செஞ்சிலுவை குழுவினரின் வழித்துணையுடன் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியாது – விடுதலைப் புலிகள்
![]() |
![]() |
இத்தகவல் செஞ்சிலுவை சங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் தெரிவிப்பு |
இலங்கையில் யாழ்குடா நாட்டுக்கு, கடல்வழியாக மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்லும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் வழித்துணையுடனான கப்பல்களுக்குத் தம்மால் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முடியாது என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் இலங்கைக்கான தலைமை அதிகாரி டூன் வென்டன்ஹொவே அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் யாழ் குடாநாட்டிற்கான மனிதாபிமான உதவிகள் அடங்கிய வாகனத் தொடரணி, அம்புலன்ஸ் வண்டிகள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் பயணம் செய்யும் வாகனங்கள் என்பன தமது பிரதேசத்திற்குட்பட்ட ஏ9 வீதி ஊடாகச் செல்லும் பொழுது எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதிமொழியை வெளியிட்டுள்ளார்.
ஆனால், யாழ் குடாநாட்டு மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை கடல்வழியாகக் கொண்டு செல்வதற்கான அதிகாரத்தைக் கோரியுள்ள சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் கடிதம் தொடர்பில் தமது முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லை என்றும் விடுதலைப் புலிகள் இக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.