திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதி கேட்கிறது பாமக?
மறுவரையறை தொகுதிகளால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அரசியல்வாதிகள்திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமக கூடுதல் தொகுதி கேட்டு வருவதாகத் தெரிகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. இதில்
- திமுக-16,
- காங்கிரஸ்-10,
- பாமக-6,
- மதிமுக-4,
- இரு கம்யூனிஸ்டுகள்-4
என்ற ரீதியில் தொகுதிகளை பங்கிட்டுக் கொண்டன.
பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது திமுக கூட்டணியில் இருந்த மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது அக் கூட்டணியில் இல்லை. அக் கட்சிகளுக்கு வழங்கிய 8 தொகுதிகள் திமுக கூட்டணியில் கூடுதலாக உள்ளன.
இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் பாமகவிடம் கூட்டணி குறித்து பேசியுள்ளனர். அவர்களிடம் கூடுதலாக உள்ள எட்டு தொகுதியில் இருந்து தங்களுக்கு இரு தொகுதிகளை வழங்க வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் 7 நாடாளுமன்றத் தொகுதி, ஒரு மாநிலங்களவைத் உறுப்பினர் பதவியாவது வழங்க வேண்டும் என்று பாமக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரங்களை கேட்டபோது தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கும் இம் முறை தொகுதி ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பாமக கூடுதல் தொகுதி ஒதுக்கக் கோருவது குறித்து உடனடியாக பதில் அளிக்கப்படவில்லை என்றனர்.
இச் சூழ்நிலையில் திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து பாமக வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வருகிறது. விரும்பிய எண்ணிக்கையில் இடங்கள், விரும்பிய தொகுதிகள் தங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து பாமக பொதுக்குழு கூட்டப்பட்டு உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படலாம் என்கின்றன.