பெண் தெய்வங்கள் இருக்கும் திக்கு நோக்கி, பயபக்தியுடன் தண்டம் சமர்ப்பிக்கும் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிச் சிறிது
காலமாயிற்று.
என்னைப் பொருத்த அளவில், உலகில் சாதாரண ஸ்திரீகள் யாருமே
கிடையாது. எல்லாரும் மாதரசிகள், பெண்மணிகள், ஸ்திரீ ரத்தினங்கள், பெண் தெய்வங்கள், இன்ப விளக்குகள், இளங்குயில்கள், பொன்
மயில்கள்தான். உலகம் இத்தகைய ஆனந்தக் காட்சியாக அடியேனுக்குத் தோற்றம் அளிப்பதற்கு முக்கியக் காரண புருஷர்கள் கவி சுப்பிரமணிய பாரதியும், திரு.வி.கலியாண சுந்தர முதலியாருமேயாவர். படிக்கப் படிக்க, மிகவும் சாதாரண ஸ்தீரிகளெல்லாம் என் கண்முன்னே தெய்வ மகளிராகக் காட்சி தரலாயினர்.
ஆரம்பத்தில், மேற்கூறிய பெரியார்களுடனே நான் முற்றும் மாறுபட்ட குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.
‘‘நல்ல
காதல் புரியும் அரம்பையர்
போலிளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு’’
எனும் பாரதியார் பாட்டின் அடிகளை முதன்முதலில் நான் கேட்டபோது, இதைப் போன்ற வெள்ளைப் புளுகு அல்லது பச்சைப் பொய் – உலகில் வேறொன்றும் கிடையாது என்று எண்ணினேன். தற்கால தமிழ்நாட்டின் இளங்கன்னியர் அரம்பைகளல்லர் என்பது சர்வ நிச்சயம். அவர்கள் காதல் புரிவதில்லையென்று கோயிலில்
விளக்கு வைத்து அணைப்பேன்.
தமிழ்நாடு மற்ற எத்தனையோ
துறைகளில் மேன்மை பெற்றிருக்கலாம். ஆனால், பெண்களின் அழகுக்கு நமது நாடு பெயர் போனதல்ல. இச் சிறப்பை கேரளம், சிந்து, காஷ்மீரம் போன்ற நாடுகளுக்குக் கொடுத்து விடத் தான் வேண்டும். மேலும், இந் நாளில் நமது பெண்களுக்குக் கன்னிப் பருவத்தில் காதல் புரியும் சந்தர்ப்பம்தான் ஏது? ‘பாரதியார் ஏன் இவ்வளவு பச்சைப் பொய் சொல்கின்றார்?’ என்று இவ்வாறு சிந்திக்கலானேன்.
ஸ்திரீகளைப் ‘‘பெண்மணிகள்’’ என்றும், ‘‘பெண் தெய்வங்கள்’’ என்றும் ‘‘மாதரசிகள்’’ என்றும் திரு.வி.க. முதலியோர் புதுத் தமிழில்
சொல்கின்றார்கள் என்னும் சந்தேகமும் முதலில் எனக்கிருந்தது.
ஆண்களைப் பற்றிச் சொல்லுங்கால், ‘‘ஆடவ தெய்வங்கள்’’ என்றாவது, ‘‘ஆண்மணிகள்’’ என்றாவது, ‘‘ஆணரசர்கள்’’ என்றாவது சாதாரணமாகச் சொல்கிறோமா? கிடையாது. பழைய நூல்களிலே ‘‘புருஷ வியாக்ரம்’’, ‘‘ஆண் சிங்கம்’’, ‘‘இளங்காளை’’ போன்ற சொற்றொடர்கள் வருவது உண்மை. ஆனால் ஆண்மகனுக்கு இவையெல்லாம் சிறப்பா, இழிவா என்பதே ஐயத்துக்கிடமானது. அறிவுக்கே சிறப்பு மிகுந்த இந்நாளில் யாரையாவது பார்த்து ‘‘அடே ஆண் புலியே! ஏ இளம் மாடே!’’ என்று அழைப்போமாயின் அவன் உண்மையிலேயே புலியின் குணமும், மாட்டின் குணமும் பெற்று அறையவோ, முட்டவோ வந்தால்
ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்ல வேளையாக, இவ்வழியில்
ஆண்களைச் சிறப்பிப்போர் இந் நாளில் யாரும் கிடையாது.
பாரத நாட்டில் நான் அறிந்த வரையில் புருஷர்களுக்குள்ளே
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒருவர்தான் ‘‘தேவர்’’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளார். ஆனால் ஸ்திரீகளிலென்றால், எல்லாரும் கமலாதேவி, விமலாதேவி, லக்ஷ்மிதேவி, பார்வதி தேவி, ருக்மணி தேவி, சகுந்தலா தேவிதான். ஏன்?
பெண் தெய்வங்காள்! மன்னியுங்கள். இந்தச் சந்தேகங்களெல்லாம்
பின்னால் எனக்குப் பூரணமாய் நிவர்த்தியாகிவிட்டனவென்று
தெரிவித்துக் கொள்கிறேன். எப்படியிருந்தாலும் தமிழ்நாடு நமது நாடு. தமிழ்நாட்டுப் பெண்கள் நமது சகோதரிகள். எனவே, பாரதியார்
பாடியதில் தவறு என்ன? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? ‘‘மணி’’ என்றால் பொன் மணியாய்த்தான் இருக்க வேண்டுமா? கருமணி அல்லது நீலமணியாகவும் இருக்கலாமன்றோ? பார்க்கப் போனால், ரூப சௌந்தரியத்தில் என்ன இருக்கிறது? குண சௌந்தரியமன்றோ உண்மை சௌந்தரியமாகும்! கல்வியழகே யழகு! கற்பின் புகழே புகழ்! நமது இளங்கன்னியர் புரியும் காதலைப் பாடியபோது, பாரதியார் கேவலம் கீழ்த்தர நாவல்களில் காணப்பெறும் இழிவான காதலையா குறிப்பிட்டார்? இல்லை; இல்லை. தமிழ்ப் பெண்களின் காதல், இல்வாழ்க்கையோடியைந்த உயர் காதலாகும் _ என் உள்ளத்திலே பெரியதொரு புரட்சி உண்டாயிற்று. எவ்வளவு பெரிய புரட்சியெனில் வங்கத்தின் பிரபல நாடகாசிரியரான துவிஜேந்திரலால் ராய் என்பவர் ஓரிடத்திலே,
‘‘பகவானே! பெண் தெய்வங்களைப் படைத்து இவ்வுலகை இன்பமயமாக்கிய நீ, அவ்வின்பத்தைக் கெடுப்பதற்கு இந்த ஆண்
மிருகங்களை ஏன் படைத்தாய்?’’
என்று எழுதியிருந்ததைப் படித்தபோது, ‘‘உண்மை! உண்மை!’’ என்று கதறினேன்.
ஏ! ஆண் மிருகங்காள்! பெண் தெய்வங்களைப் போற்றுங்கள்.
– ‘பெண் தெய்வங்கள்’
வானதி வெளியீடு
======================================================
அறியாப் பெண்களின் அறிவியல் முகங்கள்
நெல்லை சு. முத்து
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நோபல் பரிசு பெற்ற உலகின் முதலாவது பெண் விஞ்ஞானி மேரி ஸ்கலோதோவ்ஸ்கா கியுரி (1867 – 1934). ரேடியம், பொலோனியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்தவர்.
முதன்முறையாக இரண்டு தடவை பரிசு வென்ற முதல் பெண்ணும் இவர்தான். இயற்பியலுக்கும் (1903) வேதியியலுக்கும் (1911) பரிசுகள். இத்தனைக்கும் நான்கு வயதிலேயே தாயை இழந்தவர்.
ஆனால், உலக வரலாற்றில், அறிவியல் துறையில், முதல் “முனைவர்’ பட்டம் பெற்றவரும் இவரே. பாரீஸ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியர். இவரது கணவர் பியரி கியுரியும் நோபல் விருது பெற்றவர். மகள் ஐரின் கூட 1935 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் வென்றவர். உன்னத நோபல் குடும்பம்.
பிரெஞ்சு அறிவியல் அகாதமிக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது போட்டியாளர் எட்வார்டு பிரான்லி என்கிற கத்தோலிக்க வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். காரணம் அவர் ஒரு யூதப் பெண்மணியாம். நிறுவன அதிபர் எம். அமாபாத், “பெண்கள் பிரெஞ்சு நிறுவனத்தில் அங்கம் வகிக்கக் கூடாது’ என்றே அறிவித்தார். ஆயினும் மேரி கியுரி தன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார். நீண்டகாலமாக கதிர்வீச்சுப் பொருள்களுடன் ஆய்வு நடத்தியதால் கண்புரை, விரல் சிதைவு, ரத்தசோகை போன்ற நோய்கள் பாதித்து மரணம் அடைந்தார்.
இன்னொரு வகையில் ஆராய்ந்தால் நோபல் பரிசைப் பொருத்தமட்டில் ஆணாதிக்கம் சொல்ல வேண்டியது இல்லை. 671 முறை ஆண் விஞ்ஞானிகள். வெறும் 29 முறை மட்டுமே பெண் விஞ்ஞானிகள். இவர்களில் கூட சமாதானத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் முறையே 10, 9 பெண்மணிகள் புகழ் பெற்றனர். ஏனையோரில் 5 பேர் மருத்துவம், இருவர் வேதியியல், ஒருவர் இயற்பியல், ஏற்கெனவே குறிப்பிட்ட கியுரி அம்மையார் மட்டும் இரண்டு முறை.
ஏனோ தெரியவில்லை. இன்றுவரை பொருளாதாரத் துறைக்கு நோபல் பரிசு பெறவில்லை என்பது ஒரு வினோதக் குறிப்பு.
உலக அளவிலும் பெண் விஞ்ஞானிகள் ஓரங்கட்டப்படுவது ஓர் அதிர்ச்சித் தகவல். நோபல் தகுதி கொண்டு இருந்த ராச்சேல் கார்சன் என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர் பெண்ணை யாருக்கும் தெரியாது. அணுகுண்டு சோதனைக்குத் தடை விதிக்கப் பாடுபட்டு 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் தெரியும். அவருடன் ஊர்ஊராகப் பிரசாரம் செய்த துணைவியார் அவாஹெலன் தனியே சிறப்புப் பெறவில்லை.
பிரான்சிஸ் எச்.க்ரிக், ஜேம்ஸ் டி வாட்சன், மௌரிஸ் எச். வில்கின்ஸ் ஆகியோர் கண்டு துலக்கிய டி.என்.ஏ. மரபணுவின் ஏணித் தோற்றம் மரபியலில் பிரபலம். மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு உடலியங்கியல் அல்லது மருத்துவம் என்கிற பிரிவின்கீழ் நோபல் பரிசு வழங்கப் பெற்றது.
ஆனால் டி.என்.ஏ. கட்டமைப்பு குறித்த எக்ஸ்கதிர் படிகவியல் நிரூபணம் வழங்கியவரை உலகம் அறியாது. உண்மையில் 1962 ஆம் ஆண்டின் நோபல் பரிசு ரோசலிண்ட் எல்சி ஃப்ராங்ளின் என்னும் பெண் விஞ்ஞானிக்கும் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் அவரும் அதற்குள் 37ஆம் வயதிலேயே புற்றுநோயால் இறந்து போனார்.
விண்வெளியில் அண்டக் கதிர்வீச்சு மற்றும் துடிப்பு விண்மீன்களைக் கண்டறிவதற்காக அந்தோனி ஹூவிஷ், மார்ட்டின் ரைல் ஆகியோருக்கு 1974 ஆம் ஆண்டு நோபல் பரிசு. அவர்களின் முன்னோடியாக முதலில் இவற்றைக் கண்டுபிடித்த மாணவி ஜோசிலைன் பெல் நிலை கேள்விக்குறிதான்.
அது மட்டுமா; 1944 ஆம் ஆண்டு அணுக்கருப் பிளவு குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கு நோபல் பரிசு வென்றவர் ஓட்டோ ஹான். அமெரிக்காவின் மன்ஹாட்டன் திட்டத்தில் அவருடன் பணியாற்றிய லீஸ் மெய்த்னர் அங்கீகாரம் பெறவே இல்லை.
நம் நாட்டிலோ நோபல் பரிசு பெற்ற இந்தியக் குடிமக்கள் நால்வர். சர் சி.வி. ராமன் (இயற்பியல், 1930), ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம், 1913), அமார்த்திய சென் (பொருளாதாரம், 1998), அன்னை தெரசா (சமாதானம், 1979) ஆகியோர். அதிலும் இந்தியாவின் ஒரே ஒரு நோபல் பரிசுப் பெண் என்ற பெருமைக்கு உரியவர் துருக்கியில் பிறந்தவர். இந்தியக் குடியுரிமை பெற்றவர். இவர்கள் நால்வருக்குமே பெரும்பாலும் வங்காளம் அல்லது கோல்கத்தாதான் பணிக் களம்.
எப்படியோ, சர்வதேச அளவில் இன்னோர் உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் சார்ந்த பருவங்கள், நோய் சார்ந்த மருந்துகள், மூளை சார்ந்த எண்ணங்கள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உண்டு.
இதனாலேயே 1991 ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் “மகளிர் உடல்நல முன்நடவடிக்கை’ என்கிற தொலைநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் ஐம்பதுக்கும் எண்பதுக்கும் உள்பட்ட 1.61 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டு விட்டனர். நம் நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.
ஐரோப்பாவின் வாலென்டைன் நினைவுதாம் முக்கியமா? இந்த வாலென்டைன் யார் என்றுதானே. ரோம் நாட்டில் இரண்டாம் கிளாடியஸ் அரசருக்குத் தெரியாமல் உள்ளூர் வாலிபர்களுக்குத் திருட்டு விவாகம் நடத்தி வைத்த புண்ணியவான். ராஜத் துவேஷச் செயலில் ஈடுபட்டவர்தான் இந்த வாலென்டைன்.
அவர் நினைவு 1700 ஆண்டு நீள் உறக்கத்தில் இருந்த இந்தியக் காதலர்களுக்கு இப்போதுதான் பொத்துக் கொண்டு வந்தது. இன்று நாய்க்குட்டியிடம் அன்பு செலுத்தவும் வாலென்டைன் ஆசீர்வாதம் வேண்டிக் காத்து இருக்கிறோம். உயிர்களிடத்து அன்பு வேணும் என்கிற பாரதி தெரியாது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடிய வள்ளலார் அன்பு தினம் அறியோம். மக்கள்தொகைப் பெருக்கும் காதலர் தினம் மட்டும் கடற்கரையில் கற்போம். வேறு வழியே இல்லை பாருங்கள்.
இளைஞர்களே, இரவில் கண்விழித்துப் பாடம் படித்தால் உழைப்பு. படம் பார்த்தால் கொழுப்பு. நடுமூளையில் பீனியல் சுரப்பி ஒன்று ஒவ்வொருவர் மண்டைக்கு உள்ளும் இருக்கிறது. அதில் இருந்து சுரக்கும் மெலாட்டோனின் ஹார்மோன் நீர் பெருகினால் உறக்கம் கண்ணைச் சொக்கும். விடலைப் பருவத்தினருக்கு அது நடுராத்திரியில் தாமதமாகச் சுரக்கிறதாம். அதனாலேயே இரவு எல்லாம் கண் துஞ்சாமல் காலையில் உறங்குகிறார்கள் என்றோர் ஆய்வு.
ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் வருகிறது. ஆனால் “ராமன் விளைவு’ பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டு கொண்டதாக இல்லை. “வாலென்டைன் விளைவு’ காதலர் தினம் கொண்டாடினால் தான் அன்பு மலர்கிறதாம். சின்னக் கடைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வியாபாரம்.
சொந்தச் செலவில் வெளிநாட்டுப் “பெரிய சகோதரர்கள்’ வீட்டில் தங்கி அவமானப்படுவதே நம் பாரத வீராங்கனைகளின் சாதனை. மானம் கெட்டுப்போய் பரிசு வாங்குவதுதான் இனவெறித் தாக்குதலுக்கு எதிரான வெற்றியாமே.
பொதுவாக, ஆண்கள் தங்களை ஒரு பெரும் சமூக அமைப்பின் அங்கமாகக் கருதுவர். சராசரி விகிதாசார அளவில் ஆண்களே மதம், கட்சி, மொழி என்று ஒரு சமூக ஆதாரம் சார்ந்து தான் கூடுதல் ஆவேசப்படுகிறார்களாம். பெண்கள் குடும்பச்சூழல் அடிப்படையிலேயே இயங்குகின்றனர். அமெரிக்காவில் சார்லோத்தெஸ்வில்லி நகரில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மனநோய் மருத்துவர் ஆண்டர்சன் தாம்சன் கருத்து இது.
ஜே.அண்டர்சன் தாம்சன் ஜூனியர் அறிவித்த ஆய்வு முடிவு பெண்கள் மனத்தில் பொறி கிளப்புகிறது. உலகின் பல்வேறு தீவிரவாதத் தற்கொலைப் படைகளில் பெரும்பான்மை பெண்களாம். மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராயிட் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மனித இனவியல் கழக மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்து இது.
அறியா விடலைப் பருவத்தில் கற்பு இழப்பு, கனவு கண்ட திருமண வாழ்க்கை அமையாத ஏமாற்றத்தால் விவாகரத்து, எதிரிகளால் கணவர் அல்லது சகோதரர்கள் கொலையுண்ட பரிதவிப்பு என ஏதேனும் ஒரு காரணம் போதும். பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுதல் எளிதாம்.
(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).