தேவை, அதிக ஒதுக்கீடு…!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றிய முக்கியமான திட்டங்களில் ஒன்று தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் எல்லோருக்கும் ஆண்டில் குறைந்தது நூறு நாள்களாவது வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
ஒருபுறம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய தொழிலதிபர்களுக்கும் சாதகமாக மத்திய அரசின் திட்டங்களும் செயல்பாடுகளும் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தனது முதல் பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்ட திட்டம் இது. மற்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் முறையாக நிறைவேறுகிறதோ இல்லையோ, தமிழகத்தைப் பொருத்தவரை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் தரப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மட்டுமே காணப்பட்ட சேரிகள் இப்போது எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் பெருகி வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதும், விவசாயத்தை மட்டும் நம்பி உயிர் வாழ முடியாது என்கிற நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டதும்தான். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்டம்.
முதல்கட்டமாக,
- விழுப்புரம்,
- கடலூர்,
- திருவண்ணாமலை,
- திண்டுக்கல்,
- நாகப்பட்டினம்,
- சிவகங்கை
ஆகிய மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு
- தஞ்சாவூர்,
- திருவாரூர்,
- திருநெல்வேலி மற்றும்
- கரூர்
ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டது. கடந்த ஓர் ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக சுமார் 256 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமப்புறத் தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 80 என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், இந்தக் கூலித்தொகை குறைந்தது ஆண்டில் நூறு நாள்களுக்காவது ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிடைக்கும்விதத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இந்தத் திட்டம் முறையாக அமல்படுத்தப்படுமானால், தமிழகத்திலுள்ள எல்லா கிராமங்களும் மத்திய மற்றும் மாநில அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் மூலம் அதிகரித்த வேலைவாய்ப்பையும் கூடுதல் வருமானத்தையும் அடைய முடியும்.
இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 12,000 கோடி ரூபாய். இதில் தமிழகம், மத்திய அரசில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி எத்தனை கோடி ரூபாய்கள் பெறப்போகிறது என்பதைப் பொருத்துதான் நமது மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் வெற்றி அமையும்.
இந்தத் திட்டம் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வருவதால், அமைச்சர் மு.க. ஸ்டாலினின் நேரடிப் பார்வையில் நிறைவேற்றப்படுகிறது. அவருக்கு அமைந்திருக்கும் ஊரக வளர்ச்சித் துறை செயலர் அஷோக்வர்தன் ஷெட்டி அனுபவசாலி மட்டுமல்ல, திறமைசாலியும்கூட என்பது ஊரறிந்த உண்மை. இவர்கள் இருவரும் முயற்சி செய்தால் மத்திய அரசிடமிருந்து கணிசமான ஒதுக்கீடு பெற்று மிகவும் வெற்றிகரமாக இந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுமைக்கும் விரிவாக்கம் செய்ய முடியும்.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பைப் பெருக்குவதன் மூலம், தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்க முடியும் என்பதுடன், நகர்ப்புறம் நோக்கி வேலைவாய்ப்பு தேடி குடிபெயர்வோரின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தத் திட்டத்தில் தனிக் கவனம் செலுத்துகிறார் என்பதும், கிராமப்புற வளர்ச்சித்துறை செயலர் அஷோக்வர்தன் ஷெட்டி இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதிசெய்ய கண்காணிப்புக் குழுக்களை அமைத்துச் செயல்படுகிறார் என்பதும் வரவேற்கப்பட வேண்டிய செய்திகள்.
இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். அப்படி அமல்படுத்த மத்திய அரசிடமிருந்து கூடுதல் ஒதுக்கீடு பெற வேண்டும். இந்தத் திட்டத்தை முறையாக அமல்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டி, மாநில அரசின் திட்டத்திற்குக் கைகொடுத்து உதவ வேண்டும்.
—————————————————————————————
சேரிகளும், சட்டம் ஒழுங்கும்!
இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு நடத்திய ஓர் ஆய்வின்படி, ஒருவேளைச் சோற்றுக்காக அவதிப்படும் மக்கள்தான் சேரிவாசிகளும் தெருவோரவாசிகளும் என்பது திடுக்கிட வைக்கும் செய்தி. அதே ஆய்வின்படி, 45 சதவிகித பெண்கள் ரத்தசோகையால் அவதிப்படுவதாகவும் அதில் சர்க்கரை நோயாளிகள் பலர் இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இப்படி சேரிகளிலும் தெருவோரங்களிலும் வாழும் பலரும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்பதும், நிரந்தரமான வேலை எதுவும் இல்லாதவர்கள் என்பதும் அதைவிட அதிர்ச்சி தரும் செய்தி.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னை, மும்பை, கோல்கத்தா மற்றும் தில்லி ஆகிய நான்கு பெருநகரங்களில் மட்டும் காணப்பட்ட சேரிகள் இப்போது மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் தாலுகா தலைநகரம்வரை உருவாகி வருகின்றன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் போனதும், பெருகிவரும் மக்கள்தொகையால், குடும்பத்தினர் அனைவருக்கும் போதுமானதாக விவசாய நிலங்கள் இல்லாமல் போனதும்தான் இந்த அவல நிலைக்கு அடிப்படைக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
ஒருபுறம், தனிமனித வருமானமும் தேசிய வருமானமும் அதிகரித்து வருகின்றன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அன்னியச் செலாவணி இருப்பு 200 பில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டது என்றும், அன்னிய முதலீடு எப்போதும் இல்லாத அளவுக்கு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது என்றும் அரசாங்கம் சந்தோஷப்படுவது ஒருபுறம். நகர்ப்புறங்களில் தகவல் தொடர்புத்துறையின் வளர்ச்சியால், படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரித்திருப்பதும் அவர்களது வருமானம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகரித்திருப்பதும் மற்றொரு புறம்.
அதிக வருமானம், பெருகிவரும் வேலைவாய்ப்பு, உயர்ந்துவிட்ட வாழ்க்கைத்தரம் என்று முன்னேற்றப் பாதையில் இந்தியா வளர்ந்து கொண்டிருப்பது சந்தோஷத்தைத் தருகிறது என்றாலும், இந்த மாற்றங்கள் எல்லாம் சமுதாயத்தின் வெறும் முப்பது சதவிகித மக்களைத்தான் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சென்றடைகின்றன என்பதுதான் வருத்தமான விஷயம். அசுர வேக வளர்ச்சி முப்பது சதவிகிதத்தினரை மகிழ்விக்கும் அதேநேரத்தில், எழுபது சதவிகிதத்தினர் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல், அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது.
ஒருவேளைச் சோறுகூடக் கிடைக்காமல் இருப்பது அவர்கள் தலையெழுத்து என்று விட்டுவிட முடியாது. காரணம், அந்த எழுபது சதவிகித மக்களின் அதிருப்தி அதிகரிக்கும்போது, வசதிகளை அனுபவிக்கும் முப்பது சதவிகிதத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் சரித்திரம் நமக்குத் தொடர்ந்து சொல்லிக் கொடுக்கும் பாடம்.
சமீபகாலமாக, நகர்ப்புறங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதும் திருட்டு மற்றும் கொள்ளைகள் அதிகரித்திருப்பதும் இந்தப் பிரச்னையின் விளைவுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதற்கு ஒரு முன்னோடி என்றுதான் நாம் கொள்ள வேண்டும். சேரிகளில் வாழும் மக்கள், தங்கள் கண் முன்னால் பல்வேறு நுகர்பொருள்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பதைப் பார்க்கும்போதும், தொலைக்காட்சிகளில் பணக்காரத்தனம் பட்டவர்த்தனமாகப் பறைசாற்றப்படுவதைக் காணும்போதும் உள்ளுணர்வு அவர்களைத் தவறு செய்யத் தூண்டுவது சகஜம்தான்.
நகர்ப்புற மக்களின் ஏழ்மை என்பது சட்ட ஒழுங்குப் பிரச்னையுடன் இரண்டறக் கலந்த ஒன்று. சேரிகளிலிருந்துதான் ரௌடிகளும் தாதாக்களும் சமூக விரோதிகளும் உருவாகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள டாக்டர் பட்டம் தேவையில்லை. காவல்துறையினர் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முடியாமல் போனால் அதற்குக் காரணம் அவர்கள் மட்டுமல்ல. அதற்கு நமது ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!
—————————————————————————————