Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Zone’ Category

Formation of Tamil Nadu – History of Madras Presidency: Potti Sreeramulu

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

மக்கள் விரும்பிய மாநிலம்

உதயை மு. வீரையன்

இன்று தமிழ் மாநிலம் அமைந்த 51ஆம் ஆண்டு தினம். கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் இதன் “பொன்விழா’ கொண்டாடப்பட்டது. இதுவரை சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் மட்டுமே மாநில உதயதினத்தை விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன.

இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. நாடு விடுதலைபெற்றதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்தன. முதல் பிரதமர் பண்டித நேரு இப்பிரச்னைக்குத் தீர்வாக இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.

அவை தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இவற்றுள் “தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.

இதை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு போராடின. நேருவும் வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை கைவிட நேர்ந்தது.

1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக்கூட்டில் சிக்கிக்கிடந்தவர்கள், தனியாக “விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், “ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என்ற அமைப்புகளை உருவாக்கி கட்சிசார்பின்றி ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தனர்.

இதன் பிறகுதான், காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ. சிவஞானம், முதன்முதலாக “தமிழ் அரசு’ அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது “வடவேங்கடம் முதல் குமரிவரையுள்ள தமிழகம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும்வகையில் தை மாதம் முதல்நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கையும் வெளியிட்டார்.

1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டப்பேரவையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவாரி மாநிலப் பிரிவினைபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட “தார் குழு’ 1948 செப்டம்பர் 13-ல் சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.

“தமிழக எல்லை மாநாட்டை’ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1949-ல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத்துறந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமையில் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். “வடவேங்கடம் முதல் தென்குமரிவரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானம் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1953-ல் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். இதன்பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் 1953 அக்டோபர் 2-ல் “ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை அவர் அளித்தார்.

இருப்பினும் “சென்னை யாருக்கு?’ என்ற பிரச்னை எழுந்தது. “தமிழகத்துக்கே உரியது’ என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராஜர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம். ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. முதலியோர் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்கவைப்பதற்குப் பெரும்பாடுபட்டனர்.

1953 மார்ச் 25-ல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு, ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை வெளியிட்டார். இதில் ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். அதன் பிறகே சென்னை பற்றிய கவலை நீங்கியது.

மொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென்எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென்எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை “கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது.

வடஎல்லைப் பாதுகாப்புக் குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. அதற்கு கே. விநாயகம் செயலாளர். மக்களை அணிதிரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி. படாஸ்கரை இந்திய அரசு நியமித்தது.

படாஸ்கர் பரிந்துரைப்படி, திருத்தணி தாலுகா முழுவதும் (ஒரே ஒருகிராமம் நீங்கலாக), சித்தூர் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமம் உள்பட 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரித்து, தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டன.

இந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் பலர். ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி போராடி, 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்ததையும், “தமிழ்நாடு’ பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடார் 1956 அக்டோபர் 13-ல் உயிர்துறந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.

எனினும் மாநில முதல்வர் பொறுப்பிலிருந்த ராஜாஜி, காமராஜரின் பங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை என்பது ஆந்திரத்தின் பிடிவாதமான கோரிக்கையாக இருந்தபோது ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார். “”சென்னைப் பட்டணத்தை ஆந்திரத்துக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை; இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமரிடம் கூறிவிட்டேன்…” என்றார். பிரதமர் மனம்மாற இதுவும் ஒரு காரணம்.

அத்துடன், அவரது “தட்சிணப் பிரதேச’ அறிவிப்பின்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை எடுத்துக்கூறி, அதைக் கைவிடச் செய்த பெருமை அப்போதைய முதலமைச்சர் காமராஜரையே சேரும். இதற்கெல்லாம் மேலாக ம.பொ.சி.யின் பணியையும் மறக்க முடியாது.

மாநிலப் பிரிவினை குறித்து, எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஓர் குறையாகவே கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப்பெற “மராட்டிய சமிதி’ தொடர்ந்து போராடி வருகிறது.

இச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியவைதான்; ஆனால் தீர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் சில அரசியல்வாதிகள் கவனமாக இருக்கின்றனர்.

மொழிவாரிப் பிரிவினை மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர, மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர, தொடக்கமாக இருக்கக்கூடாது.

Posted in Andhra, Anna, AP, authority, Chennai, Congress, Dakshin, Democracy, Divide, EVR, Federal, Freedom, Independence, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Language, Madras, MaPoSi, MPs, Nehru, North, Periyar, Power, Presidency, Province, Rajaji, Region, Republic, Rule, Shree ramulu, Shreeramulu, Shri ramulu, South, Sree ramulu, Sreeramulu, Sri ramulu, Sriramulu, State, Tamil, Tamil Nadu, TamilNadu, Telugu, TN, Zone | Leave a Comment »

Kalki Editorial: PMK Agitations, Role of opposition Party in Tamil Nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மலரட்டும் கிராமங்கள்; மாறட்டும் பா.ம.க.!

பா.ம.க.வின் மாற்று அபிவிருத்தித் திட்டம் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கும் விதமாக அமைந்திருக்கிறது. காந்தி அடிகள், ஜெய பிரகாஷ் நாராயண் ஆகியோர் வகுத்த வழியில் கிராமப் பகுதிகளின் தன்னிறைவு நோக்கி வரையப்பட்டிருக் கிறது- இந்த மாற்றுத் திட்டம்.

தற்போதைய அரசுகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் குறியாக இருக்கின்றன. ராமதாஸ் தலைமையில் பா.ம.க. வகுத்துள்ள மாற்றுத் திட்டமோ, சிறப்பு விவசாய – பொருளாதார மண்டலங்களை அமைக்க முற்படுகிறது. இந்த மண்டலங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த விவ சாய முறைகளைக் கற்றுத்தர முற்படுகிறது. ஆரம்ப நிலை, உயர் நிலை, மேல் நிலை என விவசாயத்தின் மூன்று பி¡¢வுகளிலும் சீர்திருத்தங்களையும் வளர்ச்சியையும் புகுத்தி, அவற்றை இயல்பாக இணைக்கும் உயர்நோக்கையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணமாக, ஒரு விவசாயிக்குச் சாகுபடி முறைகள் தொ¢ந்தால் போதாது. விளைந்ததை நல்ல விதமாகக் காசாக்கத் தொ¢ய வேண்டும்; விவசாயத்துக்கும் வியாபாரத்துக்கும் அவசியமான அடிப்படை வசதிகளை நிறுவவும் பெருக்கவும் அரசாங்கத்தைச் சார்ந்திராமல், சுயமாக முயற்சி செய்யும் அறிவும் ஆற்றலும் வேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்குக் கடன் வசதியும் முக்கியமாக வேண்டும்.

தற்போதைய அரசாங்கங்கள் விவசாயிகளுக்குக் கடன் வசதியை மட்டும் அள்ளித் தந்துவிட்டு, அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிற சலுகையையும் தந்துவிடுகின்றன. திட்டமிடலுக்கோ விவசாயக் களப்பணிக்கோ அரசின் ஆதரவும் வழிகாட்டலும் அரவணைப்பும் இருப்பதே இல்லை.

ராமதாஸ் வரைந்துள்ள திட்டம் இந்தக் குறைகளைத் தீர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. களப்பணியில் ஆதரவு தருவதுடன், உணவு பதனிடல், பால் பண்ணை அமைத்தல், மண்வள மேம்பாடு, மழை நீர் அறுவடை போன்ற விஞ்ஞானபூர்வமான முன்னேற்றங்களை விவசாயிகளுக்குக் கற்பிக்கவும் அவர்களை வழி நடத்தவும் முற்படுகிறது. விவசாயத் தேவைக்கான மின்சார உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் கூட உள்ளூ¡¢ லேயே வகை செய்யும் புரட்சிகரமான சிந்தனையை உள்ளடக்கியிருக்கிறது. தொழில் முனை வோர் பயிற்சி மையங்களையும் விவசாயத் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களையும் பரவ லாக நிறுவி, கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சிதர விழைகிறது.

“நகரங்களை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்று அவதிக் குள்ளாகும் போக்குக்கு இந்தத் திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தொ¢விப்பதை ஏற்க முடிகிறது. எழுத்தில் இன்று உள்ள திட்டம், முழு மனத்துடன் செயல் வடிவம் தரப்படுமானால், தமிழக கிராமப் பொருளாதாரம் மறுமலர்ச்சியுறும்.

இத் திட்டத்தினை முன் வைத்ததன் மூலம், கூட்டணி கட்சி என்கிற முறையில் தமிழக அரசின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார் பா.ம.க. தலைவர். அது மட்டுமல்ல, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதி வாய்ந்த கட்சியாக பா.ம.க.வை முன்னிறுத்தியிருக்கிறார்.

ஆனால், கிராம வளர்ச்சித் திட்டத்துக்கு காந்திய சிந்தனைகளை ஏற்கும் பா.ம.க. தலைவர், விடுதலைப்புலிகள் ஆதரவு, ஜாதி அரசியல் போன்ற சில முரணான சித்தாந்தங் களை விடாமல் கை கொண்டிருப்பதுதான் ஏற்கத்தக்கதாக இல்லை. ராமதாஸின் கிராமப் புற அபிவிருத்தித் திட்டம் தமிழகத்துக்கு எவ்வளவுக்கெவ்வளவு நன்மை செய்யுமோ, அவ் வளவுக்கவ்வளவு அவரது முரணான கொள்கைகள் தீமை விளைவிக்கும் என்பதை அவர் சிந்தித்துணர்ந்து மாற்றிக் கொள்வது அவசியம்.

Posted in ADMK, Agitations, Agriculture, Alliance, Anbumani, Assets, BC, Caste, Coalition, Commerce, Community, Compensation, Cows, Dept, DMK, Economy, Editorial, Employment, Export, Farmer, Farming, Govt, Growth, harvest, harvesting, Industry, Kalki, KK, Leather, Loans, Manifesto, MBC, milk, Narain, Needy, OBC, Opposition, Party, PMK, Politics, Poor, Rain, Ramadas, Ramadoss, Rich, Role, Rural, Salary, SEZ, Soil, support, Tamil Nadu, TamilNadu, TN, Vanniyan, Vanniyar, Village, Water, Wealthy, Welfare, Young, Youth, Zone | 1 Comment »

Joint management of airspace – Defence and the civil aviation ministry

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வானில் ஓர் எல்லைப் பிரச்னை!

வி. கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்புத் துறைக்கும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே தற்போது எல்லைப் பிரச்னை எழுந்துள்ளது.

இவை இரண்டும் தனித்தனித் துறைகள்தான் என்றாலும் இரண்டுக்கும் களம் (AIRSPACE) ஒன்றுதான். இமயம் முதல் இந்தியப் பெருங்கடல்வரையும், அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடாவரையும் பெரும்பாலான வான்பகுதி இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பறக்கும் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்புத் துறையின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. இதுதவிர நாட்டில் பல்வேறு பயிற்சித் தளங்கள் உள்பட சுமார் 60 இடங்களில் தரைத் தளங்கள் விமானப்படையின்கீழ் செயல்படுகின்றன.

இந்த விமானத் தளங்கள் உள்ள பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பல்வேறு பிரச்னைகள் எற்படுகின்றன. உதாரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானில் பெரும் பகுதி, தாம்பரம் விமானப் படைத்தளம் மற்றும் அரக்கோணத்தில் கடற்படையின் விமான தளம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றின் எல்லைகளுக்கு அப்பால் மீதம் உள்ள வான்பகுதியை நம்பியே சென்னை விமான நிலையம் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வான்பகுதி எல்லைப் பிரச்னை காரணமாக சென்னைக்கு கிழக்கே புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டமே கைவிடப்பட்டது.

நாட்டில் தற்போது 13 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 126 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டின் மொத்த வான்பகுதியில் 28 லட்சம் சதுர கடல்மைல் (நாட்டிக்கல் மைல்) மட்டுமே விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர விமான நிலையங்கள் இல்லாத இடங்கள் உள்பட 28 விமானப் படைத் தளங்களில் சிவில் விமானங்களுக்கென தனிப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறிய விமான நிலையங்கள், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இல்லாததால் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் தற்போதைய தேவை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டும் விமானப் போக்குவரத்துக்கான புதிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது.

இதில், பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல வான்பகுதிகளை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அளிக்க வேண்டும். நாட்டின் வான் பகுதியில் விமானப் படையின் கட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில அம்சங்கள் பாதுகாப்புத் துறைக்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே வெளிப்படையான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

இதுதவிர, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், இந்தத் துறையின் செயலர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் தொடர்ந்து வான் பகுதி தொடர்பான பிரச்னையில் பாதுகாப்புத் துறையை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் இத்தகைய வெளிப்படையான விமர்சனங்கள் பாதுகாப்புத் துறை தரப்பை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வரைவு விமானப்போக்குவரத்துக் கொள்கை தொடர்பான ஆட்சேபனைகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். விமானப்போக்குவரத்தில் பல்வேறு நிலைகளில் படிப்படியாகத் தனியார்மயத்தை ஊக்குவித்துவரும் விமானப்போக்குவரத்துத் துறையை நம்பி விதிகளை தளர்த்த முடியாது என்பதே அந்தோனியின் வாதம். பாதுகாப்புத் துறையின் எதிர்ப்பை அடுத்து விமானப் போக்குவரத்துக்கான வரைவுக் கொள்கை இறுதி வடிவம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இரு முக்கியத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்னைக்குத் தீர்வுகாண வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் பல்வேறு துறை அமைச்சர்கள் அடங்கிய உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 1999-ல் ஏற்பட்ட கார்கில் சண்டைக்குப் பின்னர் வான்பகுதி மேலாண்மைக்கான ஓர் அதிகார அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டம் முறையாக நிறைவேறாததே தற்போதைய பிரச்னைக்குக் காரணம்.

1995-ல் ரஷிய விமானங்கள் புருலியாவில் ஆயுதங்களைக் கொட்டின, 2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த சிறிய ரக பயணி விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, அண்மையில் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்தாக்குதலைத் தொடங்கி இருப்பது, சில பயங்கரவாத இயக்கங்கள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது ஆகியவை நாட்டின் வான்பாதுகாப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால்தான் நாட்டின் வான்பகுதி எல்லைப் பிரச்னைக்குச் சரியான தீர்வைக் காண முடியும். நாட்டின் பாதுகாப்பா, விமானப் போக்குவரத்து வளர்ச்சியா? என்றால் பாதுகாப்பான விமானப்போக்குவரத்து என்பதே அனைவரின் கருத்தாகும்.

விமானப்படை, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் அடங்கிய வான்பகுதி மேலாண்மைக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்துவதே தற்போதைய பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.

Posted in AAI, Aeronautics, Air, Aircraft, Airforce, Airport, Airports, airspace, AK Antony, Analysis, Antony, ATC, Attacks, aviation, Backgrounder, Boeing, Cabinet, Civil, commercial, Courier, defence, Defense, Domestic, Eelam, Eezham, Fighter, Flights, Fly, Freight, Govt, HAL, IAF, International, Jets, Kargil, LTTE, Management, Marshal, Marshalls, Meenambakkam, MIG, Military, Navy, Op-Ed, Opinion, passenger, Patel, Pilots, Planes, Policy, Praful Patel, Protection, Share, Strategy, Terrorism, Thrisoolam, Trisoolam, World, Zone | Leave a Comment »

Unity in Diversity – Regional affinity vs Naturalized out-of-state Indians

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

இவர்களும் இந்தியர்கள்தான்!

பி. சக்திவேல்

சமீபகாலமாக இந்தியாவில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தாக்கப்படுவதும், அவர்களுடைய உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகின்றன.

இந்தச் சம்பவங்களால் “பிராந்திய உணர்வுகள்’ முக்கியத்துவம் அடைந்து “தேசிய உணர்வுகள்’ முக்கியத்துவம் இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் சமூகக் கட்டமைப்புக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் ஆரோக்கியமானதல்ல.

“பிராந்திய உணர்வுகளை’ காட்டிலும் “இந்தியா’ என்ற தேச உணர்வுக்கு முன்னுரிமை அளித்துதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. உதாரணமாக, அரசியலமைப்புச் சட்ட விதி 1-ல் இந்தியா என்பது “”மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் ஐக்கியம்” என்றுதான் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளைக் காட்டிலும் மத்திய அரசு மிகவும் வலிமையானதாகவும் அதிக அதிகாரம் படைத்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அந்நாட்டுக் குடிமக்களுக்கு “இரட்டைக் குடியுரிமை’ வழங்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்தியாவில் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும், இந்தியா என்கிற உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவும் ஒரே ஒரு குடியுரிமையைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

மேலும் அடிப்படை உரிமைகளில் இந்திய குடிமக்களுக்குச் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதற்கும், ஓர் இடத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிப்பதற்கும், விரும்பிய தொழில் செய்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக, பல மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மற்ற மாநிலத்திலிருந்து வந்தவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகப் பாவித்து நடத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகி உள்ளது. மகாராஷ்டிரத்தில் வசித்து வரும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சார்ந்தவர்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்; அதேபோல், வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மகாராஷ்டிரத்தில் நுழைவதைக் கட்டுப்படுத்த வேண்டும்; இது சிவசேனையின் பிரதான கோஷம். இதை வலியுறுத்தித்தான் சமீபத்தில் நடைபெற்ற மும்பை உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றது. “வாக்கு வங்கியை’ கவர்வதற்காக இனிவரும் காலத்தில் இந்தக் கோஷம் மேலும் வலுப்பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

சென்ற ஆண்டு ரயில்வே பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதச் சென்ற வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அசாமில் ரயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஹிந்தி பேசும் மாநிலத்தைச் சார்ந்த அனைவரும் அசாமை விட்டு வெளியேற வேண்டும் என “உல்பா’ தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். ஹிந்தி பேசும் மக்கள் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். அசாம் மாநில அரசும் மத்திய அரசும் உறுதி அளித்தபோதிலும் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ஹிந்தி பேசும் மக்கள் தங்கள் உடமைகளை விட்டு விட்டு குடும்பத்தோடு அகதிகளாக வெளியேறும் அவலமும் நீடித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் அரசியலமைப்புச் சட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள், குடிமக்கள் அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அசாம் மாநில அரசும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் சரிவர செயல்படாதது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையிலும் தேசிய உணர்வுகள் முக்கியத்துவம் இழந்து பிராந்திய உணர்வுகள் மேலோங்கி விட்டன. இதையடுத்து நாள்தோறும் உருவாகிவரும் சச்சரவுகளும் முரண்பாடுகளும் நமது ஜனநாயகத்திற்கு கேடுகளை விளைவித்து வருகின்றன. இந்நிலை நீடிக்குமானால், மக்கள் படிப்படியாக அரசின் மீது நம்பிக்கை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும்.

குஜராத்தில் நடப்பது வேறுவிதமான நிகழ்வுகள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் “கோத்ரா’ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் இவர்கள் எவ்வாறு தங்களை தேசிய நீரோட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்?

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய பல்வேறு இனம் மற்றும் மொழி பேசக்கூடிய மக்களைப்பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு நாம் அனைவரும் கவனிக்கப்படக்கூடியதாக அமைந்துள்ளது. அதாவது, மற்ற எல்லா நாட்டினரைக்காட்டிலும் இந்தியாவிலிருந்து குடியேறிய மக்களிடம் மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு வேற்றுமைகள் குறைந்து காணப்படுகிறது.

தெளிவாகக் கூற வேண்டுமென்றால், மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்கள் மிகவும் ஒற்றுமையோடு, தங்கள் மொழி மற்றும் கலாசார அடையாளத்தை மறந்து, வாழ்ந்து வருகின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒற்றுமையோடு செயல்படும்போது ஏன் இந்தியாவில் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை. இது கண்டிப்பாக நாம் கவனம் செலுத்தப்பட வேண்டிய கேள்வி.

அடிப்படையில் நம்மிடம் “இந்தியா’ மற்றும் “இந்தியன்’ என்கிற உணர்வு உள்ளது. இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதனால்தான் சுனாமி வந்தபோதும், குஜராத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தபோதும், வடமாநிலங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டபோதும் கார்கில் போர் நடைபெற்ற தருணத்திலும் நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், நம்மால் முடிந்த உதவிகளை அளித்தோம்.

தங்களுடைய அரசியல் செயல்பாட்டிற்காகவும் மற்றும் லாபத்திற்காகவும் பிராந்தியத்தில் செயல்படும் ஒரு சில அமைப்புகள்தான் இந்த வேற்றுமை விதையை விதைத்துத் தங்களுடைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த அமைப்புகளுக்கு நாம் துணைபோகக் கூடாது. உடனடியாக இத்தகைய அமைப்புகளை தடை செய்ய உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தியக் குடிமக்களாகிய நாம் தேசிய உணர்வுகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகே மாநில அல்லது பிராந்திய உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பல்வேறு காரணங்களால் மாநிலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அந்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதியைப் பாதித்துவிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அன்னிய நேரடி முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்குச் சென்றடையக்கூடிய நிலையும் ஏற்பட்டுவிடும்.

எனவே அண்டை மாநிலங்களையும் பிற மாநிலங்களையும் சார்ந்தவர்களை சமமாக நடத்தக்கூடிய மனோபாவத்தையும் பண்பையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களும் இந்தியர்கள்தான்!

(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).

Posted in Affinity, Citizen, Citizenship, Conflicts, Cooperation, Diversity, Duality, Foreign, Hindi, Identity, Independence, India, Language, Nationalism, Naturalization, Region, Regional, Republic, State, Tamil, Unity, Zone | Leave a Comment »

More States or no more Splits? – India regions along Languages

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 8, 2006

தேவையில்லை புதிய மாநிலங்கள்

கே.வீ. ராமராஜ்

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பகுதிகளைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தேசிய அரசியலில் முக்கிய விவாதமாகத் தோன்றியுள்ளது. இந்நிலையில் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவான சரித்திரத்தைப் பற்றியும் மாநிலங்களைப் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவது அவசியம்தானா என்பது குறித்தும் அலசி ஆராய வேண்டிய தருணம் இதுவாகும்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய போதே 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைய வேண்டுமென கோரிக்கை எழுந்தது. 1920ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி அதன் மாநில அமைப்புகளை மொழிவாரி அடிப்படையில் கொண்டிருந்தது. 1938ஆம் ஆண்டிலேயே தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் சென்னை நகரமும் இம்மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டுமெனவும் கோரி ஆந்திரர்கள் “”மதராஸ் மனதே” என்ற இயக்கத்தைத் தொடங்கினர். 1947ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றமும் மொழிவாரி மாநில அமைப்பை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து தனித் தமிழ் மாநிலக் கோரிக்கையும் வலுவடைந்தது.

1948 ஜூன் 17 அன்று உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.தர் தலைமையில் மொழிவாரி மாநிலக் குழு அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநிலம் முக்கியமான பிரச்சினை அல்ல என்றும் மாநிலங்களை நிர்வாக வசதிக்காகவே பிரிக்க வேண்டுமென்றும் அப்படியிருப்பினும் சென்னை, மும்பை போன்ற நகரங்களைச் சிறப்பு மாநிலங்களாக அறிவிக்க வேண்டுமென்றும் இக்குழு பரிந்துரைத்தது. எஸ்.கே.தர் குழுவின் பரிந்துரைகளினால் ஆந்திரத்தில் கோப அலைகள் எழுந்ததைக் கண்டு நேரு, படேல், சீதாராமய்யா ஆகியோரைக் கொண்ட குழுவை இந்தியத் தேசிய காங்கிரஸ் நியமித்தது. மொழிவாரி ஆந்திர மாநிலம் ஏற்படுமாயின் சென்னை ஆந்திரத்துடனும் தமிழகத்துடனும் சேர்க்கப்படாமல் தனித் தகுதி மாநிலமாக இருக்குமென இக்குழுவும் அறிவித்தது. இதனால் புது ஆந்திரத் தலைநகர் உருவாக்க வேண்டும் அல்லது சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்க வேண்டுமென இக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மாகாண அரசால் பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையில் நிறுவப்பட்ட பகுப்பாய்வுக் குழு சென்னையை ஆந்திரத்தின் தாற்காலிகத் தலைநகராக வைத்துக் கொள்ளக்கூட விரும்பவில்லை.

இந்நிலையில் தெலுங்கு மாநிலத்தை உடனே அமைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடங்கின. 1951 ஆகஸ்டில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செயலாளர் சுவாமி சீதாராம் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதனைக் கண்டித்த நேரு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை எல்லைப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதாயின் மொழிவாரி கொள்கையைப் பரிசீலிப்பதாக 1951 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மொழிவாரிக் கோரிக்கைக்கு நேரு அதிக ஆதரவளிக்காததால் 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆந்திரத்தில் காங்கிரஸ் அதிக வெற்றி பெறவில்லை. ஆந்திரத்தை உடனடியாக உருவாக்க பொட்டி ஸ்ரீராமுலு 1952-ல் 67 நாள்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையைத் தவிர தெலுங்கு பேசும் பகுதிகளைக் கொண்டு தனி ஆந்திரம் உருவாக்கப்படும் என 1952 டிசம்பர் 19-ல் அறிவித்து வாஞ்சு குழுவை நேரு நியமித்தார்.

ஆந்திரத்திற்கு புதுத் தலைநகர் ஏற்படும் வரை சென்னை தலைநகராக இருக்குமென வாஞ்சு குழு அறிவித்ததால் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது; 1953ஆம் ஆண்டு தெலுங்கு பேசும் மக்களுக்காக சென்னை மாநிலத்தைப் பிரித்து கர்நூலைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரம் உருவானது. ஆந்திரம் மொழி அடிப்படையில் அமைக்கப்பட்டதும் மற்ற மாநிலங்களும் மொழிவாரி அமைப்பைக் கோரின. 1952ஆம் ஆண்டு பஷல் அலி தலைமையில் சர்தார் கே.எம். பணிக்கர், எச்.என். குன்ஷ்ரு ஆகியோர் அடங்கிய மாநிலச் சீர்திருத்தக் குழுவை மத்திய அரசு நியமித்தது. மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்படுதலை இக் குழு ஆதரித்துக் கொடுத்த அறிக்கையைத் தொடர்ந்து 1956 ஜூலையில் மாநில சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1970களில் எழுப்பப்பட்டது. இதைப் போன்றே மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று இதுவரை 29 கோரிக்கைகள் ஏற்கெனவே எழுந்துள்ள நிலையில் அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆந்திரத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் அதைப் போலவே ஆந்திரத்தில் சித்தூர், கர்நூல், கடப்பா, ஆனந்த்பூர் மற்றும் கர்நாடகத்தில் பெல்லாரி மாவட்டங்களை இணைத்து ராயலசீமா மாநிலம் உருவாக்க வேண்டும் என சிலர் ஏற்கெனவே கோரி வருகின்றனர். இதைப் போலவே கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்களைக் கொண்டு குடகு மாநிலம் அமைக்க வேண்டுமென அவ்வப்போது பேச்சு எழுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான ஒன்றாக உள்ளது. தமிழகத்திலும் மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகமும் சென்னையைத் தலைநகராகக் கொண்டு வட தமிழகமும் இரண்டு மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என ஓரிரு முறை பேச்சு எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா மாநிலக் கோரிக்கையும் மேற்கு வங்காளத்தில் போடோ மாநிலக் கோரிக்கையும் உத்தரப்பிரதேசத்தில் ஹரித் பிரதேச மாநிலக் கோரிக்கையும் அவ்வப்போது எழுகின்றன. ஏற்கெனவே உள்ள மாநில எல்லைகளை மாற்றி புதிய மாநிலங்களை உருவாக்குவது என்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படக் கூடும்.

நம் நாட்டின் அடிப்படை அம்சமான தேசிய ஒருமைப்பாட்டிற்கு இப் பிரச்சினை ஊறு விளைவிக்கும் எனலாம். தனி மாநிலம் அமைவதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி பெற்று விட முடியாது. ஏற்கெனவே பிரிக்கப்பட்டு உருவான ஜார்க்கண்ட், உத்ராஞ்சல் மற்றும் சத்தீஷ்கர் போன்றவை வளர்ச்சிக் குறியீடுகளில் இன்னும் பின்தங்கியே நிற்கின்றன.

மாநிலங்கள் குறைந்த பரப்பளவில் ஏற்படுத்தப்படும்போது தொழில், வேளாண்மை, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சில சமயங்களில் வலுவிழக்க நேரிடும். உதாரணமாக தற்போதைய தென்னக மாநிலங்களில் ஒரு பகுதியில் மழை பொய்த்துப் போனாலும் இன்னொரு பகுதியில் உள்ள நீர் வளத்தை வைத்து மாநில அரசுகள் குடிநீர், விவசாயம் போன்ற பிரச்சினைகளைச் சமாளித்துக் கொள்ளலாம்.

மொழிவாரி மாநிலங்கள் நீடிப்பதே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையானது. தேசியத்தையும் மாநில ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு ஏற்ற வகையில் பாடத் திட்டங்களை அரசாங்கங்கள் உருவாக்கி இதற்கான பணிகளில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகளை ஆதரிக்க வேண்டும். தென்னகத்திலும் நான்கு மொழிகளுக்கும் நான்கு மாநிலங்கள் என்ற நிலை தொடர அரசியல் கட்சிகள் பாடுபட வேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பாரபட்சமற்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுடன் மாநில அரசுகள் மாநிலம் முழுவதும் சமமான பார்வையோடு ஆட்சி நடத்துவது அவசியமாகும். மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகளில் மத்திய அரசு தலையிட்டு விரைவில் சமரசத்தை ஏற்படுத்த வேண்டும். மாநில அரசுகள் மாநில அளவில் மக்கள் ஒற்றுமைக் குழுக்களையும் அண்டை மாநிலங்களுடன் இணைந்து அண்டை மாநில நல்லுறவுக் குழுக்களையும் ஏற்படுத்த வேண்டும். தேசிய அளவில் இக்குழுக்களைக் கண்காணித்து, சிறப்பாகச் செயல்பட நெறிப்படுத்தும் அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய தேச ஒற்றுமைக் குழுக்களை நாடு முழுவதும் வலைப்பின்னல் போல உருவாக்கிட வேண்டும்.

Posted in 1947, Andhra, AP, Independence, India, Karnataka, Kerala, Language, Madras Manathey, Mahrashtra, National Congress, Potti Sriramulu, Province, Rayalaseema, Regional, Republic, State, Tamil, Telengana, Telugu, Vidhrabha, Zone | Leave a Comment »