நர்கீஸ் சூறாவளி தாக்கியதில் பர்மாவில் 350 பேர் பலி
நர்கீஸ் என்று பேரிடப்பட்ட சூறாவளி பர்மாவைத் தாக்கியதில் அங்கு 350 பேர் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 90 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஐராவதி பாசனப் பகுதியில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் உள்ள முக்கால்வாசி கட்டிடங்கள் நிர்மூலமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருபதினாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தோ, அல்லது முழுமையாக நிர்மூலமாகியோ உள்ளன.
முக்கிய நகரான ரங்கூன் நகருக்கான மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் இன்னமும் துண்டிக்கப்பட்டே இருக்கின்றன. அந்த நகருக்கான நீர் விநியோகமும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ரங்கூன் உட்பட 4 பிராந்தியங்களில் பர்மிய அரசு அனர்த்த நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.
பாலங்கள் இடிந்து வீழ்ந்துவிட்டதாலும், எரிபொருட் தட்டுப்பாடு காரணமாகவும் போக்குவரத்தும் அங்கு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
முழுமையான அழிவின் தகவல்கள் தெரியவர இன்னும் பல நாட்கள் பிடிக்கும் என்று அங்கிருக்கின்ற செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
BBC NEWS | Asia-Pacific | Hundreds killed by Burma cyclone: “A tropical cyclone has killed at least 351 people in Burma and damaged thousands of buildings, according to state television.”