காங்கோவில் மோதல் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் அரச படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுவிலிருந்து பிரிந்து சென்ற தளபதியான லாரண்ட் என்குண்டாவின் விசுவாசிகளுக்கும் இடையே நடைபெறும் கடும் சண்டைகளின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் இடம் பெயர்ந்தவர்களுகான ஒரு முகாம் தற்போது ஆளில்லாமல் இருக்கிறது என்றும், அங்கிருந்த மக்கள் அந்தப் பிராந்தியத்தின் தலைநகரான கோமாவை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர் என்றும் கிழக்கு காங்கோவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
அரச துருப்புக்கள் பின்வாங்குவது போலத் தெரிகிறது என்றும், ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட இராணுவத் தளத்தின் முழு கட்டுப்பாடும் கிளர்ச்சிப் படையினர் வசம் உள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் கூறுகிறார்.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் தங்களை காப்பாற்றவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கோமாவிலுளள ஐ நா வின் தலைமை அலுவலகம் மீது கற்களை எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.