உள்ளாட்சிகளில் மக்களாட்சி
கல்பனா சதீஷ்
(கட்டுரையாளர்: ஆலோசகர், பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு).
உள்ளாட்சித் தேர்தலுக்கான தயாரிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இச்சூழலில், கடந்த பத்தாண்டுகளில் இவ்வமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த மீள்பார்வை அவசியம். 73-வது இந்திய அரசியல் சாசனத் திருத்தச் சட்டம், 1992-ம் ஆண்டு நிறைவேறிய பிறகு, குறிப்பாக தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996-ல் அனைத்துக் கிராம/நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அரசியல் சாசனத் திருத்தத்தால் முன்பிருந்ததுபோல் மாநில அரசு விரும்பினால் உள்ளாட்சிக்குத் தேர்தல் நடத்தலாம்; விரும்பாவிட்டால் நடத்தத் தேவையில்லை என்கிற நிலை மாறி 5 வருடத்திற்கு ஒரு முறை கட்டாயத் தேர்தல் நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் 1996-ல் புதிய மாநில அரசு பொறுப்பேற்றவுடன், தனது ஆட்சியை அனைத்துக் கிராம மற்றும் நகர உள்ளாட்சிகளில் தக்க வைக்கும் நோக்குடன் அக்டோபர் 1996-ல் தேர்தல் நடத்தியது. 2001-லும் அதனைத் தொடர்ந்து 2006-லும் தாமதமின்றி ( 6 மாதகால அவகாசமிருந்தும்) தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. இதன்மூலம் மாநிலத்தை ஆளும் கட்சிகள் தங்களது ஆட்சி உள்ளாட்சிகளிலும் அமைய வேண்டும் என்ற வேகத்தைக் கொண்டிருப்பது தெரிகிறது.
மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நீக்கப்பட்டு கவுன்சிலர்களிடையே மறைமுகத் தேர்தல் நடத்த சமீபத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதும், உள்ளாட்சிப் பதவிகளைக் கூட்டணிக் கட்சிகள் பங்கீடு செய்து கொள்வதும், முன்னாள் முதல்வர் உள்ளாட்சிகளுக்கு Anti Defection Law கோருவதும் அரசியல் கட்சிகள் உள்ளாட்சிகளைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முனைவதையே காட்டுகின்றன. இத்தகைய அணுகுமுறை, உள்ளாட்சிகளை மேலும் மேலும் மாநில / பிராந்திய / தேசியக் கட்சிகளின் கட்டுப்பாட்டில் வைத்துத் தற்போதுள்ள கட்சி கலாசாரத்தைக் குக்கிராமங்களிலும் நகரங்களிலும் புகுத்துவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.
கட்சிகளின் பங்கேற்பில் சாதகமான அம்சம் என்னவாக இருக்க முடியுமென்றால், கிராமங்கள் தனி நபர் / சாதீய ஆதிக்கம் செலுத்தும் நபர்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீண்டு ஜனநாயக ஆட்சி முறையில் எவரும் தேர்தலில் போட்டியிட ஏதுவாக இருக்கும். அதேநேரத்தில், கிராமங்களிலும் நகர்ப்புற ஏழை குடியிருப்புப் பகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் ஊடுருவல் என்பது, மக்கள் தங்கள் வாழ்நிலையை உணர்ந்து மேற்கொள்ளும் புதிய அரசியல் கொள்கைக்கோ சித்தாந்தத்திற்கோ மிகப்பெரும் தடையாக இருக்கும். இந்திய அரசியல் சட்டம் எதிர்நோக்கும் உள்ளூர் சுய அரசாங்கம் என்பது கண்ணுக்கெட்டாத கனவாகவே போய்விடும்.
மாநிலத்தில் சுய ஆட்சி கோரும் அரசியல் கட்சிகள் தேசிய அரசியலிலும் கிராம அரசியலிலும் பங்கேற்பது அவர்களது கட்சியின் கொள்கையையும் பலத்தையும் நிலைநாட்டுவதற்கான உரிமையாகக் கருதினாலும் இம்முயற்சி காலங்காலமாக சமூக நீதி மறுக்கப்பட்டு வரும் பெரும்பான்மை அடித்தட்டு மக்களின் உள்ளூர் அளவிலான தனிப்பட்ட, சுதந்திர அரசியல் எழுச்சி உருவானதற்கு சாவு மணி அடித்தது போலாகிவிடும். ஏற்கெனவே முழுமையாகக் கட்சிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்ட நகர்ப்புற, உள்ளாட்சிகள் அடித்தட்டு மக்களிடம் எந்தவித நம்பிக்கையையோ ஆதரவையோ பெறவில்லை என்பது மக்களிடம் ஓர் நேர்காணல் நடத்தினால் தெளிவாகத் தெரிய வரும்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இணையான அந்தஸ்தை 73-வது அரசியல் சாசனப் பிரிவின் கீழ் உள்ளாட்சிகள் பெற்றிருந்தாலும் மாநில அரசு மக்களுக்கு நெருக்கமாக உள்ள இவ்வமைப்புகளை வெறும் சாலை போடவும் தெரு விளக்கு ஏற்றவும், மேலும் சில அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரும் ஏஜென்சி அமைப்பாகவே நடத்துகிறது. இதற்கு ஒரு முக்கிய உதாரணம், ஊரக உள்ளாட்சிகளுக்கு சட்டபூர்வமாக கல்வி, சுகாதாரம், பொது விநியோகம், நிலச்சீர்திருத்தம், பொதுவான ஆதாரங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட 29 துறைகளுக்கான அதிகாரப் பரவலாக்கம் அளிக்காததே.
மத்திய அரசிடமிருந்து கூடுதலான நிதிப் பகிர்வினைக் கோரியும், சர்வதேச வங்கிகளிடமிருந்து நிதி பெறுவதிலும் முனைப்புக் காட்டும் மாநில அரசு, உள்ளாட்சிகளுக்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக 8 சதவிகித நிதியை மட்டுமே அளித்து வருகின்றது. இந் நிதியும் முறையாக, முழுமையாகக் குறிப்பிட்ட நிதியாண்டிற்குள் உள்ளாட்சிகளிடம் சென்றடைவதில்லை.
மேலும் சட்டப்படியாக உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய சிறு கனிமங்கள், குவாரிகள் மீதான வருவாய், முத்திரைத்தாள் மீதான மேல் வரி போன்றவை பல ஊராட்சிகளுக்கு நிலுவையில் உள்ளன. எண்ணிக்கையில் அதிகமுள்ள 12618 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 561 பேரூராட்சிகளில் எவ்வாறு நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியாமலேயே இருக்கிறது. 1998-99-ல் ரூ. 1301.91 கோடியாக இருந்த ஊராட்சிகளுக்கான மாநில நிதி ஆணைய நிதி, 2006-07-ல் ரூ. 1224.76 ஆகக் குறைந்துள்ளது.
1996-2001 கால ஆட்சியில் தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் உறுதி செய்தபடி உள்ளாட்சிகளுக்கான அதிகாரம், நிதி ஆதாரம், ஊழியர்கள் பரவலாக்கம் போன்றவற்றை படிப்படியாக வெறும் அரசாணையாக இல்லாமல் சட்டபூர்வமாக நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். இட ஒதுக்கீடு மூலம் கிராம / நகர்ப்புற ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் மற்றும் தலித் / ஆதிவாசியின வேட்பாளர்கள் சுதந்திரமாகவும் நேர்மையான முறையிலும் தேர்தலில் பங்கேற்கவும், வெற்றி பெறவும் பிரதிநிதிகள் உள்ளாட்சிகளில் எவ்வித அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாகச் செயல்படவும் உறுதி செய்ய வேண்டும்.
1997 க.இ. ஜெயின் தலைமையிலான மாநிலத் திட்டக்குழு பரிந்துரைத்தபடி உள்ளாட்சிகளுக்கான அதிகாரமானது அதனதன் எல்லைகளுக்குட்பட்டு வழங்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் ஈரடுக்கு ஊராட்சிக் கொள்கை மாவட்ட ஊராட்சிகளையும் மாவட்டத் திட்டமிடல் குழுக்களையும் ஒழித்துக் கட்டும் முயற்சியாகவே உள்ளது. இந்த நிலைப்பாடு, காலனி ஆதிக்கம் கொண்டு வந்த அதிகாரிகள் ஆளும் மாவட்ட நிர்வாகத்தை (கலெக்டர் ராஜ்) வலுப்படுத்துவதாகவே உள்ளது. ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளத்திலிருந்து மேல்நோக்கிய ஆட்சி அமைப்புகளில் ஆரோக்கியமான தொடர்பு ஏற்படுத்துவதில் அக்கறை இருக்குமானால் மாநில அரசும் அரசியல் கட்சிகளும் மூன்றடுக்கு ஊராட்சிக் கொள்கையை ஏற்று அமல்படுத்த வேண்டும்.
மாவட்ட ஊராட்சிகள் மற்றும் மாவட்டத் திட்டமிடல் குழுக்கள் அதிகாரமுள்ள, செயல்படும் அமைப்பாக மாற்றப்பட்டு கிராம சபை மூலம் கீழிருந்து திட்டமிடல் உறுதி செய்யப்பட வேண்டும். உள்ளாட்சிகள் செயல்படுத்தும் அமைப்பாக மட்டும் இல்லாமல், மக்கள் முடிவெடுக்கும் / பங்கேற்கும் களமாக மாற வேண்டும். கிராம அரசியலில் சமூக நீதி மற்றும் நிலைத்த – நீடித்த வளர்ச்சிக்கான புதிய சித்தாந்தமும், கொள்கையும் உருவாக மாநில அரசும் அரசியல் கட்சிகளும் வழிவிட்டு நடத்த வேண்டும்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுய ஆட்சி உள்ளாட்சிகளில் மக்களாட்சி மலர்ந்திட உறுதியான அரசியல் விருப்புணர்வு வேண்டும்.
(கட்டுரையாளர்: ஆலோசகர், பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு).