21-01-09 தொடர்கள் | |||
கோட்டைப் பிள்ளை மார் வைதீகப்பற்று மிக்கவர்களாக இருந்தனர். பாண்டிய மன்னர்கள் பட்டமேற்கும் விழாக்களில் முடிசூடுவதற்கு முடியை எடுத்துக் கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருந்ததாகக் கூறுகிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தங்கள் குலப்பெண்களை கோட்டையை விட்டு வெளியில் அனுப்பாததை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலத்தில் அந்த முறையில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கோட்டைப் பிள்ளைமார் இனப் பெண்கள் வெளியில் வரத் தொடங்கினர். கல்வி கற்கத் தொடங்கினர். இந்த சமுதாயத்தில் பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித் தோன்றலாகவே கருதப்படுகிறது. பொதுவாக பிள்ளைமார் சமூகத்தில் வரதட்சணை கேட்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. தொடக்கத்தில் பிள்ளைமார் சமூகத்தார் தங்கள் சொந்தத்திலேயே திருமண உறவு கொண்டிருந்தனர். உறவு விட்டுப் போய் விடக் கூடாது என்பதால் இப்படி இருந்தனர். ஆனால் இப்போது தங்கள் சொந்தங்களில் நல்ல வரன் கிட்டாதபோது மற்ற பிள்ளைமார்களுடனும் திருமண உறவு கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. திருமணங்களை இரண்டு வீட்டாரும் பேசி முடிக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றவுடன் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். பந்தக்கால் நடுவது, மாப்பிள்ளை அழைப்பு உட்பட அனைத்திற்கும் அன்றே நாள் குறிக்கிறார்கள். திருமணத்தை நடத்துவது பெண் வீட்டாரின் பொறுப்பாகவே இன்றும் உள்ளது. முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். திருமணத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேசிகர் ஒருவர் சைவமுறைப்படி மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தித் தருகிறார். மாப்பிள்ளை, சகலை, மைத்துனர் என்று மூன்று பேர் அமர்ந்திருக்க, மணமான புதுப் பெண் வாழை இலை போட்டு அவர்களுக்குப் பரிமாற வேண்டும். இதனை `சட்டரசம் பரிமாறுதல்’ என்கின்றனர். திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை பெண்ணை தேங்காய் உருட்டச் சொல்லுதல், தலையில் வைத்து அப்பளம் உடைத்தல் போன்ற விளையாட்டுக்களை ஆடச் செய்வது, பல பிள்ளைமார் சமூகத்தாரிடம் இன்றும் காணப்படும் வழக்கம். மணப்பெண் வீட்டிலும் மாப்பிள்ளையின் மறுவீட்டு அழைப்பிலும் விருந்து உபசாரம் தடபுடலாக இருக்கும். இவர்களின் திருமண விருந்தில் சொதி சாப்பாடும் அவியலும் மிகப் பிரசித்தம். பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த முப்பதாம் நாளில் சடங்கு நடக்கும். தாய்மாமன் சீலை எடுத்துக் கொடுத்து இந்தச் சடங்கை நடத்த வேண்டும். இந்தச் சடங்கிற்குப் பின், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது. ஆனால் இப்போது இந்த முறை மாறி, காலத்திற்குத் தக்கபடி நடக்கத் தொடங்கிவிட்டனர். பெரும்பாலான பெண்கள் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது வழக்கம். காதில் `பாம்படம்’ அணிய காதுகளை நீண்ட அளவிற்கு வளர்ப்பது இவர்களது வழக்கம்.இன்று நாகரிகம் கருதி இந்த வழக்கம் குறையத் தொடங்கி விட்டது. விதவைகள் திருமணத்திற்கு அனுமதி மறுத்து வந்த இவர்கள், இப்போது அதற்கு அனுமதி வழங்க ஆரம்பித்து விட்டனர். விதவைகள் வெள்ளைச் சேலை அணியும் வழக்கமும் அருகி வரத் தொடங்கி விட்டது. கணேசருக்கு செவ்வாய் பூஜை செய்வது வழக்கம். பெண்கள் மட்டுமே இந்த பூஜை செய்வதாக சொல்லப்பட்டது. இதில் ஆண்கள், சிறுவர்கள் அனுமதி கிடையாது. அய்யனார், காளி முதலிய கிராம தெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இச்சமூகத்தினர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது. இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு வீர வரலாறு. இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றார்கள். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதில் ஈடுபட்டோரில் பிள்ளை மார்களின் பங்கு மகத்தானது. உறங்கிக்கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, நாமிருக்கும் நாடு நமக்குச் சொந்தமானது என்று மக்களை எழுச்சிபெறச் செய்தவர் வ.உ.சி. நாமே கப்பல் ஓட்டி கடல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று முனைந்து வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி இரண்டு கப்பல்களை விட்டார். சுதந்திரப்போரில் தென்னகத்தின் தளபதியாக இருந்து ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்தார். அதனாலேயே வெள்ளையரின் அடக்குமுறைக்கு ஆளாகி, சொத்து சுகங்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்தார். நமது பாரதநாட்டின் விடுதலை வரலாற்றில் மாவீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் அழுத்தமாகப் பதிந்துள்ளது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக இருந்து வெள்ளையர்களை அச்சுறுத்தியதால் பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளின் தலைமையின்கீழ் போராடிய அகிம்சா வீரர். பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பிள்ளைமார் சமூகத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது. அதேபோல், இச் சமூகத்தினர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது.
|
Posts Tagged ‘Custom’
Pillaimaar: Ira Manikandan
Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2009
Posted in India, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: கலாசாரம், கலாச்சாரம், சமூகம், சாதி, ஜாதி, தமிழ்நாடு, பிள்ளை, பிள்ளைமார், Caste, Community, Custom, Kumudam, Kumudham, Marriages, Pillai, Pillaimaar, Rituals, Weddings | 15 Comments »