Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Defense’

Aviation branch of Tamil Tigers in Eezham: LTTE AirForce – Kumudam Reporter

Posted by Snapjudge மேல் மே 8, 2008

விடுதலைப்புலிகளின் விமான ரகசியங்கள் – அதிர்ச்சியில் இலங்கை ராணுவம்
– ஆர். முத்துக்குமார்

ஏப்ரல் 25, 2008. நள்ளிரவு நேரம். மணி 1.25 ஆகியிருந்தது. இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் இருந்து இரண்டு சிறிய ரக போர் விமானங்கள் புறப்பட்டு, வானத்தில் மிதக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இரணமேடு என்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வானத்தை நோக்கிக் கிளம்பியது.

சரியாக 1.32 ஆனபோது மணலாறு பகுதியை ஒரு விமானம் நெருங்கியிருந்தது. சில நொடிகள் இடைவெளியில் இரண்டு குண்டுகள் விமானத்தில் இருந்து தரையை நோக்கி வீசப்பட்டன. குண்டுகள் தாக்கிய இடம், இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான மணலாறு முன்னரங்கு நிலையம். அதற்குள் இன்னொரு விமானம் சிங்கபுரா என்ற இடத்தை நெருங்கியிருந்தது. அங்குள்ள பிராந்திய கட்டளையிடும் தலைமையகத்தை நோக்கி விமானத்தில் இருந்து ஒரு குண்டு வீசப்பட்டது.

குண்டுகள் இலக்கைத் தாக்கிய பதினெட்டாவது நிமிடத்தில் இரண்டு விமானங்களும் முல்லைத்தீவுக்கு அருகில் உள்ள முல்லியவெளி ஓடுபாதையில் வந்து இறங்கின. இந்த ஓடுபாதை முல்லைத் தீவில் இருந்து ஏழாவது கிலோமீட்டரில் இலங்கை ராணுவத்தினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, புலிகளால் உருவாக்கப்பட்டதாகும்.

தாக்குதலை நடத்திய விமானங்கள் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயமில்லை. (இரணமேட்டில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் இலங்கை ராணுவத்தின் கவனத்தைத் திசை திருப்பும் காரியத்தில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது தனிக்கதை). ஆனால், விமானங்கள் தரையிறங்கிய பிறகு, நடந்த காரியங்கள் இலங்கை ராணுவம் உள்ளிட்ட பலருடைய புருவங்களையும் உயர வைத்துள்ளன.

அப்படி என்ன நடந்துவிட்டது தரையில்?

விமானங்கள் கீழே இறங்குவதற்கு வசதியாக சமிக்ஞை கொடுக்கும் விதமாக, விமான ஓடுபாதையில் விளக்குகளை எரியவிட்டுக் காத்துக்கொண்டிருந்தனர் புலிகள். விமானங்கள் கீழிறங்கியதும் எரிந்து கொண்டிருந்த பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டன. குறைவான வெளிச்சத்தில் விமானங்களின் இறக்கைகளைப் பக்குவமாக மடக்கினர் புலிகள். பாகங்கள் மின்னல் வேகத்தில் கழற்றப்பட்டன. சில நிமிடங்களுக்கு முன்னர் விண்ணில் வட்டமிட்ட விமானங்கள் இரண்டும் தற்போது சின்னச்சின்ன உதிரிபாகங்களாக மாறியிருந்தன. எல்லாம் ஒன்றாக பார்சல் செய்யப்பட்டு, அங்கே தயாராக நின்று கொண்டிருந்த புலிகளுக்குச் சொந்தமான டிராக்டர் ஒன்றில் ஏற்றப்பட்டன. பைலட்டுகள் உள்ளிட்ட புலிகள், டிராக்டரில் ஏறிக்கொள்ள, வனப்பகுதியை நோக்கி விரைந்து சென்று மறைந்தது டிராக்டர்.

இந்த இடத்தில் இருந்துதான் ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. அது எப்படி புலிகளால் விமானங்களைத் தனித்தனி பாகங்களாகப் பிரித்து டிராக்டரில் எடுத்துச் செல்ல முடிந்தது? அந்த அளவுக்கு நவீன ரக விமானங்கள் புலிகளுக்கு எப்படிக் கிடைத்தன? எங்கிருந்து கிடைத்தன? அவற்றை இயக்கியது யார்? இப்படிப் பல கேள்விகளுக்கான விடைகள் தற்போது அம்பலமாகியுள்ளன.

விடுதலைப்புலிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே தங்களுடைய வான்வழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். கட்டுநாயக விமானத் தளத்தின் மீதான தாக்குதல்தான் இவற்றுக்குப் பிள்ளையார் சுழி. அவ்வப்போது இடைவெளிவிட்டு மூன்று தாக்குதல்கள் நடந்தேறின. தற்போது நடந்துள்ள மணலாறு தாக்குதல், புலிகளின் ஐந்தாவது வான்வழித் தாக்குதல் சம்பவம். அனைத்துக்குமே புலிகள் பயன்படுத்தியது ஞீறீவீஸீ க்ஷ் 143 லி என்ற மாடலைச் சேர்ந்த சிறிய ரக விமானங்கள்தான்.

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மொரவன் ஏவியேஷன் என்ற நிறுவனத்தின் பெருமைக்குரிய தயாரிப்பு இந்த விமானங்கள். இதுவரை சுமார் ஆறாயிரம் விமானங்களுக்கு மேல் தயாரித்து, அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்துள்ளது இந்த நிறுவனம்.

மொரவன் நிறுவனம் தயாரிக்கும் விமானங்களில் மிகவும் எடை குறைவானது, புலிகள் பயன்படுத்தும் கிசிடிண 143 மாடல்தான். இதன் எடை வெறும் 850 கிலோ. வெகு எளிதாக இவற்றின் பாகங்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்துவிட முடியும். அதேபோல, அதிக சிரமமில்லாமல் பாகங்களை ஒருங்கிணைத்துவிடவும் முடியும். இந்த அம்சம்தான் புலிகளை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் இந்த விமானம், புலிகளுக்காகவே பிரத்யேகமாக இரண்டு பேர் மட்டும் செல்லத்தக்க வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. முக்கியமான விஷயம், விமானம் ஓட்டத் தெரிந்த பைலட் எவர் வேண்டுமானாலும் இந்த விமானங்களை இயக்க முடியாது என்பதுதான். சிறப்புப் பயிற்சிகள் பெற்றவரால் மாத்திரமே இயக்க முடியும். இதற்கு புஷ் ஃப்ளையிங் என்று பெயர்.

சரி.. இந்தப் பயிற்சிகள் எப்படி புலிகளுக்குத் தரப்பட்டன?

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும், இவற்றைப் புலிகள் வாங்கியது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஃபிளையிங் கிளப் என்ற நிறுவனத்திடம் இருந்துதான். அந்த நிறுவனமே புலிகளுக்கு புஷ் ஃபிளையிங் பயிற்சிகளை அளித்துள்ளன. முக்கியமாக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெரும்பாலான பைலட்டுகள் இந்த புஷ் ஃபிளையிங் கலையில் நிபுணர்கள்.

புலிகள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றி இலங்கையில் இருந்து வெளியாகும் ‘தி பாட்டம் லைன்’ வார இதழில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை தகவல்களும் அவர்களுடைய வான்படைக்கு எந்த அளவுக்கு சக்தி இருக்கிறது என்பதை அப்பட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளன. அடுத்த தாக்குதலை புலிகள் எப்போது வேண்டுமானாலும் நிகழ்த்தலாம் என்பதால், இலங்கை ராணுவத்தின் வயிற்றில் புளி கரைந்து கொண்டிருக்கிறது, வேக வேகமாக!

– குமுதம் ரிப்போர்ட்டர்

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »