புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 செப்டம்பர், 2008
இந்திய தலைநகர் புதுடெல்லியில் மீண்டும் குண்டுவெடிப்பு
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த ஒரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தார்கள்.
தெற்கு டெல்லியில் புகழ்பெற்ற குதுப்மினார் அருகே உள்ள மெஹரோலி மார்க்கெட் பகுதியில் பிற்பகல் சுமார் 2 மணிக்கு இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், மார்க்கெட்டில் எலக்ட்ரானிக் கடை அருகே ஒரு பையைப் போட்டுவிட்டுச் சென்றதாகவும், அதை சிறுவன் ஒருவன் எடுத்தபோது, அது வெடித்துவிட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அத்துடன், அந்தப் பகுதியில் இருந்த பலர் காயமடைந்தார்கள். அந்த வெடிகுண்டு, ஒரு டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
குண்டுவெடிப்பு நடந்த அந்த சிறிய தெருவில், ரத்தமும், உடைந்த கண்ணாடித் துண்டுகளும், மரச்சாமான்களும் சிதறிக்கிடந்தன. குண்டுவெடித்தவுடன், அங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கடைக்காரர்களும், அங்கு வந்த பொதுமக்கள் பலரும், காயமடைந்தவர்களை மருத்துவனைகளுக்கு்க் கொண்டு செல்ல உதவினார்கள்.
குறைந்த சக்தி கொண்டதாகக் கூறப்படும் இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து தடயங்களை சேகரித்த தேசிய பாதுகாப்புப் படை வெடிகுண்டு நிபுணர்கள், இரண்டு பக்கமும் கூர்மை கொண்ட ஆணிகள் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
தில்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது
![]() |
![]() |
தில்லி குண்டுவெடிப்பு |
இந்திய தலைநகர் தில்லியில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லபடுவதற்கு காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மூவரும் இந்திய முஜாகீதின் எனப்படும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களின் கைதோடு, இதுவரையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஐந்தாக உயர்ந்துள்ளது.
முன்னதாக இரண்டு தீவிரவாத சந்தேக நபர்களை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தில்லி பகுதியில் துப்பாக்கி சூட்டின் போது பொலிஸார் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தில் பொலிஸார் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
புதுடெல்லி தொடர் குண்டுவெடிப்பில் பலர் பலி
![]() |
குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடம் |
புதுடெல்லியில் சனிக்கிழமை மாலை நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எண்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் இந்த குணடுவெடிப்புக்கள் நடந்திருக்கின்றன.
முதலாவது குண்டுவெடிப்பு கரோல்பாக் பகுதியில் உள்ள கஃபார் மார்க்கெட் பகுதியில் மாலை சுமார் 6.15 மணிக்கு ஏற்பட்டது.. அந்த நேரத்தில், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஏராளமானவர்கள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பின் தாக்கத்தால் வாகனங்கள் தூக்கியெறியப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்புக்களில் மட்டும் ஏழு பேர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது.
அடுத்த சில நிமிடங்களில், டெல்லியின் மையப் பகுதியான கன்னாட்பிளேஸ் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. அங்கு, பிரதான மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ள ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் சென்ட்ரல் பார்க் பகுதியில் குண்டுவெடித்தது. குப்பைத் தொட்டியில் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு கூடியிருந்த பலர் படுகாயமடைந்தனர்.
![]() |
குண்டுவெடிப்பில் சிக்கிய பெண்ணொருவர் |
அதையடுத்து, அதற்கு அருகில் உள்ள பாரகம்பா ரோட்டில் குண்டுவெடித்தது. குப்பைத் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அந்த வழியாகச் சென்ற பலர் படுகாயமைடந்தார்கள்.
தெற்கு டெல்லி பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷில் உள்ள எம்.பிளாக் மார்க்கெட்டில் இரணடு குண்டுகள் வெடித்தன. வாகனங்களில் வைக்கப்பட்ட இந்த குண்டுகள் 15 நிமிட இடைவெளியில் வெடித்தன. கரோல்பாக் பகுதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட தகவல்களை, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த மார்க்கெட்டிலும் குண்டுவெடித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்புக்களில் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்.
காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.
சென்ட்ரல் பார்க், ரீகல் சினிமா மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
![]() |
குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் ஆய்வு |
இந்த குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உரிமை கோரியிருக்கிறது. 9 குண்டுவெடிப்புக்கள் நடக்கும் என்றும், தங்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் சில ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி.ய ஈ-மெயில் தகவலில் தெரிவித்துள்ளன.
இந்த குண்டுவெடிப்புக்கு பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.