இணையத்தில் போதை மருந்து விற்றதாக ஐ.டி. நிறுவன தலைமை அதிகாரி கைது
கோல்கத்தா, பிப். 14: இணைய தளத்தின் மூலம் போதை மருந்து விற்றதாக, தகவல்தொழில்நுட்ப (ஐடி) நிறுவனத்தின் தலைமை அதிகாரி போதைப்பொருள் ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் எக்ஸ்பான்ஸ் டெக்னாலஜிஸ், எக்ஸ்பான்ஸ் ஐடி சர்வீசஸ் நிறுவனங்களின் தலைமை அதிகாரி சஞ்சய் கெடியா. இவர் ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு சிறப்பு நீதிபதி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
பிப்ரவரி 1-ம் தேதி, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுங்கத்துறை மற்றும் அரசுத்துறை வங்கி அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் கோல்கத்தா மற்றும் தில்லியில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 வங்கிக் கணக்குகளின் மூலம் சஞ்சய் கெடியாவும் அவரது நிறுவனமும் நிதிமோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
எக்ஸ்பான்ஸ் நிறுவனத்தில் 49 சதவீதப் பங்குகளைப் பெற்றுள்ள ஸ்டீவன் மகானா என்பவருடன் இணைந்து, இணையத்தின் மூலம் பென்டர்மைன் என்ற போதைப்பொருளை விற்றதாக சஞ்சய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 லட்சம் வரை அபாரதமும் விதிக்கப்படும் என போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கிழக்கு மண்டல இயக்குநர் சுனில் மிட்டல் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள ஸ்டீவன் மகானாவை விசாரிக்க ஒரு குழு செல்ல உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் மூலம் கிடைத்த பணத்தை ஹாங்காங், லக்சம்பர்க், அமெரிக்கா மற்றும் ஸ்வீடனில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பதுக்குவதற்கு சஞ்சய் கருவியாகச் செயல்பட்டுள்ளார் என சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.