சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை
![]() |
![]() |
ஜான் ஜாவீத் உறுப்பினர் ஒருவர் |
சூடானின் டார்பூரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.
இவற்றில் ஒன்று சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஹரூனுக்கு எதிரானதாகும்.
அவர் மீதான குற்றச்சாட்டின்படி, அவர், ஜன்ஜவீட் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கினார் என்றும், தனிப்பட்ட முறையில் ஆயுத உதவி செய்தார் என்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக அவர்களைத் தூண்டினார் என்று கூறப்படுகிறது.
யுத்த உபாயத்தின் ஒரு பாகமாக பாலியல் வல்லுறவையும் மற்றும் சித்திரவதையையும் வளர்த்ததாகக் கூறப்படும் ஜன்ஜவீட் தளபதிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அலி குசாயிப் அவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜன்ஜவீட் அமைப்புடன் தமது அமைச்சர்கள் எவருக்கும் இந்த விதமான தொடர்பும் கிடையாது என்று சூடானிய அரசாங்கம் கூறுகிறது.
இந்த நீதிமன்றத்துக்கு எந்த ஒரு சந்தேக நபரையும் அது கையளிக்காது என்றும் சூடானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது
அம்னெஸ்டி அமைப்பின் புகாரை சீனாவும் ரஷியாவும் மறுத்துள்ளன
![]() |
![]() |
அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம் |
சூடானின் டார்பூர், பகுதிக்கு ஆயுதங்களைக் கொடுக்கக் கூடாது என்ற ஐ நாவின் தடையை மீறி, சீனாவும், ரஷ்யாவும் சூடானிய அரசுக்கு ஆயுதங்களை அளித்தன என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அபயஸ்தாபனமான அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், கூறியிருந்த புகாரை சீனாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளன.
டார்பூரில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தத்தக்க ராணுவ விமானங்களை சூடான் அரசுக்கும், பிற ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கம் இந்நாடுகள் அளித்ததாக அம்னெஸ்ட்டி கூறியுள்ளது.
ஆனால் சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சுக்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ நா தீர்மானங்களை தத்தம் நாடுகள் கடைபிடிப்பதாக கூறியுள்ளன.
ஐ நாவுக்கான சூடானிய தூதரும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். திரித்துக் கூறுவதையே வரலாராகக் கொண்ட, ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தவறான அறிக்கை இது என்று அவர் இதை வர்ணித்துள்ளார்.