ஏறாவூரில் பதட்டம் தொடர்கிறது
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கிழக்கு மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலாநிதி. வெள்ளைதம்பி அமீரூதின் அவர்கள், காணாமல் போன இருவரும் பணி நிமித்தமாக மட்டக்களப்புக்கு சென்று மீண்டும் ஏறாவூர் திரும்பும் போதே காணாமல் போனதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டப்போது, இரண்டு தினங்களாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தமிழோசையிடம் தெரிவித்தார். மேலும் தற்போது இருக்கின்ற நிலையில் எந்த அமைப்பின் மீதும் சந்தேகப்பட கூடிய நிலையில் இல்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் கிழக்கிலிருந்து முதலாவது ஆயர் நியமனம்
![]() |
![]() |
துணை ஆயர் பொன்னையா ஜோசப் |
இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் கிழக்கு மாகாணத்திலிருந்து முதலாவது ஆயராக நியமனம் பெற்ற மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்த பேரருட் திரு பொன்னையா ஜோசப் அவர்கள் சனிக்கிழமை திருகோணமலை மறை மாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் விசேட திருப் பலிப்பூசை
நடைபெற்று திருநிலை ஒப்புக் கொடுத்தல் நிகழ்வு சனிக்கிழமையன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான வாட்டிகன் பிரதிநிதி வண.மரியோ செனாரி மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கத்தோலிக்க ஆயராக
முதற்தடவையாக நியமிக்கப்பட்டுள்ளமை அம்மாகாண கத்தோலிக்கர்களை பொறுத்தவரை சிறப்பு வாய்ந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது.
இம்மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் வாழ வேண்டும் யுத்தத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதே மக்களுக்கு தான் விடுக்கும் செய்தி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட ஜோசப் பொன்னையா ஆண்டகை குறிப்பிடுகின்றார்.