ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆடும் கால்கள் அமைதியாக…
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771
எனது மகன் வயது 23. அவனுக்கு நோய் தாக்கப்பட்டுள்ளதாக ஆங்கில வைத்தியர் கூறுகிறார். இந்நோய் காரணமாக காலில் குடைச்சல் ஏற்படுகிறது. அதன் காரணமாக காலை ஆட்டிக் கொண்டே இருக்கிறான். இரவில் குடைச்சல் காரணமாகத் தூக்கமின்றித் தவிக்கிறான். மன உறுத்தல் ஏற்பட்டு படிக்கவும் முடியாமல் சிரமப்படுகிறான். இதற்கு ஆங்கில வைத்தியத்தில் மருந்துகள் இல்லை என்று கூறுகிறார்கள். ஆயுர்வேத
முறையில் இதற்குச் சிகிச்சை செய்ய முடியுமா?
என்.கங்காதரன், இராமேஸ்வரம்.
நம் மனித உடலை வாதம், பித்தம், கபம் என மூன்று வகை தோஷங்கள் தம் ஆளுமையின் கீழ் வைத்துள்ளன. அதிலும் முக்கியமாக இடுப்பு மற்றும் அதன் கீழ்ப் பகுதிகள் அனைத்தும் வாததோஷத்தின் முக்கிய இருப்பிடங்களாகும். இந்த வாதத்திற்கென்றே சில பிரத்யேக குணங்கள் இருக்கின்றன. வறட்சி, குளிர்ச்சி, நுண்ணியது மற்றும் அசையும்தன்மை ஆகிய இதன் குணங்கள் எப்போதும் ஒரே சீரான நிலையில் இருக்க, நம் அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்களும் உணவு வகைகளும் உதவுகின்றன. இந்தக் குணங்கள் அனைத்தும் தவறான செயல் மற்றும் உணவுகளால் சீற்றமடைந்துவிட்டால் அவற்றின் தாக்கத்தை இடுப்பிலும், உடல் கீழ்ப்பகுதிகளிலும் அதிகமாக உணரலாம். நீங்கள் குறிப்பிடும் ரெஸ்ட் லெஸ் லெக் எனும் நோயில், வாத தோஷத்தின் அசையும் தன்மை எனும் தனிப்பட்ட குணம் மற்ற குணங்களைவிட அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் காரணமாக காலில் குடைச்சலும், எந்நேரமும் காலை ஆட்டிக் கொண்டிருத்தலும் ஏற்படுகிறது. இந்தத் தனிப்பட்ட குணம் சீற்றமடையக் காரணமாக அதிக தூரம் சைக்கிளை மிதித்து பயணம் செய்தல், தையல் மெஷினில் காலை வேக வேகமாக ஆட்டித் துணிகளைத் தைத்தல், அதிக அளவில் நடைப்பயிற்சி செய்தல், சிற்றின்பத்தில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுதல், நீண்ட தூரம் நடந்து வீடு வந்ததும் குளிர்ந்த நீரால் கால்களை அலம்புதல், குளிர்ந்த நீரில் குளித்தல், குடித்தல், ஆழ்ந்த உறக்கமின்றிப் புரண்டு புரண்டு படுத்தல், உணவில் உப்புக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, பருப்பு வகைகள், காரம், கசப்பு. துவர்ப்புச் சுவை ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிடுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
அசையும் தன்மை எனும் குணத்திற்கு நேர் எதிரான குணமாகிய ஸ்திரம் எனும் நிலையானது, மருந்தாகவும், உணவாகவும், செயலாகவும் தங்கள் மகனுக்கு அளிக்கப்படுமேயானால் அவர் இந்த உபாதையிலிருந்து விடுபடலாம். அந்த வகையில் ஆயுர்வேத மருந்தாகிய அஸ்வகந்தாதி லேஹ்யம் 10 கிராம், 10 சொட்டு க்ஷீரபலா 101 எனும் மூலிகை நெய்யை அந்த லேஹ்யத்துடன் நன்றாகக் கலந்து, காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிட நல்ல மருந்தாகும். இந்த மருந்தைச் சாப்பிட்ட பிறகு அரை கிளாஸ் வெதுவெதுப்பான பசும்பாலுடன் சர்க்கரை கலந்து சாப்பிடவும். சுமார் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும். மேல்பூச்சாக மஹாமாஷ தைலமும், பலா அஸ்வகந்தாதி குழம்பு எனும் தைலமும் வெதுவெதுப்பாக இடுப்பிலிருந்து கால்பாதம் வரை தேய்த்து சுமார் முக்கால் மணி நேரம் வரை ஊற வைத்து வெந்நீரில் குளிப்பது நல்லது. உணவில் எண்ணெய்ப் பசையுள்ளதும், சூடான வீர்யம் கொண்டதுமான உணவு வகைகளும், இனிப்புச் சுவை, புளிப்புச்சுவை, உப்புச் சுவைகளுள்ளதுமான பொருட்களை அதிகம் சேர்க்க வேண்டும். கால்களை இதமாகப் பிடித்து விடுதல், வாதநாராயணன், நொச்சி இலை, ஆமணக்கு இலை, புங்கன் இலை, யூகலிப்டஸ் இலை போன்றவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரில் இடுப்புவரை அமிழ்ந்து இருத்தல் போன்றவை நன்மை தரும். கடற்கரைக் காற்று அதிகமுள்ள இடத்திலிருந்து சற்று சூடான பூமியும் காற்றுமுள்ள ஊரில் உங்கள் மகன் சிலகாலம் வாழ்வதும் நல்லதேயாகும்.