இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா விவாகரத்து வழக்கு : விருப்பத்துடன் பிரிகிறார்கள்
சென்னை, ஆக. 7-
இசைஞானி இளையராஜா வின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா. இவரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.
யுவன்சங்கர் ராஜா 2002-ம் ஆண்டு லண்டனில் `பிரண்ட்’ என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த லண்டனை சேர்ந்த சந்திரன் சுஜாயா என்ற பெண்ணுடன் யுவன்சங்கர் ராஜாவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க
தொடங்கினார்கள்.வீட்டிற்கு தெரியாமலே இருவரும் 3.9.03-ம் ஆண்டு லண்டனில் பதிவுத்திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விஷயம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இரு வீட்டாரும் பேசி முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி 21.3.05-ம் ஆண்டு இந்து வைதீக முறைப்படி சென்னையில் திருமணம் நடந்தது.
யுவன்சங்கர் ராஜா-சந்திரன் சுஜாயா தம்பதிகளுக்கு இது வரை குழந்தை இல்லை.
கடல் கடந்து தொடங்கிய இவர்கள் காதல் இரண்டு ஆண்டுகளிலேயே கசந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.
பிரபல இசை அமைப்பாள ராகதிகழும் யுவன்சங்கர் ராஜா வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய சினிமா பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் சமரச முயற்சி வெற்றி பெறவில்லை. இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.
இருவரும் பிரிய விரும்புவ தாக பரஸ்பர புரிந்துணர்வுபடி விவாகரத்து பெற முடிவு செய்து இன்று ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தார்கள். விவாகரத்து கோரி இருவரும் ஒன்றாக சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.
கோர்ட்டுக்கு வந்த யுவன் சங்கர் ராஜாவும் அவரது மனைவி சந்திரன் சுஜாயாவும் கோர்ட்டுக்குள் ஒன்றாகவே அமர்ந்து இருந்தனர். அப்போது எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் சிரித்து பேசியபடி இருந்தார்கள்.