இது விதியல்ல, சதி!
சமீபத்தில் சென்னை முகப்பேரில் நடந்த சம்பவம் ஒன்று நமது சமுதாயத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் ஏன் நம்மீதே நமக்குக் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. 24-வயது அனிதா என்ற பெண்மணி தனது மூன்று வயதுப் பெண் குழந்தையை நர்சரி பள்ளியில் சேர்க்க நன்கொடை கொடுக்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டாள் என்பதுதான் அந்தத் திடுக்கிடும் செய்தி.
அனிதா தற்கொலை செய்து கொண்டு விட்டாள். ஆயிரக்கணக்கான அனிதாக்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்குப் பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டும், வெளியில் சொல்ல முடியாத நரக வேதனையை மனதில் சுமந்து கொண்டும், கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவமானத்தை மென்று விழுங்கிக் கொண்டும் வாழ்கிறார்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல. பள்ளிக்கூடம் திறக்கிறது என்கிறபோதே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பதைபதைக்கும் பெற்றோரும், உற்றார், உறவினர், நட்பு என்று அனைவரிடமும் கைநீட்டிக் கெஞ்சும் பெற்றோரும் ஏராளம் ஏராளம்.
“தம்மிற் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ என்பது வள்ளுவப் பேராசானே எழுதி வைத்த குறள். அக்கம்பக்கத்துப் பெண்டிரும், உற்றார் உறவினரும் தத்தம் குழந்தைகளைப் பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு அனுப்பும்போது, தங்களது குழந்தைகளுக்கும் அந்தக் கல்வி தரப்பட வேண்டும் என்று எந்தவொரு பெற்றோரும் விழைவது இயல்பு. அப்படித் தர முடியாத நிலையில், விரக்தியும் வேதனையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான்.
கிராமப்புறங்களிலிருந்து படித்துப் பட்டம் பெற்றுத் தங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்ட கையோடு, தத்தம் குழந்தைகளை மிகப்பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க வைக்க, தங்களுக்கு இயலாமல் போன கனவுகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பலர் துடிக்கிறார்கள். அதற்காக எந்த விலையையும் கொடுக்க அவர்கள் தயாராகிறார்கள் என்பதைத்தான் மேலே கூறிய செய்தி உறுதிப்படுத்துகிறது.
சமச்சீர் கல்வி, உயர்கல்வி, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் என்றெல்லாம் பேசுகிறோமே தவிர, இந்தத் தனியார் பள்ளிகளின் கட்டணத்தையும், நன்கொடையையும் முறைப்படுத்த நமது அரசு ஏன் முன்வருவதில்லை என்பது புதிராகவே இருக்கிறது. காளான்கள் போலத் தனியார் பள்ளிகள் ஆங்காங்கே முளைக்கின்றன. இந்தப் பள்ளிகள் நன்கொடை வசூலித்துத் தங்களது கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றன. கேள்வி கேட்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், இது தனியார் முயற்சி என்றும் கூறுகிறார்கள். நாமும் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கிறோம்.
தனியார் பள்ளிகளை விடுங்கள். அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் அரசின் உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளில் அதிகாரபூர்வமற்ற வகையில் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா நடைபெறுகிறது? இத்தனைக்கும் தமிழக அரசின் 1972ஆம் ஆண்டு சட்டப்படி இந்த நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தடுக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள், இன்னொருபுறம் பள்ளிக் கல்வியில் தனியார் தலையீட்டை அதிகரித்து சமூக ஏற்றத் தாழ்வு என்கிற நஞ்சைப் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கின்றனர். பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்கும் தனியார் பள்ளிகள் ஒருபுறம், ஏழைகள் மட்டுமே படிக்கும் அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துப் பள்ளிகளும், அரசு உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளும் மறுபுறம்.
பசி, வறுமை, ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாமல் வளரும் சமுதாயம் ஒருபுறம். கல்வியில்கூட வறுமையே கதி என்கிற விதியை வரித்துக் கொண்ட குழந்தைகள் மறுபுறம். இட ஒதுக்கீட்டால் ஏற்படும் சமூகநீதிகூட பணக்காரப் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கைகொடுக்கும் துர்பாக்கிய நிலை. ஏழையாகப் பிறந்த குற்றத்திற்காக அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையைப் பெற்ற குற்றத்திற்காக அந்தப் பெற்றோரும் இதையெல்லாம் விதியென்று கருதி வாளாவிருப்பதுதான் சமுதாய நீதியா?
மேலே எழுப்பிய கேள்விகளைப் பெருந்தலைவர் என்று அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் கு. காமராஜ் உணர்ந்திருந்தார். அதனால்தான் கட்டாயக் கல்வி என்கிற பெயரில் அனைவருக்கும் கல்வி அளித்தது மட்டுமல்லாமல் பள்ளிக் கல்வியை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தனியார் பள்ளிகளும் அரசின் சட்ட மற்றும் பாடத்திட்டங்களுக்கு உள்பட வைத்தார். தமிழகத்தில் சாதி பேதம் மறைந்து சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் குறைந்ததற்குக் காமராஜின் கல்விக் கொள்கைதான் தலையாய காரணம்.
பள்ளிக் கல்வியை தனியாரிடமிருந்து அகற்றி அரசே ஏற்று நடத்துவது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வு. அதைச் செய்யாத வரையில் சமூக நீதியும் சமச்சீர் கல்வியும், அனைவருக்கும் கல்வியும் உதட்டளவு உபந்நியாசமாகத்தான் தொடரும்!