மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தில் மழையின் வேகம் தணிந்தது: சாவு எண்ணிக்கை 157 ஆக உயர்வு
மும்பை, ஜூன் 26: கடந்த சில நாட்களாக பெரும் பொருள் சேதத்தையும், உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்திய மழையின் தீவிரம் திங்கள்கிழமை குறைந்தது. இதையடுத்து, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன. இருப்பினும், அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களான கட்ச் மற்றும் ஜாம்நகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை திங்கள்கிழமை பெய்தது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மிகவும் கனமழை இன்றும் (செவ்வாய்க்கிழமை) பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கனமழை, வெள்ளத்துக்கு 4 மாநிலங்களிலும் பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.
புணே அருகில் தக்லி-ஹாஜி என்ற கிராமத்தில், 6 முதல் 8 வயது நிரம்பிய சிறார்கள் 4 பேர் மழை நீரால் நிரம்பியிருந்த சாக்கடைப் பள்ளத்தில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
கர்நாடகத்தில் தண்ணீர்பாவி கடலோரம் மூழ்கிய சரக்குக் கப்பலின் மாலுமி சடலம் கரையோரம் ஒதுங்கியது. இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2 நாள்களில் பெய்த மழைக்கு கர்நாடகத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்; 4500 பேர் வீடிழந்துள்ளனர் என அம் மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். கேரளத்தில் 59 பேரும் ஆந்திரத்தில் 37 பேரும் மகாராஷ்டிரத்தில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளிலும், தாற்காலிக முகாம்களிலும் அதிகாரிகள் முழுவீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.