும் நேற்று காலைதான் தெரிய வந்த விஷயம் அல்ல. இரு கட்சிகளும் உறவு வைப்பதற்கு முன்பும் பின்னரும் தெரிந்த விஷயம்தான். குருவின் பேச்சும் 6 மாதம் பழைய பேச்சு.

குரு போன்ற பிரமுகர்கள் இல்லாத கட்சிகளே இன்று தமிழ்நாட்டில் இல்லை. மதுரையை எடுத்துக் கொள்வோம். சாரி.. நான் அழகிரி பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.அவர் பேசுவதே அபூர்வம். கருணாநிதிக்கு சவாலாக எம்.ஜி.ஆர். 1972ல் புறப்பட்டபோது எம்.ஜி.ஆரின் `உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை ஓட விடமாட்டேன் என்று எதிர் சவால் சொல்லித் தொடை தட்டிப் புறப்பட்ட கழகக் கண்மணி மதுரை முத்து அன்று கலைஞர் கருணாநிதியின் ஆதரவாளர்தான்.

குடும்பச் சண்டைக்காக மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற கும்பல்களை வழிநடத்தியவர்களில், தி.மு.க.வின் நகர மேயர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இருந்தார்கள். அந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும் வன்முறையில்தான் முடிந்தன.

வன்முறையிலும், அராஜகத்திலும் மிரட்டல் வசூல்களிலும் தமிழகத்தின் அத்தனை பெரிய கட்சிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். `அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்று இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் கடந்த 50 வருடங்களில் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஒரு காலத்தில் அரசியல் தலைவர்கள் தாங்களே நேரடியாக ரவுடித்தனங்களில் இறங்கத் தயங்கினார்கள். காரணம், ஆரம்ப கால அரசியல் தலைவர்கள் பலரும் நிலப்பிரபுத்துவ பின்னணியில் இருந்து வந்தவர்கள். பண்ணையார்கள் அடியாட்களைத்தான் ஏவி விடுவார்களே தவிர, தாங்களே தங்கள் கைகளை அழுக்குப்படுத்திக் கொள்வதில்லை. அதனால்தான் கீழ் வெண்மணியில் விவசாயக்கூலிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் கூட ஒரு நீதிபதி, மிராசுதார் தானே சென்று நெருப்பு வைத்தார் என்பதை நம்ப முடியாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார். நெருப்பு வைக்க ஆளை ஏவினாரா இல்லையா? என்பதைப் பற்றிச் சொல்லவில்லை.

அரசியலில் எழுபதுகளுக்குப் பின்னர், குறிப்பாக சஞ்சய் காந்தி, எம்.ஜி.ஆர். போன்றோரின் வருகைக்குப் பின் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்று, அடியாட்கள் தாங்களே ஏன் தலைவர்களாகிவிடக்கூடாது என்று சிந்திக்கத் தொடங்கியதுதான். இன்று எல்லா கட்சிகளிலும் தாதாக்கள் வெவ்வேறு மட்டங்களில் தலைவர்களாகவே ஆகி இருக்கிறார்கள்.

இதுதான் யதார்த்த நிலை. எனவே ஒரு காடுவெட்டி குருவின் பேச்சு தி.மு.க தலைமையை நிலைகுலையச் செய்துவிட்டது; வருத்தப்படுத்தி விட்டது;வேதனைப்படுத்தி விட்டது என்பதெல்லாம் சும்மா ஒரு நாடகம்தான்.

தி.மு.க., அதி.மு.க. மட்டுமல்ல…. தமிழகத்தின் எல்லா பிரதான கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற ஞானோதயத்துக்கு இப்போது நான் வந்துவிட்டேன்.

இதிலிருந்து விடுதலையும் விமோசனமும் இன்று பிறந்திருக்கும், இனி பிறக்கப்போகும் குழந்தைகள் காலத்தில்தான் சாத்தியம்.

கடலூர் சொல்லும் செய்திகள்..

வருங்கால, நிகழ்காலக் குழந்தைகளை நினைத்தாலும் கவலையாக இருக்கிறது. காரணம் சில பெற்றோர்கள்தான். நேற்று இரவு 11 மணிக்கு கதவைத் தட்டினார்கள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மாவும் குழந்தைகளும். வழக்கமான பிரச்னை. கணவர் குடித்துவிட்டு வந்து எல்லாரையும் கடுமையாக அடித்ததைத் தாங்க முடியாமல் இரவு தங்க வந்திருக்கிறார்கள்.

இதே போல சில தினங்கள் முன்பு ரயிலில் இரவு 11 மணிக்கு செகண்ட் ஏ.சி. கோச்சில் குடித்து விட்டு வந்திருந்த ஆண் பயணிகள் இருவரின் டார்ச்சரிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கோரிய சக பெண் பயணிகள் நினைவுக்கு வந்தனர்.

தமிழகம் முழுவதும் குடித்துவிட்டு ரகளை செய்யும் ஆண்கள் தரும் தொல்லை நமது பெண்களுக்கு இன்று பிரதான பிரச்னைகளில் ஒன்றாகியிருக்கிறது. இதில் சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லை அதிக வேதனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கும் என்பதைத் தவிர.

தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தி.மு.க. மகளிர் அணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் இந்த முக்கியமான பிரச்னை குறித்து சமுதாய சீர்திருத்தக் கருத்தரங்கிலே விவாதிப்பார்கள் என்று……… எதிர்பார்த்திருந்தால் அது என் தப்பாகத்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே எதிர்பார்க்கவில்லை.

ஆனால், டாக்டர் ராமதாஸ் மதுவிலக்குப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வருவதாலும், பா.ம.க. மகளிர் அணியினர் மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருவதாலும், அதற்குப் பதில் சொல்லும் விதமாக, கடலூரில் கனிமொழி மதுவிலக்கு பற்றி ஏதாவது சொல்லுவார் என்று சின்னதாக எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு கூட தப்புதான். தமிழகப் பெண்களை உலுக்கும் பிரச்னை மதுவா என்ன, ராமர் பாலம்தானே.

என்றாலும், தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது டாக்டர் ராமதாசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவர் கடுமையாக விமர்சித்து வரும் `மானாட, மார்பாட…. மன்னிக்கவும் மயிலாட’ நிகழ்ச்சியை இனி கலைஞர் டி.வி நிறுத்தி விடும் என்று எதிர்பார்க்கலாம். கனிமொழி சொன்னால் சன் டி.வி கேட்காவிட்டாலும், கலைஞர் டி.வி கேட்கும் இல்லையா.

கடலூர், தமிழக அரசியல் வரலாற்றில் தவறான காரணங்களுக்காக இடம் பிடிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. கடலூர்க்காரர்களுக்கு என் அனுதாபங்கள். ஜெயலலிதா, கனிமொழி இருவரும் அங்கேதான் தங்கள் அரசியலின் அடுத்த கட்ட ப்ரமோஷனைப் பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தன் வாரிசாக ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். கலைஞரின் அரசியல் வாரிசாக ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஸ்டாலினுக்கு ஒதுக்கிய நேரத்தில் கனிமொழி பேச வைக்கப்பட்டிருப்பது ப்ரமோஷன்தானே.

முதல்முறையாக மாநில அளவில் ஒரு மாநாடு நடத்தியதில் தி.மு.க. தமிழகப் பெண்களுக்கு சொல்லியிருக்கும் செய்திதான் என்ன ?

செய்தி 1 : மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்ட ஒரே சிலை கண்ணகிக்குத்தான். கண்ணகிக்கு இரு முகங்கள் உண்டு. அரசனிடம் அஞ்சாமல் நீதி கேட்ட முகம் ஒன்று. இந்த முகத்தை தி.மு.க. இப்போது வலியுறுத்தவேண்டிய அரசியல் தேவை எதுவும் இல்லை. ஏனென்றால் அதுவேதான் ஆளுங்கட்சி. கண்ணகியின் இன்னொரு முகம்? அதுதான் பிரதான முகம். கணவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சகித்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்து, அவனுக்கு தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்து, அவனிடம் தனக்கான நீதியைக் கேட்காமல், அவனுக்காக அரசிடம் நீதி கேட்டுப் போராடும் முழு அடிமையின் முகம் அது. இந்த முகத்தைத்தான் தமிழ்ப்பெண்களுக்கு கழகம் முன்வைக்கிறதோ?

செய்தி 2: வரலாற்றில் முதல்முறையாக ஒரே மேடையில் கலைஞர் கருணாநிதி தன் மனைவி, துணைவி இருவருடன் தோன்றினார். பிறந்த நாளன்று கூட அவர் இப்படி ஒரே மேடையில் அவர்களுடன் தோன்றியதில்லை. மகளிர் ஊர்வலத்தைப் பார்வையிட்ட மேடையில் கண்ட இந்தக் காட்சி மகளிருக்கு அளிக்கும் செய்தி என்ன? கண்ணகியின் இரண்டாவது முகத்தை எல்லாரும் ஏற்கச் சொல்லுவதா?

செய்தி 3: கலைஞர் கருணாநிதிக்கு யாரும் மார்க் போட முடியாது; அதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் போவதில்லை என்று கனிமொழி முழங்கியது இன்னொரு முக்கியமான செய்தி. பெரியாரையும் காந்தியையுமே விமர்சிக்கும் நாடு இது. இங்கே கருணாநிதியின் ஆட்சிக்கு மார்க் போடும் தகுதி யாருக்கும் இல்லை என்று சொல்வது அப்பட்டமான பாசிசம். கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் இருக்கும் பாசிட்டிவ்களின் கலவையாக கனிமொழி என்ற அரசியல்வாதி உருவாகலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது. இருவரிடமும் இருக்கும் நெகட்டிவ்களின் கலவையாகிவிடுவாரோ என்ற கவலையே ஏற்படுகிறது.

செய்தி 4: மாநாட்டில் கலைஞர் செய்த ஒரே முக்கியமான அறிவிப்பு எரிவாயு சிலிண்டர் விலையில் சலுகை பற்றியது. சமையலறை சமாசாரம்தான் பெண்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்ற சம்பிரதாய அணுகுமுறையின் இன்னொரு அடையாளமே இது. `என்னால் முடிந்தது எரிவாயு விலைக் குறைப்பு. ராமதாஸ் 2011ல் வந்து மதுக்கடைகளை மூடுவார்’ என்றாவது தலைவர் சொல்லியிருக்கலாமே.
ஒரு பின்குறிப்பு: விமர்சகனின் விமர்சகர்களே, கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு அவசர அவசரமாக பார்ப்பனிய எதிர்ப்பு வாட்களை உருவத் தொடங்குமுன்பு தயவுசெய்து பொறுமையாக இன்னொரு முறை படிக்கவும். பகுத்தறிவுக்கு விரோதமாக ஒரு வரி இருந்தாலும், பிராயச்சித்தமாக மஞ்சள் சால்வை அணியத் தொடங்கிவிடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

இந்த வாரப் பூச்செண்டு

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு மாதக்கசிவு நேரங்களில் பயன்படுத்துவதற்கான நேப்கின்களை இலவசமாக அளிக்க முடிவு செய்ததற்காக, சென்னை மாநகராட்சிக்கு இ.வா.பூ. இந்த நேப்கின் சப்ளையை பெரும் நிறுவனங்களிடம் தராமல், அவற்றைத் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைத்தால் இன்னொரு பூச்செண்டும் தருவேன்.

இந்த வாரக் குட்டு

எனக்கே. குறைந்தது ஐந்து வாரமாவது தி.மு.க, கலைஞர் தொடர்பான எதைப் பற்றியும் கட்டுரை எழுதக் கூடாது என்று கொண்டிருந்த விரதத்தை முறித்ததற்காக இ.வா.குட்டு.

நன்றி : குமுதம்

Posted in DMK, Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Asia Cup – Victorious Indian women’s cricket team

Posted by Snapjudge மேல் மே 15, 2008

2008 ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டியில் இந்தியா மீண்டும் சாம்பியன்

இந்திய மகளிர் கிரிக்கட் அணியின் தலைவி மித்தாலி
இந்திய மகளிர் கிரிக்கட் அணியின் தலைவி மித்தாலி

இலங்கையில் இடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்றைய தினம் குருணாகல் வலகெதர மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில், இந்திய அணி, இலங்கை அணியை 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தினை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் போட்டித் தொடரில் பாகிஸ்தான், வங்காளதேசம், மற்றும் இலங்கை அணிகளுக்கெதிரான முன்னைய போட்டிகளில் எதிலுமே தோல்வியடையாத இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரையறுக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 83 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

இந்த போட்டித் தொடரில் ஆசிய கிண்ணத்தினை வென்றமை குறித்து இந்திய மகளிர் கிரிக்கட் அணியின் தலைவி மித்தாலி ராஜ் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய விசேட செவ்வியினை நேயர்கள் இன்றைய விளையாட்டரங்கம் நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

Nayanthara alleges she was solicited for sex by IPL executives – Cricket, T20, Contracts

Posted by Snapjudge மேல் மே 7, 2008

அது ‘அந்த’ டார்ச்சர்-நயனதாரா புது குண்டு!

ஐ.பி.எல்லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் சிலரது ‘தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கேற்ப’ நடந்து கொள்ள நான் மறுத்து விட்டதாலேயே என்னை டிஸ்மிஸ் செய்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என நயனதாரா பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதர்களாக முன்னணி நட்சத்திரங்கள் விஜய் மற்றும் நயனதாரா நியமிக்கப்பட்டனர். இதற்காக விஜய்க்கு ரூ.1 கோடியும், நயனதாராவுக்கு ரூ.40 லட்சமும் சம்பளமாக வழங்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இதில் நயனதாராவுக்கு ரூ.20 லட்சம் அட்வான்ஸாக வழங்கியிருந்தனர்.

ஆரம்பத்தில் அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்சிகளில் பங்கேற்ற நயனதாரா, பின்னர் ரஜினியின் குசேலன் ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் சென்றுவிட்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக படப்பிடிப்புத் தளத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதற்கு அடுத்த நாளே சென்னையில் அவர் தூதராக இருந்த சென்னை அணி பங்கேற்கும் மேட்ச். ஒப்பந்தப்படி இந்த மேட்சின்போது, வீரர்களை உற்சாகப்படுத்தவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் தூதரான நயனதாரா வந்திருக்க வேண்டும். ஆனால் விஜய் மட்டும் வந்து தனியாகக் கையாட்டிக் கொண்டிருந்தார். உடல்நிலையைக் காரணம் காட்டி நயனதாரா வரவில்லை.

அடுத்த நாளே அவரை தூதர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குதாரரும், ஏவி.எம்.பாலசுப்பிரமணியனின் மகனுமான குருநாத் மெய்யப்பன் அதிரடியாக அறிவித்தார். நயனதாரா தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நயனதாராவுக்கு முன்பணமாகக் கொடுத்த ரூ.20 லட்சத்தில் 15 லட்சத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அதற்காக அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி சில தினங்களுக்கு முன் நயனதாராவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னை குருநாத் மெய்யப்பன் வேண்டுமென்றே அசிங்கப்படுத்துவதாக நயனதாரா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது;

என்னை இந்த தூதர் பொறுப்பிலிருந்து நீக்கியது அவசர குடுக்கைத்தனமானது. முறையற்றது. ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதற்காக நியாயமாக நான்தான் அவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்.

நியாயமான காரணங்களுக்காக, மேட்சின்போது வராமல் போவது இருபக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுள் ஒன்று. நான் மருத்துவமனையில் இரு தினங்கள் தங்கியதற்கான சான்றிதழ்கள் என்னிடம் உள்ளன. என்னை நீக்கியதற்கு இதுவல்ல காரணம். அது ‘வேறு பின்னணி’… என்கிறார் நயனதாரா.

அவர்கள் ‘என்ன எதிர்பார்த்தார்கள்’ என்பது ஒரு திரைப்பட நடிகையாக எனக்கும் தெரியும். ஆனால் நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. இதற்கு மேலும் சட்டம், காண்ட்ராக்ட் என்ற பெயரில் என்னைத் தொந்தரவு செய்தால் நானே சட்டத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளாராம் நயன்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை இதுதானா?

Posted in India, Law, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

State of local bodies – Functioning of elected officials in Civic, Panchayats

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 7, 2008

களையப்பட வேண்டிய களைகள்!

ஜி. மீனாட்சி

கோவை மாவட்டத்திலுள்ள குக்கிராமம் ஒன்றுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் தீவிர வரி வசூல் முகாம் நடந்து கொண்டிருந்தது.

கால அவகாசத்தைக் கடந்தும், பல தடவை நோட்டீஸ் அனுப்பியும், இறுதி எச்சரிக்கை விடுத்தும் சரிப்பட்டு வராத நிலையில் கடைசி முயற்சியாக வரி செலுத்தாதவர்களின் இல்லத்திற்குச் சென்று குடிநீர்க் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் அந்த ஊரின் பெண் பஞ்சாயத்துத் தலைவி.

“”அரசுக்குச் சேர வேண்டிய வரியை வசூலிப்பதில் எத்தனை கஷ்டம் பார்த்தீர்களா? அரசு அதிகாரிகள்கூட இதற்கு ஒத்துழைப்பதில்லை. பல முறை அழைத்த பிறகுதான் வருகிறார்கள். இந்நிலையில், வரி செலுத்தாதவர்களின் கோபம் முழுவதும் பஞ்சாயத்துத் தலைவர்களின் மீதுதான் பாய்கிறது…” என்றார் வருத்தத்துடன்.

அவரது வார்த்தைகளை நிரூபிப்பதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்துள்ளனர்.

சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், ஊராட்சித் துணைத் தலைவர்களும் தங்களை சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

சட்டப் பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அமலுக்கு வராத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த இடஒதுக்கீடு தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதும் பாராட்டுக்குரியது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகள், சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா என்பது கேள்விக்குறியே.

பல ஊராட்சிகளில், ஊராட்சிக் குழுக் கூட்டம் நடக்கும்போது பெண் உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை என்பதே உண்மை. அவர்களுக்குப் பதிலாக, அவர்களின் கணவன்மார்களோ அல்லது குடும்பத்து ஆண்களோ கூட்டத்துக்கு வருவதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி ஒருவரே வருத்தம் தெரிவித்திருந்தார்.

படிப்பறிவற்ற, கிராமத்து, தலித் பெண்களில் பலர் வெற்றி பெற்றும், தங்களின் உரிமைகளை உணர முடியாதவர்களாகவே உள்ளனர். படித்த பெண்களில் பலர் கிராம மக்களுக்குச் சேவை செய்யும் உன்னத உணர்வுடன், உள்ளாட்சி அமைப்புகளில் முக்கியப் பதவி வகித்து வருகின்றனர். ஆனால் அந்தப் பெண் தலைவிகள், தங்கள் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியாதபடி ஏகப்பட்ட குறுக்கீடுகள்.

எல்லாவற்றையும் திறமையாகச் சமாளித்து மக்கள் பணிகளை நிறைவேற்றும்போது, நிதிப் பற்றாக்குறை, சக ஊழியர்களின் ஒத்துழைப்பின்மை என்று தொடரும் நெருக்குதல்கள்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் உரிய முக்கியத்துவம் அளித்ததுடன் அரசின் பணி முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகளுக்கு, உள்ளாட்சி நிர்வாகம் குறித்து தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு அவ்வப்போது பயிற்சி அளித்தல், அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தல், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி கருத்துப் பரிமாற்றம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்களில் ஈடுபட வழிவகை செய்தல் போன்றவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். முக்கியமாக, நிதியைக் கையாளும் முறை குறித்தும் பயிற்சியளிக்க வேண்டும்.

சொந்த ஊரில் பஞ்சாயத்துத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும், மக்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் கைகள் கட்டப்பட்டுத் தவிக்கும் பெண்கள் ஏராளம். எல்லாவற்றையும் மீறி, ஜாதி, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, நேர்மையாய் பணியாற்றும் பெண் தலைவிகளுக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் என்று தொடர்கிறது வன்முறை.

இந்திய அரசியல் அமைப்புச் சட்ட 73-ம் திருத்தத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டு முன்னேற்றத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பொருளாதார மேம்பாடு, சுகாதாரம் போன்றவற்றை ஊராட்சிகளில் ஏற்படுத்தும் வகையில் ஊராட்சிகளுக்கு முழு சுதந்திரமும், அதிகாரமும் அளிக்க அரசமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவற்றை குறைவின்றி நிறைவேற்றும் பொறுப்பும், கடமையும் ஊராட்சித் தலைவிகளுக்கு உள்ளது. அவர்கள் பணியை தடையின்றி நிறைவேற்ற அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் ஒத்துழைப்புத் தரவேண்டும்.

பல கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்களை சுதந்திரமாக நடத்தும் உரிமைகூட ஊராட்சித் தலைவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. சொந்த கிராமத்தின் அத்தியாவசியத் தேவைகளை நன்கு அறிந்தவர்கள், ஊராட்சிப் பிரதிநிதிகள் மட்டுமே. ஆனால் கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்கள் என்னென்ன என்பது குறித்து முன்கூட்டியே ஆட்சியர் அலுவலகமே ஆணை பிறப்பிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதுபோன்ற பல காரணங்களால், பதவியில் இருந்தும் கடமை ஆற்ற முடியாத நிலைக்கு ஊராட்சித் தலைவிகள் தள்ளப்படுகிறார்கள்.

அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் போன்றவற்றில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வைத்ததுதான் சட்டம். காவல் துறையும் அவர்கள் பின்னே பக்கபலமாய் நிற்கிறது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள். தமிழகத்தில் இன்னும் அந்த நிலை வரவில்லை.

குறைகள் களையப்பட்டு, சுதந்திரமாக, நேர்மையாகச் செயல்படும் வகையில் ஊராட்சிப் பெண் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரமும், அங்கீகாரமும் வழங்கினால் மட்டுமே ஊராட்சியை உவகை மிக்க ஆட்சியாக மாற்ற முடியும்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »