Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Analysis’

Who will win? Congress vs BJP: Neeraja Chowdhry: India Elections 2009 Analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 12, 2009

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் பத்திரிகையாளரும் பாரதீய ஜனதா எம்.பி.யுமான சந்தன் மித்ரா, புவனேசுவரத்துக்கு அவசரப் பயணம் மேற்கொண்டபோது பாஜக -பிஜு ஜனதாதளம் இடையிலான கூட்டணி முறிந்துபோகும் என்று கனவில்கூட எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்.

ஒரிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி முறிந்தால் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவும். பிஜு ஜனதாதள அரசும் சரியாகச் செயல்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக உருவாக வாய்ப்புள்ளது என்பது தெரியவந்ததால்தான் மித்ரா, புவனேசுவரம் சென்றார்.

இந்த கருத்துக்கணிப்புகளுடன்தான் மித்ரா, முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இருவரும் சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சு நடத்தினர். மித்ரா சொன்ன தகவல்களைக் கேட்ட நவீன் பட்நாயக், பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்தால் மீண்டும் முதல்வராக முடியாது என்பதை உணர்ந்து கொண்டார்.

மித்ராவை உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்றும் ஒரு நாள் தங்கிச் செல்லுமாறும் பட்நாயக் கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் மித்ரா, பட்நாயக்கை சந்திக்கச் சென்றபோது, “உங்கள் கட்சிக்கு சட்டப்பேரவைக்கு 31 தொகுதிகளும், மக்களவைக்கு 5 தொகுதிகளும்தான் தர முடியும்’ என்று கூறினார் (தற்போது பாஜகவுக்கு 32 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 9 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன).

தற்போது நவீன் பட்நாயக், பாஜகவுக்கு தர முன்வந்துள்ள தொகுதிகளை தேர்தலில் பாஜக கைப்பற்றிவிடுமா என்பதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால், எங்களால் இதுதான் முடியும் என்பதை அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். இந்த முடிவை பாஜக ஏற்றுக்கொள்ளாது என்பதும் அவருக்குத் தெரியும்.

பாஜகவுக்கு 31 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 5 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்க பிஜு ஜனதாதளம் முன்வந்துள்ளதை அக்கட்சித் தலைமை ஏற்க முன்வராவிட்டால் என்ன செய்வது என்று மித்ரா கேட்டதற்கு, இதை ஏற்பதா, நிராகரிப்பதா என்பதை அவர்கள்தான் (பாஜக) முடிவு செய்யவேண்டும் என்று நவீன் தெரிவித்துவிட்டார்.

ஒரிசா மாநிலத்தில் தற்போதுள்ள அரசியல் உண்மை நிலவரத்தை கணக்குப் போட்டு பார்த்த பின்னர்தான் நவீன் இந்த முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

தேர்தல் கூட்டணியை மீண்டும் உறுதி செய்யும் நோக்கில்தான், சந்தன் மித்ரா, பாஜக தலைவர் எல்.கே.அத்வானியின் சிறப்புத் தூதராக புவனேசுவரம் சென்றார். பாஜகவுக்கு தர முன்வந்துள்ள தொகுதிகள் குறித்து, நான் அத்வானியிடம் ஆலோசனை கலந்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும். அதுவரை அவசரப்பட்டு கூட்டணிக்கு எதிரான முடிவு எதையும் எடுக்கவேண்டாம் என்று மித்ரா, நவீன் பட்நாயக்கிடம் கூறியிருந்தார். ஆனால், அதுவரை காத்திருக்க முடியாது என்று கூறி அவர் மறுத்துவிட்டார்.

நவீன் பட்நாயக் இந்த முடிவுக்கு வர பிஜு ஜனதாதளம் கட்சி எம்.பி.யான ஜெய் பாண்டாவும் பிஜு பட்நாயக்கிடம் முன்னர் முதன்மைச் செயலராக இருந்த பி.மோகன் மகாபாத்ராவும்தான் காரணம் என்று பாஜக கருதுகிறது.

கடந்த ஆண்டு கந்தமால் மாவட்டத்தில் வகுப்பு மோதல் நடந்ததிலிருந்தே சங்கப் பரிவாரங்களின் முன்னணி அமைப்பான பாஜக மீது, நவீன்பட்நாயக் அதிருப்தி கொண்டிருந்தார் என்பது வெளிப்படையான விஷயம்.

இப்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதன் மூலம் வரும் தேர்தலில் அவர் “ரிஸ்க்’ எடுக்கத் தயாராகி வருகிறார். இடதுசாரிக் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்ளவும் அவர் முன்வந்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு தனது கட்சியின் வெற்றியைப் பொருத்து மூன்றாவது அணியுடன் கூட்டு சேரவும் அவர் முற்படலாம். நவீன் பட்நாயக்கின் இந்த திடீர் முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான எல்.கே.அத்வானிக்கு பலத்த அடியாகும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அத்வானியின் கட்சி 138 இடங்களில் வென்றிருந்தது. இந்தத் தேர்தலில் எப்படியும் 180 இடங்களைக் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணியிருந்த பாஜக, இனி அதிக இடங்களை வெல்ல கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளம் கட்சி, ஹரியாணாவில் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் இந்திய தேசிய லோகதளம் கட்சி, அசாமில் அசாம் கணபரிஷத் கட்சி ஆகியவை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிதாக இடம்பெற்றுள்ளன. இருந்தபோதிலும் பிஜு ஜனதாதளத்துடன் கூட்டணி முறிந்தது, அதற்கு பலத்த பின்னடைவாகும்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவும் சிவசேனையும் கூட்டணி வைத்துள்ளன. ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக ஆதரவு அளிப்போம் என்று சிவசேனை கூறிவருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக எல்.கே.அத்வானி உள்ளார். எனவே அவரைத்தான் சிவசேனை ஆதரிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டால்தான் பாஜக-சிவசேனை இடையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடு வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து விலகாது என்றாலும், அதிக இடங்கள் ஒதுக்கக் கோரி அது பாஜகவை நிர்பந்திக்கலாம். பிகாரில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், பாஸ்வானின் லோக ஜனசக்தி, காங்கிரஸ் ஆகிய மூன்றும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் நிதீஷ்குமார் கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில அரசியல் கட்சிகள் கூட்டு சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே வரும் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

2009 தேர்தலில் அத்வானி தவிர, பிரதமராகும் வாய்ப்பு மூன்று பேருக்கு உள்ளது. இதை அந்தந்த அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தால் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வாய்ப்பு உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க முற்பட்டு அதற்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவிக்க முன்வந்தால், மன்மோகன் சிங்கை அவர்கள் பிரதமராக ஏற்க முன்வர மாட்டார்கள். அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்குமாறு சோனியாவை வற்புறுத்தலாம்.

இந்தச் சூழ்நிலையில் சோனியாவுக்கு நம்பகமானவரும், தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான சுஷில் குமார் ஷிண்டே பிரதமராக வாய்ப்பு உள்ளது. பிரணாப் முகர்ஜியோ அல்லது ப.சிதம்பரமோ பிரதமராக வருவதில் சோனியாவுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியுடனும், கர்நாடகத்தில் தேவ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இந்த இரு மாநிலங்களிலும் கூட்டணி ஏற்பட்டால் காங்கிரஸ் தனது வெற்றி எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், தமிழகத்தில் திமுக ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும் 2004-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றி தொடருமா என்பதை உறுதிபடக் கூறமுடியாது. இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளரை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.

கடந்த முறை இடதுசாரிக் கட்சிகள் காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. ஆனால், இந்த முறை காங்கிரஸ், பாஜகவை இடதுசாரிகள் ஆதரிக்கத் தயாராக இல்லை. தங்களுடன் கூட்டணி வைக்காவிட்டாலும் மாயாவதி பிரதமர் ஆவதை அவர்கள் ஆதரிக்கக்கூடும். இவையெல்லாமே மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தது.

மாயாவதி கட்சிக்கு 65 இடங்கள் வரை கிடைத்து, மற்ற பிராந்தியக் கட்சிகள் அவரை ஆதரிக்க முன்வந்து பிரதான கட்சிகளில் ஒன்றும் அவரை ஆதரிக்க முன்வந்தால் மாயாவதி பிரதமராக சாத்தியக் கூறுகள் உள்ளன.

மாயாவதியைப் போலவே பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கக்கூடிய தலைவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார். சிவசேனை கட்சி, பவார் பிரதமர் ஆவதை ஆதரிக்கிறது.

மேலும் சமாஜவாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான அமர்சிங்கும் பவார் பிரதமர் ஆவதை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்.

அரசியல் உலகில் பவாருக்கு நண்பர்கள் பலர் உள்ளனர். கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு பல சமயங்களில் அவர் நிதியுதவி அளித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர் தேவ கௌடா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருக்கிறது. ஒரிசா மாநிலத்தில்கூட ஒன்று அல்லது இரு இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிட தொகுதி ஒதுக்கீடு செய்ய பிஜு ஜனதாதளத்தின் நவீன் பட்நாயக் முன்வந்துள்ளார்.

ஒரிசாவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் மூன்றாவது அணிக்கு ஆறுதலாக இருக்கும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு 2004-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த இடங்களைவிட குறைவான இடங்களே இந்தத் தேர்தலில் கிடைக்கும். அதாவது 15-வது மக்களவையும் தொங்கு நாடாளுமன்றமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை சந்தித்த போது, “கூட்டணி அமைப்பதற்கு நான் எதிரானவன். இது எனது தனிப்பட்ட கருத்து’ என்று கூறினார். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டுமானால் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால் 2014 வரை எதிர்க்கட்சி வரிசையில் இருப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், பிறகட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட முக்கிய பங்கு வகிப்பவருமான அந்த மூத்த தலைவர் கூறிய கருத்து எனக்கு வியப்பை அளித்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். இதேபோல ஏழை மக்களின் நலனுக்காக தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவந்து செயல்படுத்தியதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏழை மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் தனது சாதனைகளை தொண்டர்கள் மூலம் அனைத்து மக்களிடமும் தகுந்த நேரத்தில் விளம்பரப்படுத்தத் தவறிவிட்டது.

மக்களவைக்குத் தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இப்போது செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்து மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறிவருகிறது.

வாசகர்களில் ஒருசிலர் காங்கிரஸ் அரசின் சாதனைகளைப் படித்து மகிழ்வார்கள். ஆனால், பொருளாதாரச் சரிவு, நிதி நெருக்கடி இருக்கும் நேரத்தில் இதுபோன்று மக்கள் பணத்தை வீணடிக்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

மீண்டும் மூத்த காங்கிரஸ் பிரமுகர் கூறிய கருத்துக்கு வருவோம். பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதைவிட தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதே மேல் என்பது அவரது கருத்து.

நாட்டில் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ், எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் பரவாயில்லை என்று தேர்தல் சமயத்தில் முடிவுக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது சில மாதங்களுக்கு முன்னரோ தொடங்கப்பட்ட கட்சியைப் பற்றி நாம் இப்போது பேசவில்லை. காங்கிரஸ் நீண்டகாலமாக இருந்துவரும் கட்சி. அதன் வலிமை அனைவருக்கும் தெரியும். எனவே புதிய கட்சியாக இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்கட்டும் என்று காத்திருக்கலாம்.

பஞ்சமர்ஹி முதல் சிம்லா வரையில் நடைபெற்ற பல்வேறு கட்சி மாநாடுகளில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி, அது செயல்படும் முறை, தேர்தல் உத்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே மேல் என்று ஒரு காலத்தில் கூறிவந்த காங்கிரஸ், இப்போது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? எந்த ஒரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு முன் உள்ள முதல் சவால், தேர்தலில் அதிக இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக வருவது யார் என்பதுதான். அப்படியொரு நிலை காங்கிரஸýக்கோ அல்லது பாஜகவுக்கோ ஏற்பட்டால், ஆட்சியமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் அழைப்பார். அதன் பின் ஆட்சியமைப்பதற்கு பிராந்தியக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது முடிவு செய்யப்படும்.

தேர்தலுக்கு முன் கூட்டணி ஏற்பட்டாலும், தேர்தலுக்குப் பின் அணி மாறும் வாய்ப்பு உள்ளது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுமே உணர்ந்துகொண்டுள்ளன.

காங்கிரஸ், பாஜக போன்ற பெரிய கட்சிகள் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைத்துக் கொள்வதே தங்களின் வெற்றி எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்குத்தான். இது அனைவரும் அறிந்த உண்மை.

பாஜக ஏற்கெனவே தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கெனவே அகாலிதளம், சிவசேனை, பிஜு ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை தவிர இந்திய தேசிய லோக தளம் (ஹரியாணா), அசாம் கணபரிஷத் (அசாம்) ஆகியவையும் இக் கூட்டணியில் சேர்ந்துள்ளன.

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியிலிருந்து அஇஅதிமுக, தெலுங்கு தேசம் கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை வெளியேறிவிட்டன.

அஇஅதிமுகவும், தெலுங்கு தேசம் கட்சியும் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. காங்கிரஸýடன் தேர்தல் கூட்டுக்குத் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேர்தல் கூட்டணியைப் பொருத்தவரை பாஜகவைவிட காங்கிரஸ் வலுவானதாக உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தமிழ்நாட்டில் திமுகவும், பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளமும், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளன.

இது தவிர மேலும் மூன்று மாநிலங்களில் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும், கர்நாடகத்தில் தேவகௌட தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடனும், உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியுடனும் தேர்தல் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் முயன்று வருகிறது.

பிகாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தை சமாளிக்கும் வகையில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய மூன்றும் கூட்டணி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியும், திரிணமூல் காங்கிரஸýம் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளன. அண்மையில் பிரணாப் முகர்ஜி மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் பேசி அக்கட்சியுடன் அவர் தேர்தல் கூட்டுவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பார். இந்த விஷயத்தில் அவர் சோனியாவின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்.

2008-ல் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலை கணக்கிட்டுப் பார்த்தால் சில விஷயங்கள் புரியவரும். அங்கு மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 12 இடங்களில் வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதேபோல காங்கிரஸ் 3 அல்லது 4 இடங்களில் வெற்றிபெறக்கூடும்.

காங்கிரஸýடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்வது தனது கட்சிக்கு நலன் பயக்கும் என்பதை மம்தா பானர்ஜி நன்கு உணர்ந்து கொண்டுள்ளார். ஏன் தான் போட்டியிடும் தெற்கு கோல்கத்தா தொகுதியில் வெற்றிபெற காங்கிரஸ் உதவிகரமாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.

கர்நாடக மாநிலத்தில் 2008-ல் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அங்கு பாஜக ஆட்சியமைத்துள்ள போதிலும் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் அதிகமானதாகும். அங்கு காங்கிரஸ் 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 10 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 4 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அதிக இடங்களை வெல்லக்கூடும்.

மேலும் இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பாஜகவுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும். அங்கு பாஜக இப்போது ஆட்சியில் இருந்தாலும் 2004-ம் ஆண்டு தேர்தலில் வென்ற 18 இடங்களை அது தக்கவைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே.

ஹிந்தி பேசும் மக்கள் அதிகம் உள்ள மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எப்படியும் 45 முதல் 50 இடங்களை வென்றுவிடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.

காங்கிரஸ் கட்சியும், முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் மாயாவதி கட்சிக்கு 30 இடங்களுக்கு மேல் கிடைக்காது.

சமாஜவாதியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால் தங்களுக்கு 25 இடங்களாவது ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. தேர்தல் கூட்டு பற்றி இரு கட்சிகளும் தலைவர்களும் அடிக்கடி பேசி வருகிறார்களே தவிர இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. உ.பி. மாநில அரசியல் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் முடிவு செய்வது நல்லது.

மேற்குறிப்பிட்ட நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் பிராந்தியக் கட்சிகள் தேர்தல் கூட்டு ஏற்படுத்திக் கொண்டாலும் அதனால் அதிக பலன் அடையப் போவது பிராந்தியக் கட்சிகள்தான். ஆனால், அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பது வெளிப்படையான உண்மை.

இந்த கூட்டணி மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தால்கூட அது அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக உருவாகி ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சி இப்போதே தன்னை “பெரியண்ணன்’ போல் நினைத்துக் கொண்டு செயல்படுகிறது. அதாவது இன்னும் சொல்லப்போனால், 2004-ம் ஆண்டு தேர்தலில் “இந்தியா ஒளிர்கிறது’ என்று பாஜக அதீதமாக செயல்பட்டதைப் போல காங்கிரஸ் நிலை உள்ளது. காங்கிரஸ் தனது நிலையை உணர்ந்து தேர்தல் கூட்டணி அமைத்துச் செயல்பட்டால் அது வெற்றிக்கு வலுசேர்க்கும். இதை காங்கிரஸôர் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | 1 Comment »