கனிமொழி, கயல்விழி -கழகம் செல்லும் புது வழி!
ஆ. ரகுராமன்
சென்னை, ஜூன் 16: தி.மு.க.வில் ஆரம்பம் முதலே சத்தியவாணி முத்து உள்ளிட்ட ஒரு சில பெண்கள் மட்டுமே அமைச்சர் பதவியிலும் கட்சியின் உயர்நிலை அமைப்புகளிலும் இருந்துள்ளனர்.
நெடுநாள்களாக, சக்திவாய்ந்த பெண் தலைவர் எவரும் தி.மு.க.வில் இல்லை. அந்த இடத்தை கனிமொழி, கயல்விழி ஆகியோர் நிரப்புவார்களா என்ற கேள்வியை திமுகவின் கடலூர் மாநாட்டு நிகழ்வுகள் எழுப்புகின்றன.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மு.க. அழகிரி மகள் கயல்விழி ஆகியோரை கட்சி ரீதியாக முன்னிறுத்தவே கடலூர் திமுக மகளிரணி மாநில மாநாடு நடத்தப்படுகிறது என்று பரவலான பேச்சு இருந்தது.
தொடக்கம் முதலே மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இதை மறுத்து வந்தார்.
ஆனால் மாநாட்டின் முதல் நாள் திமுக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கனிமொழி முன்னிலைப்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிந்தது.
மாநாட்டுப் பந்தலில் அமைச்சர்கள், திமுக தலைவர்கள் அனைவரும் முதல்வர் கருணாநிதிக்கு அடுத்து கனிமொழிக்கே அதிக மரியாதை அளித்தனர்.
முதல்வரின் மேடைக்கு அருகிலிருந்த மேடையில் அமைச்சர்களுக்கு நடுவில் கனிமொழி அமர்ந்திருந்தார். கனிமொழியும் கருணாநிதியும் மட்டுமே ஊர்வலமாக வந்த பெண்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தனர்.
மாநாட்டுக்கு முத்தாய்ப்பாக, பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய கனிமொழி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலிலதா, பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் விஜயகாந்த் ஆகியோரை விமர்சித்துப் பேசினார்.
கட்சியில் அவருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அவரது பேச்சு உணர்த்துவதாக இருந்தது. மாநாட்டில் எத்தனையோ பேர் பேசினாலும் கனிமொழியின் பேச்சு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
மாநாட்டிற்கு வைக்கப்பட்ட பேனர்கள், வரவேற்பு வளைவுகளில் கருணாநிதி, அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த முக்கியத்துவம் கனிமொழிக்கு வழங்கப்பட்டது.
வரவிருக்கும் திமுக உள்கட்சித் தேர்தலில் கனிமொழிக்கு மகளிரணியில் முக்கிய பொறுப்பு தரும் எண்ணத்தில் முதல்வர் கருணாநிதி இருப்பதாகத் தெரிகிறது. அதற்காகக் கட்சியினரின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கத்திலேயே இந்த மாநாடு நடத்தப்பட்டது என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கயல்விழி…. “வள்ளுவமும் வாய்மையும்’ என்ற தலைப்பில் அழகிரியின் மகள் கயல்விழி பேசுவதைக் கேட்கவும் கூட்டத்தினரிடையே ஆவல் இருந்தது.
கட்சியில் மு.க. அழகிரி துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்பதாகவும், அவரை சமாதானப்படுத்த அவரது மகள் கயல்விழிக்கு கட்சிப் பதவி வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.
இதற்கு முன்னோட்டமாகத்தான், மாநாட்டில் அவர் பேசவைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
கயல்விழி பேசுவதற்கு முன் பல பேச்சாளர்களுக்கு மகளிரணித் தலைவர் நூர்ஜஹான் பேகம் ஏழு நிமிடங்கள் கூட பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியும் இதில் அடக்கம். ஐந்து நிமிடங்களிலேயே பேச்சை முடிக்கச் சொன்னதால் தமிழரசி சற்று வேகமாக “நன்றி, வணக்கம்!’ என்று கூறி விடைபெற்றார்.
கயல்விழி 15 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசினார். அவர் தீவிர அரசியலில் இயங்குவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் குறிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. அவர் பேசும்போது, எந்தவிதக் குறுக்கீடும் இல்லை.
பெண்கள் எழுச்சிக்காகவும், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், கடலூரில் திமுக மகளிரணி மாநாடு நடத்தப்படுவதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியிருந்தார்.
மாநாட்டில் பேசிய சிலர், வரும் தி.மு.க.வில் கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தற்போது கட்சிப் பொறுப்பில் இருக்கும் சில பெண்களும் கட்சி நிர்வாகிகளின் உறவினர்களாக மட்டுமே இருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியதுடன் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் பெண்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலான திமுக பெண் உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.