கலைஞரின் ஈரோட்டுக் கண்ணாடி!
தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசும்போது, பண்பாட்டு ரீதியான ஒரு பிரச் சினையை எடுத்து அலசியுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலத்தின் பெயரை ஜெமினி மேம்பாலம் என்று எழுதுவதும், தியாகராயர் நகரை தி.நகர் என்று எழுதுவது குறித்தும் முக்கியமானதொரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
பெயர்தானே – அதில் என்ன இருக்கிறது – முதலமைச்ச ருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று சில மே(ல்) தாவிகள் சொல்லக்கூடும். இது ஒன்றும் சின்ன பிரச்சினை யல்ல – இதில் ஒரு திராவிட – ஆரியப் போராட்டமே அழுத்த மாக இருக்கிறது.
அண்ணாசாலை என்றும், அண்ணா மேம்பாலம் என்றும் அரசு அறிவித்து எத்தனை ஆண்டுகள் ஆயின?
இதற்குப் பிறகும் மறைந்துபோன ஜெமினி மேம்பாலத்தை மறக்காமல் மனதில் வைத்துக் கொண்டு அதனைக் குறிப்பிடுகிறார்கள் என்றால், இது ஏதோ எதேச்சையாக நடப்பதல்ல – திராவிட இயக்கச் சிந்தனையாளரான – தந்தை பெரியார்தம் மாணாக்கரான – ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக
சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது;
சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் வழங்கியது
போன்ற ஆரிய மறுப்புகளைச் சட்ட ரீதியாகச் செய்தவரான அண்ணாமீது கொண்ட காழ்ப்பு உணர்வு இதற்குள் பதுங்கியிருப்பது என்பதாலேயே மான மிகு கலைஞர் அவர்கள் இதனைச் சுட்டிக்காட்ட நேர்ந்தது.
திராவிட இயக்கத் தோற்றுநர்களுள் மிகவும் முன்னோடி யான பிட்டி தியாகராயர் பெயரால் அமைந்த பகுதியை தி.நகர் என்று குறிப்பிடுவது குறித்தும் மானமிகு கலைஞர் கூறத் தவறவில்லை – பெயர் நீளமாக இருக்கிறது என் பதற்காக பேருந்துகளில் அவ்வாறு எழுத நேர்ந்தது என்பது சம்பந்தப்பட்டவர்களின் சமாதானமானால், திருவல்லிக் கேணியை தி.கேணி என்று எழுதுவதில்லையே – ஏன்? என்ற கலைஞர் அவர்களின் அறிவார்ந்த கேள்விக்குப் பதில் என்ன?
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், மவுண்ட் ரோடு – அண்ணா சாலையானதும், பூந்தமல்லி நெடுஞ் சாலை – பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை ஆனதும் 35 ஆண்டுகளுக்கு மேலாகும். இன்னும்கூட விளம்பரப் பலகைகளில் மவுண்ட் ரோடு என்றும், பூந்தமல்லி நெடுஞ்சாலை என்றும் குறிப்பிடுகின்றனர் என்றால், இதன் பின்னணியில் இருக்கும் உணர்வுக்குப் பெயர் என்ன?
இதனை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் அறிவிப்பைக் கொடுத்த நேரத்தில், (14.8.1996) சென்னைப் பெருநகரக் காவல்துறையால் விரைவில் சரி செய்யப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்னும் மவுண்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலைகள் இருக்கத்தான் செய்கின்றன. மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் இந்த நிலை தொடரலாமா? தொழிலாளர் துறை அல்லது விற்பனை வரித்துறையிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தால் 24 மணிநேரத்தில் மாற்றப்பட்டு விடுமே!
அதேபோல, சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக விளங்கிய ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார் பெயரில் விளங்கும் பகுதி பாண்டிபஜார் என்று அழைக்கப்பட்டு, மக்கள் மத்தியிலும் நிலை நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கும் முடிவு கட்டப்பட்டு சவுந்தரபாண்டியனார் அங்காடி அல்லது கடைவீதி என்று எல்லோர் கண்களிலும் படும் வண்ணம் பெரிய பெரிய விளம்பரப் பலகைகளைப் பொருத்தவேண்டு மாய்க் கேட்டுக்கொள்கிறோம்.
கலைஞர் கருணாநிதி நகரை கே.கே. நகர் என்று குறிப்பிடுவதும், இந்தப் பட்டியலில் சேரும்.
அண்ணா சாலையில் உள்ள பார்ப்பன ஏடுகள் அந்தப் பெயரைப் போட மனமில்லாமல், சென்னை-2 என்று போட்ட நிலையும் உண்டு.
தமிழ், தமிழர்கள், திராவிட இயக்கம், அதன் தலைவர் கள் மீது ஆரியத்திற்கு இருக்கும் ஆத்திரமும், வெறுப்பும், வஞ்சக வண்ணமும் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்ப்பவர்களுக்கே துல்லியமாக விளங்கும்.
இந்த நிலையில், மானமிகு கலைஞர் அவர்களுக்குப் புரியாமல் போகுமா?