கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
![]() |
![]() |
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர் |
இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.
இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.