வீராசாமியின் வாதமும் கதாரா விவகாரமும்! – Kalki Editorial
சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனுடைய உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதத்துக்கும் பா.ஜ.க. எம்.பி பாபுபாய் கதாரா விவகாரத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னால், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகவே தோன்றும்.
ஆனால், ஆவுடையப்பனின் உதவியாளர் இழைத்தது போன்ற சிறு சிறு அதிகார துஷ்பிரயோகங்கள்தான் ஆரம்பப் படிகள். அதிகார துஷ்பிரயோகத்திலிருந்து ஊழல், அதிலிருந்து இலஞ்சம், அதிலிருந்து கிரிமினல் குற்றங்கள் என்று சங்கிலித் தொடரான தப்புக் காரியங்களுக்கு வழி வகுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஆதாயங்கள் கிட்டும் வகையில் அதிகார துஷ்பிரயோகங்கள் செய்வதுதான் இன்றைய அரசியல் நடைமுறை. பெரும்பாலான அரசியல்வாதிகள் இதனைத் தங்கள் உரிமையாகவே கருத ஆரம்பித்து விட்டார்கள்!
அரசியல்வாதிகள் சார்பாக, ஆர்க்காடு வீராசாமியிடமிருந்து இதற்கு ஒப்புதல் வாக்குமூலமே கிடைத்துவிட்டது! தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதம் குறித்து, சமீபத்தில் தமிழக சட்ட சபையில் விவாதம் எழுந்திருக்கிறது. அதையட்டி, தம்மைப் போன்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தினமும் கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசுக் கடிதங்களில் கையெழுத்துப் போடுவதாகப் பேசியிருக்கிறார் ஆர்க்காட்டார். ‘‘இப்படியே போனால், உங்களுக்கே தெரியாமல் உங்கள் ராஜினாமா கடிதத்தில் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் கையெழுத்துப் போட நேரும்’’ என்று தயாநிதிமாறன் எச்சரித்ததாகவும் வீராசாமி வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
ஒரு மூத்த அமைச்சர், எந்த தைரியத்தில் இதைப் பெருமைக்குரிய விஷயமாகவோ அல்லது சர்வ சாதாரண விஷயமாகவோ பறைசாற்றுகிறார் என்பதுதான் நமது வேதனைமிக்க கேள்வி! அதிலும் சக கட்சிக்காரர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் முகமாக இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியுடன் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது-இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை!
ஆவுடையப்பனின் தனி உதவியாளர், ‘பார்’ நடத்த ஒப்பந்தத்துக்கு விண்ணப்பித்த ஒருவரைச் சிபாரிசு செய்து, சபாநாயகரின் லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்திக் கடிதம் அனுப்பியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதுகுறித்துச் சபாநாயகரின் விளக்கத்தையும் கோரியிருக்கிறார். ‘‘சபாநாயகர் பேரில் குற்றமில்லை; அவரது உதவியாளர் கடிதம் அனுப்பியதற்கு அவர் பொறுப்பாக முடியாது; மேலும், அந்தக் கடிதம் சிபாரிசு செய்த நபருக்கு ஒப்பந்தம் அளிக்கப்படவுமில்லை’’ என்பது வீராசாமியின் வாதம்! சபாநாயகரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் இல்லை.
அப்படியானால், யாருக்கு வேண்டுமானாலும் சிபாரிசுக் கடிதம் தருவது பதவியிலிருப்பவர்களின் உரிமை என்றல்லவா ஆகிறது! இது அதிகார துஷ்பிரயோகம் அல்லாது வேறென்ன?!
யாருக்கேனும் அநீதி நடந்தால், அதைச் சீர்செய்ய மட்டுமே பதவியில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தலாம். அத்தகைய சிபாரிசுகள் நியாயமானவை; பாராட்டுக்குரியவை.
தகுதியற்றவர்களுக்கு முறைகேடாக வாய்ப்புகள் கிடைக்க சிபாரிசு செய்வது அதிகார துஷ்பிரயோகம் மட்டும் அல்ல; சமுதாயத்தின் வளர்ச்சியையும் வளத்தையும் முடக்கும் பாபச் செயல். இதனை உணரும் நல்லறிவுகூட இல்லாத நிலைக்கு நம் அரசியலும் அரசியல்வாதிகளும் தாழ்ந்து போயிருப்பது கொடுமையிலும் கொடுமை!