ஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்?
மதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.
மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
ஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.
மேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.
ஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.
வேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.
அரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.