காவிரி போல விசுவரூபம் எடுக்கும் பெரியாறு அணைப் பிரச்சினை
பா. ஜெகதீசன்
சென்னை, நவ. 24: தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே கடந்த 27 ஆண்டுகளாக இருந்து வரும் “முல்லைப் பெரியாறு அணைப்’ பிரச்சினை தற்போது பூதாகரமாக விசுவரூபம் எடுத்துள்ளது.
“காவிரி பிரச்சினையில் கர்நாடகம் கையாளுவதைப் போன்ற அணுகுமுறையை கேரளமும் பின்பற்றத் தொடங்கி உள்ளதோ? இதுவும் தீராத பிரச்சினையாக உருமாறி விடுமோ?’ என்கிற அச்சம் தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் எழுந்துள்ளது.
1979-ல் இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக சில அச்சங்களை கேரள அரசு எழுப்பியது. இதையடுத்து, அணையை மத்திய நீர்வளக் குழுமம் ஆய்வு செய்து, அணையைப் பலப்படுத்த 3 வகையான பணிகளைத் தமிழகத்துக்குப் பரிந்துரைத்தது.
தாற்காலிக ஏற்பாடு: அதன்பேரில் அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவான 152 அடியில் இருந்து தாற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தக்க பாதுகாப்பு -பலப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்து முடித்த பிறகு, நீர்மட்டத்தை 145 அடிக்கு உயர்த்தலாம் எனவும் குழுமம் பரிந்துரைத்தது.
பேபி டேம் எனப்படும் சிற்றணையைப் பலப்படுத்துதல், கைப்பிடிச் சுவற்றை 2 அடி உயர்த்துவது ஆகிய பணிகளைக் கேரள அரசு எதிர்த்ததால், முடிக்க இயலவில்லை.
வழக்குகள் வந்தன: இதர பலப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிவு அடைந்தாலும், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலேயே வைத்திருக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி கேரளத்தைச் சேர்ந்த சிலரும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் (கேரளம் மற்றும் சென்னை) உயர் நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். பின்னர் இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
முதல்வர்கள் பேச்சு வார்த்தை: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்பேரில், 19.5.2000-ல் தமிழக -கேரள முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. அக்கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயவும், தக்க பரிந்துரைகளை அளிக்கவும், வல்லுநர் குழுவை மத்திய அரசு நியமித்தது.
அக்குழு 2001 மார்ச்சில் அரசுக்கு அறிக்கை அளித்தது. “சிற்றணையைப் பலப்படுத்தும் பணி முடிந்த பிறகு, பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி உயரத்துக்கு நீர் மட்டத்தை உயர்த்துவது பற்றி ஆய்வு செய்யலாம். அதற்கு முதற்கட்டமாக நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என அக்குழு பரிந்துரை செய்தது.
இப்பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசிடம் அப்போதே தமிழகம் தெரிவித்தது.
இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்து 27.2.2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தீர்ப்பு உதவும் என பாசனத் துறை வல்லுநர்களும், விவசாயிகளும் நம்பினர்.
முரண்பட்ட கருத்து: ஆனால், அந்நம்பிக்கை பொய்த்துப் போகும் வகையில் கேரளத்தின் செயல்கள் தொடர்ந்தன.
“பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்பாகவே கேரள முதல்வர் அச்சுதானந்தன் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, பேச்சு வார்த்தை நடத்த தில்லி செல்கிறோம்’ என முதல்வர் கருணாநிதி தெரிவித்து, தமிழகத்தின் நிலையை வெளிப்படுத்தி உள்ளார்.
அச்சுதானந்தனும், அவரது அமைச்சரவை சகாக்களும் அணையைப் பார்வையிட்டு, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பேச்சுக்கே இடம் இல்லை என அறிவித்தனர்.
அணையைப் பார்வையிட தமிழகப் பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் சென்றபோது அவருக்கு எதிராக கேரளத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு கேரள காவல் துறை பாதுகாப்பு அளித்தது.
காலம் தாழ்த்தும் நடவடிக்கை: புதிய அணை கட்டுவதே பிரச்சினைக்குத் தீர்வு ஆகும் என அச்சுதானந்தன் கூறி உள்ளார். இது பிரச்சினையை மேலும் காலம் தாழ்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று தமிழக விவசாயிகளும், பாசனத் துறை வல்லுநர்களும் கருதுகின்றனர்.
ஜெ., காங். கருத்து: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தான் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
“மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கேரள அரசு செயல்படுகிறது’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரச்சினைக்குத் தீர்வு காண தில்லியில் அடுத்த சில நாள்களில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள சூழ்நிலைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடுமோ என்கிற அச்சம் இந்த அணையின் பாசன நீரை நம்பி உள்ள விவசாயிகள், குடிநீரை எதிர்நோக்கி உள்ள மக்கள் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது.