தமிழகத்தில் இணையதளம் மூலம் கல்வி, மருத்துவ வசதி
தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் இணைய தள வசதி மற்றும் மருத்துவத் திட்டங்களுக்கு இன்டெல் நிறுவனத்தின் தலைவர் கிரையக் ஆர்.பேர்ரைட்டு டன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி. உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
சென்னை, செப். 4:தமிழகத்தில் இணையதளம் மூலம் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்க இன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத் தலைவர் கிரெய்க் ஆர் பாரெட் தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை திங்கள்கிழமை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
தமிழகத்தில் உள்ள 1,800 அரசு பள்ளிகளில் இணையதளம் மூலமான கல்வி வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பயனடைவதோடு, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும் மேம்படும்.
முதல் கட்டமாக கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு நகரங்களில் உள்ள 50 பள்ளிகளுக்கு இணையதள வசதியை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, இன்டெல் நிறுவனம் 500 கம்ப்யூட்டர்களை அரசு பள்ளிகளுக்கு இலவசமாக அளிக்கவும் முன்வந்துள்ளது என்றார் கிரெய்க்.
முதல்வருடனான சந்திப்பு குறித்து இன்டெல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசும், இன்டெல் நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் இணையதள இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. பின்னர் படிப்படியாக அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இன்டர்நெட் மூலமான இணைப்பை விரிவுபடுத்தி, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஆண்டுதோறும் 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்டெல் நிறுவனம் பயிற்சியளிக்கும். அத்துடன் டிடிஇஎஸ் திட்டத்தின் கீழ் கூடுதலாக 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
டெலிமெடிசின் திட்டத்தின் ஒரு கட்டமாக இன்டெல் நிறுவனம் திண்டிவனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சோதனை அடிப்படையில் உருவாக்கி குறைந்த கட்டணத்தில் செயல்படுத்த உள்ளது. இருதய சிகிச்சை மற்றும் பார்வை சார்ந்த நோய்களுக்கு இம்மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வசிக்கும் 2.85 லட்சம் மக்கள் மருத்துவ வசதி பெறுவர்.
முதல்வருடனான சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.