பீஹார் வெள்ளத்துக்கு அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமா என்பதை ஆராய விசாரணை
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பெரும் சீரழிவை ஏற்படுத்திய வெள்ள நிலமைக்கு அதிகாரிகளின் கவனக் குறைவே காரணமா என்பதனை ஆராய மேலும் ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கோசி நதிக்கரைகளில் உடைப்பு ஏற்பட்டதன் விளைவாக சுமார் ஆயிரம் கிராமங்கள் நீரில் மூழ்கின; மேலும் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த விசாரணைகளில் பருவ மழைக்கு முன்னதாக கரைகளை வலுப்படுத்தும் நவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டுமா என்பது குறித்தும், பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
பரந்துபட்ட அளவில் இடம் பெற்ற ஊழலே இதில் ஒரு பெரும் பங்காற்றியிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக புதுடில்லியிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்
பீஹார் வெள்ளத்தில் சிக்கியுள்ள 4 லட்சம் பேரை இன்னமும் மீட்க வேண்டியுள்ளது
![]() |
![]() |
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் |
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், பெருமளவு நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள வெள்ளத்தில் இருந்து இன்னும் குறைந்தது 4 லட்சம் பேரை மீட்க வேண்டியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
பருவ மழை காரணமாக கோஷி ஆறு, தனது பாதையையே மாற்றி ஓடத்தொடங்கியதால், இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த வெள்ளத்தினால் உருவான பேரழிவை எதிர்கொள்ள முடியாது அரசாங்கம் தடுமாறுகிறது.
தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள பல லட்சக் கணக்கான மக்கள் மத்தியில் தொற்று நோய்கள் பரவுவதற்கான அபாயம் இருப்பதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.