தமிழகத்தில் போட்டியிடும் பி.எஸ்.பி. வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை, மார்ச். 9-
உத்தரப் பிரதேச மாநில முதல்-மந்திரி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.சி.) நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பாராளுமன்ற வேட்பாளர் தேர்வு தொடர்பாக தேசிய பொது செயலாளர் சுரேஷ் மானே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, மாநில முதன்மைச் செயலாளர் ப.சிவகாமி, மாநில அமைப்பாளர் கே.ஆம்ஸ்ட்ராங் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு 12 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பெயர் பட்டியலை பொது செயலாளர் சுரேஷ் மானே வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
- சென்னை தெற்கு – முன்னாள் எம்.பி ஸ்ரீதரன்,
- மத்திய சென்னை-யூனுஸ்கான்,
- கன்னியாகுமரி – முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.சிவகாமி,
- தருமபுரி- முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.வி.புருசோத்தம்மன்,
- மயிலாடுதுறை – முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.வி.சப்தரிஷ’,
- ஆரணி-சங்கர்,
- ஸ்ரீபெரும்புதூர்-பி.ராஜப்பா,
- திருச்சி-என்.கல்யாணசுந்தரம்,
- சேலம்-பாலசுப்பிரமணியம்,
- மதுரை-தர்பார்ராஜா,
- தூத்துக்குடி-ஜ“வன்குமார்,
- கோவை-ராமசுப்பிரமணியம்.
சுரேஷ் மானே நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது என்பது கட்சியின் தேசிய கொள்கை ஆகும். அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம். கட்சித் தலைவர் மாயாவதி முதல்கட்டமாக பிரசாரத்தை கேரளாவில் தொடங்குகிறார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும். அனைத்து தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தால் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு உறுதியாக தீர்வு காணப்படும். இவ்வாறு சுரேஷ் மானே கூறினார்.